அருணாச்சல பிரதேசம் பற்றி பொய் செய்தி நியூஸ்கிளிக் மீது போலீஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, கைது செய்யப்பட்டுள்ள, ‘நியூஸ்கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா, சீனாவிடம் பணம் பெற்று, காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை பிரச்னைக்குரிய பகுதிகள் என பொய் செய்தி பரப்பியதாக புதுடில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடில்லியை தலைமையிடமாக வைத்து நியூஸ்கிளிக் இணையதள ஊடக நிறுவனம் செயல்படுகிறத. சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, இந்த இணையதளத்துக்கு அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்காம் பெருந் தொகை கொடுத்த தாக அமெரிக்காவின், ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் சமீபத்தில் ஆய்வு கட்டுரை வெளியிட்டது.

இதை தொடர்ந்து நியூஸ்கிளிக் அலுவலகம் மற்றும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகள் உட்பட புதுடில்லியில் 88 இடங்களில், புதுடில்லி சிறப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

அதன் பின், நியூஸ்கிளிக் இணையதள நிறுவனரும், பத்திரிகையாளருமான பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை, யு.ஏ.பி.ஏ., எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில், போலீசார் தாக்கல் செய்துள்ள, ‘ரிமாண்ட்’ மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரபிர் புர்கயஸ்தா, தொழிலதிபர் நெவில் ராய் சிங்காம் மற்றும் அவருக்கு சொந்தமாக ஷாங்காயில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் சீன ஊழியர்கள் இடையே பல்வேறு இ – மெயில் தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

அவற்றில், காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகள் அல்ல என்பதை நிறுவ, அவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது உறுதியாகி உள்ளது. நம் நாட்டின் வடக்கு எல்லைகளை சீனாவுடன் இணைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் பகுதிகள் அல்ல என வரைபடத்தில் காட்டுவது, நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடும் செயல்.

மேலும், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கவுதம் நாவ்லக்கா என்பவர், இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் குலாம் நபி பாய் என்பவருடன் இணைந்து, நம் நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டியுள்ளார்.

புர்கயஸ்தா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு, 115 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு நிதிகள் இஷ்டம் போல் குவிந்துள்ளன. அதன் உதவியுடன் அவர்கள் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை சீர்குலைக்கவும், விவசாயிகளின் போராட்டத்தை நீட்டித்து சொத்துக்களை சேதப்படுத்தவும், இந்த நிதியை பயன்படுத்தி உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் தொற்று தடுப்பு முயற்சிகளை இழிவுபடுத்தும் விதமாக இவர்கள் செய்தி பரப்பினர். கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்ற குழுவுடன் இணைந்து தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க இவர்கள் முயற்சித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் புதுடில்லி சிறப்பு பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையின் பிரதியை அளிக்கும்படி, பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் புதுடில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைனைக்கு வந்தது.

அப்போது, கைதுக்கான காரணங்களை எழுத்துப்பூர்வமான அளிக்கும்படி புர்கயஸ்தா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, ”இதுபோன்ற கோரிக்கைக்கு போலீஸ் கமிஷனரை தான் குற்றவாளி நாட வேண்டும். அது சம்பந்தமாக கமிட்டி அமைத்து கமிஷனர் முடிவு செய்வார். நேரடியாக நீதிமன்றத்தை அணுகக் கூடாது,” என, வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு எப்.ஐ.ஆர்., பிரதியை அளிக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டார்.