அசம் கான், மனைவி மகனுக்கு 7 ஆண்டு சிறை

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம் கான், அவரது மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அசம் கான், 75. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான இவர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

அசம் கான் மற்றும் அவரது மனைவி தசீம் பாத்திமா, அவர்களது மகன் அப்துல்லா அசமுக்கு போலியாக பிறப்பு சான்றிதழ் எடுக்க உதவியதாக, கடந்த 2019 ஜனவரியில், பா.ஜ., – எம்.எல்.ஏ., ஆகாஷ் சக்சேனா புகார் அளித்தார். அதில், ராம்பூர் நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில், அப்துல்லா அசம் பிறந்த தேதி, 1993 ஜன., 1 என்றும், மற்றொரு பிறப்பு சான்றிதழில், 1990 செப்., 30 என்றும் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு, ராம்பூரில் உள்ள எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி ஷோபித் பன்சால், அசம் கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி சார்பில் சுவார் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற அப்துல்லா அசமுக்கு, அரசு ஊழியரை தாக்கியதாக 2008ல் தொடரப்பட்ட வழக்கில், இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், உ.பி., சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.