‘அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் காலனிய சிந்தனையின் முதல் விடுதலை’

”அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது, காலனிய சிந்தனையில் இருந்து விடுபட்டதற்கான முதல் அடையாளம்,” என, ‘டீ காலனைசிங் இண்டியா’ நுாலின் ஆசிரியர் பல்பீர் புஞ்ச் பேசினார். ‘டீ காலனைசிங் இண்டியா’ என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் நுாலை வெளியிட, சென்னை சின்மயா மிஷன் தலைவர் மித்ரானந்தா, செஸ் பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், நீதிபதி சுவாமிநாதன் பேசுகையில், ”மதராஸ் மாகாணம் சுதந்திரத்துக்கு பின் தமிழ கமானது. மெட்ராஸ் – சென்னையானது. அதுபோல, பாபர் மசூதியாக இருந்தது ராமர் கோவிலானது. இதனால், ராமர் கோவிலும் திராவிட மாடலின் ஒரு பகுதி தான்,” என்றார். மித்ரானந்தா பேசுகையில், ”அயோத்தியில் ராமர் கோவில் இல்லாத போது அங்குள்ளோர் ஏங்கியதையும், அடிக்கல் நாட்டிய போது அவர்கள் எதிர்பார்த்ததையும், கும்பாபிஷேகத்தின் போது, நாடே பெருமிதம் அடைந்ததையும், நான் அனுபவப்பூர்வமாக அறிந்தேன். அதை, இந்த நுாலை படித்த போது உணர்ந்தேன்,” என்றார்.

நான் பத்திரிகையாளனாக இருந்த போது, ராமர் கோவில் கடந்து வந்த ஒவ்வொரு அடியையும் நன்கு அறிந்தேன். ராமர் கோவிலை இடித்து, இஸ்லாமியர்கள் தங்கள் ஆட்சியின் ஆதிக்க சின்னமாக மசூதியை கட்டினர். அங்கு மீண்டும் ராமர் கோவில் கட்ட முனைந்த போது, அங்கிருந்த முஸ்லிம்கள் முழுமனதுடன் ஏற்றனர். காந்தியும், படேலும் ஆதரித்தனர். ஆனால், காலனிய சிந்தனையில் இருந்த நேரு மறுத்தார்.

அப்போது நடந்த கருத்தரங்கில் பேசிய டால்பி என்ற போலந்துகாரர், ‘எங்கள் நாட்டை ரஷ்யா அபகரித்து, ஒரு சர்ச்சை கட்டியது. நாங்கள் சுதந்திரம் அடைந்த போது, அதை எங்கள் மத அடையாளமாக கருதாமல்; ரஷ்யாவின் ஆதிக்க அடையாளமாக கருதி முதலில் இடித்தோம்’ என்றார். அவரது பேச்சு, நேருவை அதிர்ச்சியாக்கியது. பின், அவரும் ராமர் கோவில் கட்ட சம்மதித்தார். ஆனால், காந்தியும், படேலும் இறந்த பின், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பாபர் மசூதியில், பாலராமர் சிலை இருந்தது குறித்த விசாரணையில், அங்கு காவலுக்கு இருந்த முஸ்லிம் போலீஸ், ஒரு சிறுவன் உள்ளே நுழைந்ததாகவும், அப்போது பரவிய ஒளியில், தான் மயக்கம் அடைந்ததாகவும் கூறினார். அதை, ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை.

முஸ்லிம்களுக்காக ஒரு நாட்டை உருவாக்கி, ‘பாகிஸ்தான்’ என பெயரிடவேண்டும் என்ற சிந்தனை, 1933ல் உருவானது. அவர்கள், 14 ஆண்டு களில், நம் நாட்டின் கால்பகுதியை பிரித்துச் சென்றனர். ஆனால், நாம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக, ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட போராடினோம். அதற்கு காரணம், நம்மை ஆண்டவர்கள் வெளியேறினாலும், அடிமை சிந்தனை நீடித்தது தான். தற்போது, அதிலிருந்து விடுபட்டதன் அடையாளமாக ராமர் கோவில் எழுந்துள்ளது. நாம் இனி, நம் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மோடியின் வழியில் மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.