ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் மோதல் – தேச நலனுக்கு நன்மை பயக்கட்டும்

டைம்ஸ் நவ் தொலைகாட்சி அருணாப் கோஷ்வாமிக்கும் என்.டி.டி.வி யின் பர்காதத்திற்கும் இடையேயான மோதல் வெட்ட வெளியில் வெடித்துக் கிளம்பி இருக்கிறது.

கடந்த வாரம் தனது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருணாப், காஷ்மீரில் ராணுவ அத்துமீறலை மட்டுமே பேசி, பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் சில ஊடகவியலாளர்களைக் குறிவைத்து, ‘இந்திய எதிர்ப்பு நிலையை சிலர் கையில் எடுக்கும்போது, பயங்கரவாதிகளை சிங்கமாக சித்தரிக்கும்போது, பாகிஸ்தான் ஆதரவு, பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டோடு இந்தியாவை உடைக்கும் வகையில் பொய்களை அரங்கேற்றும்போது, அவர்களை நாம் எப்படிக் கையாள வேண்டும்?’  என்று காட்டமாக கேட்க, தன்னைத் தான் அவர் வம்புக்கு இழுக்கிறார் என்று புரிந்துகொண்டார் பர்காதத்,

‘ஒரு குறிப்பிட்ட ஊடகவியலாளர் வேறு சில ஊடகங்களை மூடும்படிக் கோருவதையும் அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். ஏஜெண்டுகள் என்று கூறுவதையும் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளர்கள், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதையும் சற்றே கற்பனை செய்து பாருங்கள். என்னால் இதை ஏற்க முடியவில்லை. இவர் இருக்கும் அதே ஊடகத்துறையில் நானும் இருப்பதால் வெட்கப்படுகிறேன்’ என  பர்காதத் தனது முகநூலில் கருத்து வெளியிட, வெடித்துக் கிளம்பியது இவர்களுக்கு இடையேயான மோதல்.

அருணாப் யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடாதபோது, பர்காதத்திற்கு ஏன் இவ்வளவு கோபம் வர வேண்டும்?ndtvi-timesnow

உண்மை இதுதான், பர்காதத்திற்கு இது சுட்டுவிட்டது. தன்னைத்தான் அவர் சொல்கிறார் என புரிந்துவிட்டது. எனவே தான் அவ்வளவு காட்டமாக அவர் விமர்சித்துள்ளார். அருணாப் அப்படிப்பட்ட ஊடகங்களை மூட வேண்டும் என்றோ, தடை செய்ய வேண்டும் என்றோ கூறவில்லை. ஆனாலும் பர்க்காதத், அருணாப் அப்படிக்கூறியது போல கூப்பாடு போட்டதன் காரணம் அவரின் சாம்ராஜ்யத்தில் யாரோ கைவைப்பதாகத் தோன்றியிருக்க வேண்டும். தனக்கு ஆதரவாக இதர ஊடகவியலாளர்கள் வர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துப் பார்த்தார். ஆனால், பெரிதாக ஏதும் நடந்துவிடவில்லை.

பிரதான ஊடகத்தளத்தில் இருந்து, சமூக ஊடகத்தளதிற்கு வந்துவிட்ட இப்பிரச்சினையில் சமூக ஊடகங்கள்  பர்காதத்தை பிடி பிடி என பிடித்துவிட்டன. இதுபற்றி பி.பி.சி. இந்தியாவின் முன்னாள் இந்திய ஆசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவத்ஸவா, ‘இது நீண்ட கால போட்டியின் விளைவு. காங்கிரஸ் கூட்டணி (UPA)  இரண்டாம் ஆட்சியின்போது காங்கிரசின் ஊழல்களுக்கு பர்கா வக்காலத்து வாங்கியபோதே என்.டி.டி.வி, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. மும்பை ஜிகாதி தாக்குதலை பர்கா ஒலிபரப்பிய விதமும் நீராராடியா டேப் விவகாரத்தில் சிக்கிக்கொண்ட விவகாரமும் என்.டி.டி.வி.க்கு பாதகமாயிற்று. அப்போது, என்.டி.டி.வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்வந்த டைம்ஸ் நவ், இன்றும் காங்கிரஸின் தவறுகளை விமர்சித்து வருவதால் மோடிக்கு ஆதரவானதாகப் பார்க்கப்படுவதாகவும் அதன் காரணமாக அதன் நேயர்கள் எண்ணிக்கை நன்கு கூடிவிட்டதாகவும் கருத்துத் தெரிவித்து கட்டுரை எழுதியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே, ஊடகவியலாளர்களை நீதிபதிகள் போன்று சமூகம் பார்த்த காலங்கள் உண்டு என்றும் செய்திகளில் போட்டி என்று வந்தபின் பரபரப்பினால் வந்த விளைவு தான் இது. இது உண்மைத்தன்மைக்கு வந்த சோதனை. சமூக ஊடகங்களில் பதிவு செய்பவர்களுக்கு பொறுப்பேதும் இல்லை; ஆனால் பிரதான ஊடகங்களில் பதிவு செய்பவர்களுக்கு பொறுப்பு உள்ளது. செய்தி அளிப்பவர்களே செய்திகளாக மாறும்போது நாம் ஆபத்தான காலத்தில் இருப்பதாக ஆகிவிடுகிறது  என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தெளிவான மோடி எதிர்ப்பாளர்கள் பர்காத்திற்கு ஆதரவாகவும், தெளிவான மோடி ஆதரவாளர்கள் அருணாப்பிற்கு ஆதரவாகவும் உள்ள நிலையில் பர்காத்ததின் ஊடகவியலாளர்களை கேள்வி கேட்பதா என்ற அராஜகக் குரலுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது திருப்தி அளிக்கிறது. பெரும்பாலான நடுநிலையாளர்கள், ராணுவத்தின் சேவையை கொச்சைப்படுத்துவதை விரும்பவில்லை என்பதும் இருபக்கத்து செய்திகளையும் நியாயமாக வெளியிட வேண்டும் என்று இப்போது கூறும் பர்கா, என்றைக்காவது மோடி தரப்பு நியாயத்தை பேசியுள்ளாரா என்றும் கேட்கிறார்கள். தனக்கு ஆதரவு தேடி சமூக ஊடகத்திற்கு வந்த பர்க்காத்த்திற்க்கு இது ஒரு நல்ல பாடம்.

அவர் போன்ற ஊடகவியலுக்கு ஆதரவாக மக்கள் இல்லை என்பதை பிரனாய் ராய் காலத்தில் முதல் இடத்தில் இருந்த என்.டி.டி.வி, ராஜ்தீப் சர்தேசாய் காலத்தில் சறுக்கியதையும் தொடர்ந்து பர்க்காதத்தின் காலத்தில் சறுக்கோ சறுக்கு என்று சறுக்கி இருப்பதையும் கொண்டு நன்கு உணர முடியும். BARC எனப்படும்  Broadcast Audience Research Council of India  ஆய்வின்படி 2016ன் 28 வது வாரத்தில், கடந்த ஜூலை கடைசிவாரம், 215 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்த டைம்ஸ் நவ் மேலும் முன்னேறி 262 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாகவும் இரண்டாவதாக இடத்தில் 130 புள்ளிகளுடன் என்.டி.டி.வி இருப்பதாகவும் அறிவித்துள்ளது. செய்தி நேரம்  என்று வரும் போது தூர்தர்ஷன் ஆங்கிலச் செய்திகளுக்கு டைம்ஸ் நவ்வைவிட மூன்று மடங்கு அதிக நேயர்கள் உள்ளனர் என்றும் (ஆம், முதல் இடத்தில் இருப்பது டி.டி. தான்) இதில் என்.டி.டி.வி ஏழாவது இடத்தைத் தான் பெறுகிறது என்றும் ஏப்ரல் மாத ஆய்வுகள் கூறுகின்றன. இரவு 9 மணிக்கு நடத்தப்பட்டுவந்த பர்காதத் விவாத நிகழ்ச்சி தற்போது எட்டு மணிக்கு நடத்தப்படுகிறது. என்.டி.டி.வி.யின் வீழ்ச்சிக்குக் காரணம், அதன் கண்மூடித்தனமான மோடி வெறுப்பு அரசியலும், பிரிவினை பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடும்தான்.

நம்மைப் பொறுத்த அளவில், ஊழலுக்கு எதிரான டைம்ஸ் நவ்வின் நிலைப்பாடு,  பதன்கோடு தாக்குதலில் ராணுவத்திற்கு ஆதரவாகப் பேசியது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) விவகாரத்தில் தேசப் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசியவர்களை வன்மையாகக் கண்டித்தது முதல் காஷ்மீர் பிரச்சினையில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக தைரியமாக கருத்துக்களை முன் வைத்து வருவது ஆகிய செயல்கள் அருணாப் தன்னுள் உறைந்திருக்கும் தேசபக்தியைத்தான் வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. மக்களை ஏமாற்றி வந்த இடதுசாரி மதசார்பின்மை கொள்கையை தோலுரிக்கும் அவர் செயல், ஊடகங்களை நெறிப்படுத்த ஏதுவாகுமானால் அவற்றை வரவேற்பதே நமது முதல் கடமை.