அயோத்தி ராம ஜென்ம பூமியில் அமைய வேண்டியது ராமர் கோயில்தான்

 

அயோத்தியில் உள்ள கரசேவைபுரத்தில் ராமர் ஆலயம் அமைக்க பாரத நாடு முழுவதும் கிராம, நகரப் பகுதிகளில் இருந்து ராமநாமம் பொறித்த செங்கற்களை மக்கள் அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.  மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் இருந்தும் செங்கற்கள் வந்துள்ளது. அதை பாதுகாப்பாக கரசேவைபுரத்தில் வைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மார்பிள் கற்கள் ஆலயம் கட்டுவதற்காக வந்து கிட்டத்தட்ட அறுபது சதவீத பணிகள் வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டு தயாராக உள்ளது.

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை (அகில பாரத துறவிகள் அமைப்பு) தெளிவாக அறிவித்துள்ளனர்: நீதிமன்றம் நியமித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ராம ஜென்ம பூமியில் ஆலயம் தான் இருந்தது. அதற்கான தடயங்கள் தெளிவாக உள்ளது என நீதிமன்றத்திற்கே ஆதாரத்துடன் கொடுத்துள்ளனர்.

உள்ளூர் முஸ்லிம் மக்களும் இங்கு ராமர் ஆலயம்தான் வரவேண்டும்; ராமர் கோயில்தான் இருந்தது என்று கூறியுள்ளனர். ஆகவே தீர்ப்பு விருப்பு வெறுப்பு இல்லாமல் வந்தால் ராமர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்றுதான் வரவேண்டும். மாறாக மதசார்பின்மை நோக்கோடு தீர்ப்பு மாறாக வரும் என்றால், மத்திய அரசு, பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் வல்லபாய் படேல் முயற்சியால் சோமநாதர் ஆலயம் அமைக்க அரசாங்கத் தீர்மானம் போடப்பட்டு மிக பிரம்மாண்டமான முறையில் சோமநாதர் கோயில் கட்டப்பட்டு பாரத நாட்டின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதே, அதே போல் அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க இன்றைய மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றி ராம ஜென்ம பூமி நியாஸ்  (அறக்கட்டளை) வசம் ஒப்படைக்க வேண்டும். ஹிந்துக்களின் பங்களிப்பில் ஆலயம் எழுப்பப்படும். இரண்டாவது, அயோத்தியில் பஞ்சகோசி பரிக்ரம (16 கி.மீ சுற்றளவு, திருவண்ணாமலை கிரிவலம் போன்று அயோத்தி வலம்) பகுதியில் இன்று வரை மசூதி இல்லை; இனியும் இப்பகுதியில் மசூதி அமைக்கக்கூடாது. மூன்றாவது, பாரத நாட்டில் எங்குமே அந்நியன், ஆக்கிரமிப்பாளன் பாபர் பெயரில் மசூதி அமையக்கூடாது என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த நிலைப்பாடு தொடர வேண்டும்.

கரசேவைபுரத்தில் தயாராக உள்ள மார்பிள் கற்கள் கொண்டு அயோத்தி ராமர் கோயில் அமைக்கப்பட உள்ளது. சிமெண்டோ இரும்போ பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் கோயில்கள் கட்டுவதற்கு பயன்படுத்திய தொழில் நுட்பத்தைக் கொண்டு கற்களை இணைத்துப் பொருத்தி கட்டப்பட உள்ளது. அடித்தளமாக உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் அனுப்பப்பட்ட செங்கற்கள் நிரப்பப்பட்டு தரை தளத்தில் ராம் லாலா – குழந்தையாக ராமரும் முதல் தளத்தில் ராம தர்பார் – பட்டாபிஷேக கோலத்தில் ராமரும் காட்சி அளிப்பார்கள்.

உடுப்பியில் போன வாரம் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயம் அமைக்கப்படும் என்று துறவிகள் அறிவித்துள்ளனர்.

அமைப்போம் ராமர் ஆலயம்!

ஏகுவோம் அயோத்தி!

பெறுவோம் ராமனருள்!!

(கட்டுரையாளர் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக அமைப்பு செயலாளர்)