ஃபேஸ்புக் தொடர்பால் ஏற்படும் நண்பர்கள் பற்றி?; பரதன் பதில்கள்

ருத்திராட்ச மாலையின் சிறப்பென்ன?

– சி. குமார், விழுப்புரம்

முற்றிய ருத்திராட்ச மணி மீது செப்புக் காசுகளை வைத்தால் செப்புக்காசு சுற்றும். ருத்திராட்சத்தில் மின்சக்தி உள்ளது. அதை அணிந்து கொள்வதால் அதன்மீது பட்ட தண்ணீர் நம்மீது படுவதால் உடல்நலனுக்கு நல்லது.

நான் தினசரி கோயிலுக்குச் சென்று மனமாற கடவுளைப் பிரார்த்திக்கிறேன். ஆனாலும் என் பிரச்சினைகளை தீரவில்லையே?

– சுதா முகுந்தன், பெங்களூரு

சாமி கும்பிட்டு பிரச்சினைகள் தீர்ந்தால் கடவுளின் திறமைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று பொருள். பிரச்சினை தீரவில்லை என்றால் உங்கள் திறமைகளின் மீது கடவுளுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதே பொருள்.

* கடவுள்  நம்பிக்கை என்பது ஒருவித மனநோய் என்கிறாரே திக தலைவர் கி. வீரமணி?

– கி. ரவிசங்கர், கானாடுகாத்தான்

அது சரி… ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்கும்போதும் கிறிஸ்தவ பாதிரிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் இந்த தத்துவம் மறந்து போவது ஏன்? இவர்கள் அகராதியில் கடவுள் என்றால் அது ஹிந்து கடவுள்களை மட்டுமே குறிக்கிறதோ?

ஃபேஸ்புக் தொடர்பால் ஏற்படும் நண்பர்கள் பற்றி?facebook

– பெ. சதீஷ், உடுமலைப்பேட்டை

சென்னையில் கொல்லப்பட்ட சுவாதியும் கொலைகாரன் ராம்குமாரும் நண்பர்களானது ஃபேஸ்புக் மூலம் தான். சேலத்தில் தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவுக்கும் ஃபேஸ்புக்தான் எமனாக வந்தது. குறிப்பாக பெண்கள் ஃபேஸ்புக் விவகாரத்தில் உஷாராக இருக்க வேண்டும்.

டாக்டருக்குப் படிக்கும் மாணவர்கள் ஒரு குட்டி நாயை மாடியில் இருந்து தூக்கி வீசியது பற்றி?

– காயத்ரி நாகராஜன், கோயம்புத்தூர்

தூக்கி வீசியது மட்டுமில்லை… அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்கள். இவர்களெல்லாம் நாளை டாக்டராக வந்தால்…?

* கலைஞர், வீரமணி, வை.கோ, திருமா ஆகியோர் சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?

– கு. சுரேஷ், திருப்பூர்

இந்தக் கூட்டம் ஒரு திட்டத்தை எதிர்த்தால் அது நல்லது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் வேண்டாம் என்கிற சமஸ்கிருதம் ஜெர்மனியில் 14 பல்கலைக் கழகங்களிலும் இங்கிலாந்தில் 4 பல்கலைக் கழகங்களிலும் கற்றுத்தரப்படுகிறது.

தமிழக காங்கிரசுக்கு யார் தலைவராக வர வாய்ப்பு உள்ளது?

– வே. ஆதித்யா, சங்கரன்கோவில்

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது தலைவர் பற்றிய அறிவிப்பு வந்திருக்கலாம். யார் வந்தாலும் குழப்பம்தான். மூழ்கின்ற கப்பலுக்கு யார் கேப்டனாக வந்தால் என்ன?

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.