நமது பதக்கக் கனவு நனவாக…

கடந்த ஒரு வார காலமாக ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வருகின்றன. தங்கம் உள்பட அதிகமான பதக்கங்களை பெற்று அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்தடுத்து பதக்கங்களைப் பெற்றுள்ளன. இந்த நாடுகள் பதக்கங்களைப் பெற்றதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் சின்னஞ் சிறிய ஹங்கேரி, தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளும் பதக்கங்களை வென்று குவித்து வருவது தான் ஆச்சரியம். பிஜி ஒரு சின்னஞ் சிறிய நாடு. நம்ம ஊர் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை சேர்ந்தால் என்ன அளவு வருமோ அந்த அளவுதான் பிஜி என்பது. அவர்கள் கூட ஒரு தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். ஆனால் 125 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதம் ஒரு பதக்கம் கூட (அச்சேறும் வரை) பெறவில்லையே என்று வருத்தம் தோன்றுகிறது.

வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தந்த விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் கொடுக்கிறார்கள். இதில் அரசியலுக்கு இடமிருக்கக் கூடாது.

நம் நாட்டிலோ பல பள்ளிகளில் விளையாட்டுகளுக்கான மைதானங்கள் குறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பி.டி. வகுப்பு என்று ஒன்றிருக்கும். அதில் அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் ஈடுபடுவர். இப்போது பி.டி. வகுப்புகள் என்பதெல்லாம் குறைந்து வருகிறது. பள்ளி முதல்வர், தலைமையாசிரியர் ஆகியோருக்கு பத்தாவதிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் நூறு சதவீத தேர்ச்சி ஒன்றே குறிக்கோளாக இருந்து வருகிறது.

நம் தேசத்தில் ஏராளமான வனவாசி கிராமங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நல்ல உடல் சக்தி மிகுந்தவர்கள். அவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகள் அளித்தால் வில்வித்தை, தடகளப் போட்டிகள், மல்யுத்தம் போன்றவற்றில் அவர்கள் சாதனை படைக்கலாம்.

மத்திய, மாநில அரசுகள் கண் திறக்குமா?