அஞ்சலி: மாமாஜி காளே

திரும்பிப் பார்த்த காஞ்சி ஸ்வாமிகள்!

மாமாஜி காளே இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிக்காக நாகபுரியில் இருந்து தமிழகத்துக்கு வந்த அவர், சென்னையை மையமாக வைத்து இன்றைய வடதமிழகத்தின் பிரச்சாரக்காகப் பணியாற்றியுள்ளார் என்பதையும், காஞ்சி சங்கராச்சாரியர் ஸ்ரீ மகா பெரியவருடன் தேசிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது மணிக்கணக்கில் பேசிவிட்டு வருவார் என்பதையும் பிறர் கூற கேள்விப்பட்டுள்ளேன். நான் சங்கத்துக்கு வருவதற்கு  முன்பே மாமாஜி காளே நாகபுரி திரும்பி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அதன் பிறகு, அவரை நான் பார்த்தது ஒரே ஒருமுறை தான் என்றாலும், அது மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துவிட்டது.

1984-ஆம் ஆண்டு, சங்கத்தில் இருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு அனுப்பப்பட்டிருந்தேன். டெல்லியில் நடந்த ஒரு பைட்டக் முடிந்து ரயிலில் சென்னை காரியாலயம் வந்து சேர்ந்ததும், “மாமாஜி காளேவை காஞ்சி சங்கர மடத்துக்கு அழைத்துப் போ” என்று கட்டளை வந்தது.

காலை 10 மணிக்கு சங்கர மடம் வந்து சேர்ந்ததும் தான் தெரிந்தது. மகா பெரியவர் அன்று முழுவதும் மௌன விரதம். சாப்பிடவோ, தரிசனம் தரவோ மாட்டார் என்று தெரிய வந்தது. நாங்கள் போய் சேர்ந்த போது, மகா பெரியவர் மடத்து நந்தவனத்தில் மௌனமாக காட்சியளித்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னால் நூறு பக்தர்கள் அமைதியாக தங்கள் வேண்டுதல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். வரிசையில் கடைசியாக நின்றோம்.

அடுத்த சில நிமிடங்களில் மகா பெரியவர் அந்த இடத்தில் இருந்து எழுந்து உள்ளே செல்லத் தொடங்கினார். எனக்கோ, “மகா பெரியவருடன் மாமாஜி காளே சந்திக்க முடியாமல் போய் விடுமோ” என்று பதற்றம். “ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து வந்திருக்கிறோம். நாகபுரியில் இருந்து மாமாஜி காளே வந்திருக்கிறார்” என்று உரக்க குரல் கொடுத்தேன். அந்த இடமே அமைதியாக இருந்ததால், நான் சொன்னது மகா பெரியவரின் காதில் விழுந்தது. அந்த இடத்திலேயே நின்றுவிட்டு, திரும்பிப் பார்த்தார். எங்களை அவர் கூப்பிடுவதாக மடத்து சிப்பந்திகள் தெரிவித்தனர். மாமாஜி காளே “பிரபு… பிரபு…” என்று கூவிக் கொண்டே வரிசையில் இருந்து மகா பெரியவர் முன்னே சென்றோம். ஸ்வாமிகளிடம் தான் கூற வேண்டிய விஷயத்தைச் சொல்லிவிட்டு, தன்னை ஆசிர்வதிக்குமாறு மாமாஜி காளே கேட்டுக் கொண்டார். மகா பெரியவர் கையை உயர்த்தி ஆசிர்வதித்துவிட்டு மீண்டும் நகரத் தொடங்கினார்.

மகா பெரியவருக்கு சங்கத்தின் மீது அதீத அபிமானம் இருக்கிறது என்பதை நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், அதை அன்று தான் நேரடியாக உணர்ந்தேன்.

–         ஸ்ரீ கணேசன்,

ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரச்சாரக்