ஜீவனே சிவனாகும் நம்பு

நந்தலாலா கவிஞர் ஆன்மீக – தேசிய கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பவர். நேற்று அவருடைய பேட்டியின் முதல் பகுதி வெளிவந்தது. இன்று இரண்டாவது (நிறைவுப்) பகுதி. அவருடன் உரையாடுபவர் எம்ஆர். ஜம்புநாதன்.

  1. கொடுமையிலும் கொடுமை என்று எதனைக் கூறுவீர்?

பெண்கள் மனதில் குழப்பத்தை விளைவித்து அவர்களின் ஆணவத்திற்குக் கொம்பு சீவி அன்பையும் அக வாழ்வையும் சீரழிக்கும் கூட்டம்தான் மிக மிக கொடியது இன்று.

  1. அதென்ன,கவிஞர்கள் என்றாலே எல்லாவற்றையும் குறை கூறிக்கொண்டு தான் இருக்க வேண்டுமா?

மகாகவி பாரதிக்குப் பிறகு ,கவிஞர்களின் பார்வை சமூகத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் பாரதிக்கு வாய்ந்த தெளிவும் தீர்க்கமும் பிற கவிஞர்களிடம் இல்லை. பிரமிள் சொன்னது மாதிரி “கட்சித் தலைவர்கள் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்சன்படியே கனவு கண்டு கண்கள் கரியான கபோதிகள்” போல அவர்கள் இருந்தார்கள். சுய நோக்கு, சுயமதிப்பீடு இல்லை. புதுக் கவிதை வந்த பிறகு இலக்கண இலக்கிய அறிவும தேவை இல்லை என்ற எண்ணம் பலருக்கும் வந்து விட்டது. டீக் கடை பெஞ்சிலும் , நாவிதர் கடையிலும் பேசும் அரசியலை எழுத்தில்பேசும் பாமரனாக பல கவிஞர்கள் உருவானார்கள். இதைக் கம்யூனிஸ்டுகள் ஊக்கப் படுத்தினார்கள்.

  1. இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாய் ஒரு கவிதை சொல்லுங்களேன்.

வாழ்க்கை பாற்கடல்தான். கடையக் கடைய அமுதம் வரும். அமுதத்தோடு விஷமும் வரும் உன்பங்குக்கு விஷம் வந்தாலும் சிவனைப் போல வாங்கிக் குடித்து தொண்டையில் நிறுத்து. அதைத் துப்பாதே உலகம் எரியும். விழுங்காதே நெஞ்சம் எரியும். ஊருக்கெல்லாம் அமுதம் கொடுத்து விஷத்தை உந்தன் தொண்டையில நிறுத்து. திருமூலர் சொன்னாரே ஜீவனும் சிவனும் வேறல்ல ஒன்றென காண்பாய் வென்று காட்டுவாய்.