அறநிலையத்துறைக்கு உத்தரவு

‘ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும், அசையா சொத்துகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், பல கோயில்களில் இவை காணாமல் போனதால், நீதிமன்ற உத்தரவுப்படிஇந்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில், பல கோயில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரியவந்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் மறைக்கின்றனர். எனவே, இதை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ், தொல்லியல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கட்ராமன் என்பவர் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், ‘எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன, இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க என்ன வழி? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.