மதுரை மீனாட்ஷி திருகல்யாணம்

மதுரை என்ற பெயரைக் கேட்டதுமே நம் எல்லோருக்கும் சவுக்கியங்களை தரும் மீனாட்சி அம்பிகையும், சுந்தரேஸ்வரர் பெருமானும், கோலாகலம் நிறைந்த சித்திரைத் திருவிழாவும் தான் கண்முன்னே நின்று அருள் ரீங்காரமிடும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி மே 11- ம் தேதிவரை இத்திருக்கோவிலில் நடைபெறவிருந்த எல்லா உற்சவங்களையும் கொரோனா காரணமாக ரத்து செய்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆறுதலான ஒரே விஷயம் ஸ்ரீ மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவம் மற்றும் ஸ்ரீ அழகர் உற்சவம் ஆகியவை மட்டும் கோயிலுக்குள்ளேயே அர்ச்சகர்களால் நடத்தப்படும் என்ற அறிவிப்புத்தான்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை மே 4-ம் தேதி திங்கள்கிழமையன்று, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஸ்வாமி சன்னதியில் வைத்து அர்ச்சகர்களால் நடத்தப்படும் (வருடா வருடம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பொதுவாக பழைய திருக்கல்யாண மண்டபம் /வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபம் போன்றவற்றில் வைத்து நடைபெற்றுக்கொன்றிருந்தது தெரிந்த விஷயம்).காலை 9.05 மணியிலிருந்து 09.29 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தத் திருக்கல்யாண நிகழ்வு, கோயில் இணையதளத்தில் காலை 8.30 மணிமுதல் 10.15 மணிவரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்கெனவேதெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சந்நிதியில் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஆகியோருக்கு அருகில் அமைந்துள்ள உற்சவமூர்த்திகளுக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடத்தப்படும். வைரஸ் தொற்று அச்சம் மற்றும் காற்றுப்பாடுகள் காரணமாக மிகக் குறைந்த அளவிலான அர்ச்சகர்களும் பணியாளர்களும் மட்டுமே மிகப் பாதுகாப்பான முறையில் இந்த திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொள்வார்கள். பக்தர்களுக்கு அனுமதியில்லை. பல நூற்றாண்டு கால வரலாற்றில், மதுரை சித்திரைத் திருவிழா தடைப்பட்டிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னரும் அவருடைய மனைவி காஞ்சனாமாலையும் குழந்தை வரம் வேண்டி நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் மூன்று வயது பெண்ணாக, இந்த பூமியில் அவதரித்தவள் ஸ்ரீ மீனாட்சி அம்மன். மீனாட்சி அம்மனுக்கு பச்சை தேவி, கற்பகவள்ளி, தடாதகை என்று பல பெயர்கள் இருந்தாலும், இந்த தேவியின் நயனங்கள் மீனைப் போன்று வெகு நேர்த்தியான வடிவம் கொண்டதால் மீனாட்சி என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சோமவார தினத்தன்று கைலாயத்தில் இருந்து மதுரை வந்த ஸ்ரீ சிவபெருமான், மீனாட்சியை திருக்கல்யாணம் முடித்தார். தேவாதி தேவர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருக்கல்யாண வைபவம் தான்,ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் கோலாகலமாக ‘மீனாட்சி திருக்கல்யாண வைபவமாக’ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெறும் வகையில் இதுநாள் வரை சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. குறிப்பாக சிவபெருமான் மீனாட்சியின் திருக்கரங்களை பிடித்த சோமவார தினத்தன்று, இந்த வருடம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதால் இந்த நாளுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இவ்வாண்டு வீட்டிலிருந்தபடியே ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை நாம் சிறப்பாக கொண்டாடி இறைஅருளுக்குப் பாத்திரமாவோம்.

ஆர் கிருஷ்ணமூர்த்தி