இந்தியாவை பிளவுபடுத்த இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பிஹாரின் நவாதா மற்றும் மேற்குவங்கத்தின் கூச் பெகர், ஜல்பைகுரி உள்ளிட்ட பகுதிகளில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் பிஹாரில் காட்டாட்சி நடைபெற்றது. பெண்கள் வெளியே செல்ல அஞ்சினர். முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடியின் அதிதீவிர நடவடிக்கைகளால் காட்டாட்சியில் இருந்து பிஹார் விடுதலை அடைந்தது.
பிஹாரின் நவாதா நகரில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி, எல்ஜேபி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: பிடிஐமத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ரேஷனில் இலவசமாக உணவு தானியம் வழங்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தில் இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தோம். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளோம். முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இண்டியா கூட்டணிக்கு கொள்கையோ, லட்சியமோ கிடையாது. அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஊழலுக்கு அடிமையாக உள்ளனர். நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றனர். தென்னிந்தியாவை தனிநாடாக பிரிப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாக பேசுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோருகிறார். அவர் இதுவரை பிரச்சாரத்துக்கே செல்லவில்லை. மேற்குவங்கத்தை ஆட்சி செய்யும் திரிணமூல் காங்கிரஸ் ஊழலில் திளைக்கிறது. வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது. எந்தவொரு அரசு திட்டத்துக்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மாநில அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆளும் திரிணமூல் அரசுக்கு எதிராக சந்தேஷ்காலி பெண்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அங்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு காரணமான அனைவரும் சிறையில் தள்ளப்படுவார்கள்.
மேற்குவங்கத்தில் விசாரணை நடத்த செல்லும் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது சமூக விரோத கும்பல்கள் தாக்குதல் நடத்துகின்றன. முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. நமது நாட்டில் சுமார் 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியை பார்த்தோம். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியில் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.
தற்போதைய மக்களவைத் தேர்தல் மத்தியில் வலுவான ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய தேர்தல். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் பேசும்போது, பிரதமர் மோடி இதர மாநிலங்களில் காஷ்மீர் குறித்து பேச மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆனால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவுக்கு பதிலாக 371 என்று அவர் தவறுதலாக கூறியிருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸை பொறுத்தவரை காஷ்மீரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எங்களைப் பொறுத்த வரை காஷ்மீர் இந்தியாவின் தலை ஆகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.