அனுமதியின்றி காவலர்கள் பல்கலைகழகத்தில் நுழைய முடியுமா?

குடியுரிமை சட்ட திருத்த  மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிமிடத்திலிருந்தே அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்ட பின்னர், பொது மக்களை விட மாணவர்கள் தான் அதிக அளவில் போராட்டக் களத்தில் குவிந்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா இஸ்லாமியா போன்ற பல்கலைக்கழகங்கள் முன்னணியில் இருக்கின்றன.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நல்லதா, கெட்டதா, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதா, அது செல்லுமா, செல்லாதா போன்ற அனைத்துக் கேள்விகளுக்கு இனி உச்ச நீதிமன்றம் தான் பதில் அளிக்கப் போகிறதே தவிற, இந்த போராட்டங்கள் அல்ல.

இது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தப் போராட்டக் களத்தில் இருந்து இன்னொரு சட்டரீதியான “ஒரு கேள்வி” அல்லது “ஒரு சந்தேகம்” அல்லது “ஒரு விவாதம்” எழுந்துள்ளது. அது என்னவென்றால், “ஒரு கல்லூரிக்குள்ளோ அல்லது பல்கலைக்கழகத்திற்குள்ளோ அவர்கள் அனுமதியின்றி போலீசாரால்  உள்ளே நுழைய முடியுமா?” என்பதுதான் அது. உபயம்: ஜாவித் அக்தர் மற்றும் ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தரின் பேச்சுக்கள்.

சாதரணமாகவே நம்மில் பலரும், போலீசாரால் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திற்குள்  அனுமதி இன்றி நுழைய முடியாது என்று தான் பலகாலமாக நம்பி வந்திருப்போம். காரணம், நமக்கு பல திரைப்படங்கள் அவ்வாறு தான் சட்டத்தை கற்பித்துள்ளது. ஆனால் உண்மை என்ன?

குற்றவியல் விசாரணை சட்டத்தின்(CrPC) எந்த ஒரு பிரிவும் காவலர்களின் நுழைவை தடுக்கவுமில்லை, அவர்கள் அந்தந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பு தான் உள்ளே நுழைய வேண்டும் என்றும் கூறவில்லை. அவ்வளவு ஏன், தேவைப்பட்டால் காவலர்களால் வழிபாட்டுத் தலங்களில் கூட நுழைய முடியும். அது ஆலயம் ஆனாலும் சரி, சர்ச் ஆனாலும் சரி, மசூதி ஆனாலும் சரி, அல்லது ஏனைய பிற வழிபாட்டுத்தலங்கள் ஆனாலும் சரி, அனைத்துக்கும் இது பொருந்தும்.

UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு 2016-ஆம் ஆண்டு வகுத்த மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதலில் கூட “போலீசார் அனுமதி பெற்று தான் பல்கலைக்கழகங்களுக்குள்  நுழைய வேண்டும்” என்று கூறவில்லை. ஒரு பல்கலைக்கழகம் தனிப்பட்ட முறையில் அப்படி ஒரு விதிமுறைகளை வகுத்திருந்தாலும் கூட, CrPC சட்டத்தின் முன் அந்த கல்லூரி வகுத்த விதிமுறைகள் சட்டப்படி செல்லாமல் போய்விடும்.

இன்னும் விளக்க வேண்டுமென்றால், குற்றவியல் விசாரணை சட்டத்தின் ஐந்தாவது அதிகாரத்தில் 41 முதல் 60A வரை உள்ள பிரிவுகள் “போலீசாரின் கைது நடவடிக்கைகள்” பற்றி கூறுகிறது.

பிரிவு 41(1) & (2) மிகத் தெளிவாக ஒரு காவல்துறை அதிகாரியின் முன்னிலையில் கைது செய்யப்படுவதற்கு கூடிய குற்றம் நடைபெற்றால், அந்த நபரை வாரன்ட் இல்லாமல் கூட கைது செய்யும் அதிகாரம் அந்த காவல் அதிகாரிக்கு இருப்பதாக தெளிவாக விளக்குகிறது.

மேலும் பிரிவு 47(1), கைது செய்யப்பட வேண்டிய நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக காவல் அதிகாரி நம்புவதற்கு காரணம் இருந்தால், அந்த காவல் அதிகாரியின் கோரிக்கையின் பேரில் அவருக்கு அங்கு நுழைவதற்கான அனுமதியும், தேடலுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

மேலே பிரிவு 47(1)யின் படி காவல் அதிகாரிக்கு ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில், அந்த இடத்தின் கதவுகளையோ, ஜன்னல்களையோ உடைத்து காவலர்கள் உள்ளே செல்வதற்கான அதிகாரத்தை CrPCயின் 47(2) மற்றும் 47(3) ஆகிய பிரிவுகள் வழங்குகிறது.

CrPCயின் 165 மற்றும் 166வது பிரிவுகளின் படி, பிடியாணையற்ற ஒரு படியியல் குற்ற(cognizable offence) விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்ளும் போது, தேடல் வாரன்ட் இல்லாமலேயே கூட எந்தவொரு இடத்தையும் சோதனை செய்ய அவர்களை அனுமதிக்கிறது. 

மேலும், CrPCயின் 46(2)வது பிரிவு, காவலர்களின் கைது நடவடிக்கைகளை பலவந்தமாக யாராவது தடுக்க முற்பட்டால், அவர்கள் மீது காவலர்கள் பலப்பிரயோகம் செய்யவும் வழிவகை செய்கிறது.

ஆக இதிலிருந்து நாம் ஒன்று புரிந்து கொள்ளலாம், ஒரு காவல்துறை அதிகாரிக்கு ஒரு கல்லூரிக்குள்ளோ அல்லது ஒரு பல்கலைக்கழகத்திற்குள்ளோ நுழைய வேண்டிய தேவை ஏற்படுமாயின், அதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. காவல்துறையினர் முன் அனுமதி பெற்று தான் அங்கு நுழைய வேண்டும் என்ற வரைமுறையும் கிடையாது. 

(சில சமயங்களில்) போலீசார் முன் அனுமதி பெற்று  பல்கலைக்கழகத்திற்குள் நுழைவது, நடைமுறையில் உள்ளது ஒன்று என்பது உண்மைதான். ஆனால், அது சட்டப்படியான ஒரு நடைமுறை கிடையாது. அது பல்கலைக்கழகத்திற்கும், காவல்துறைக்குமான ஒரு புரிந்துணர்வு மட்டுமே. இந்த புரிந்துணர்வு காவல்துறையை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது.

காவல்துறைக்கு தேவைப்படும் சமயத்தில் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பல்கலைக்கழக ஊழியர்கள் தடுத்தால் அது தான் சட்டப்படி(இந்திய தண்டனை சட்டத்தின்(IPC) 212வது பிரிவின் படி) குற்றமாகுமே தவிற, காவல்துறையினர் உள்ளே நுழைவது குற்றமாகாது.

ஆகவே, அடுத்த முறை உங்கள் கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திற்குள்ளோ போலீசார் நுழைந்துவிட்டால், “எப்படி நுழையலாம்?” என்று அவர்கள் மீது கற்களை எறியாமல், “எதற்காக வந்துள்ளீர்கள்?” என்று குணமாக வாயால் கேட்டு, சட்டப்படி அவர்களை எதிர்கொள்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அது தான் கற்கும் கல்விக்கும் பெருமை சேர்க்கும்.

                                                                                                                                            சுஜின் சௌந்தர் ராஜன்.