காரல் மார்க்ஸூம் விஷ்ணு பாவாவும்

உலகின் குருவாக பாரத நாடு ஆகிட வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன் பணி செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவராக இருந்தவர் ஸ்ரீ குருஜீ கோல்வல்கர். அவர் ஆய்வு மாணவர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பேசும்போது, ஒரு உன்னதமான அரசு எப்படி இருக்க வேண்டுமென திரு. விஷ்ணு பாவா பிரம்மச்சாரி (1825 – 72) எழுதியிருந்த கருத்தியல் நூலைப் பற்றி அவர்களுடைய கவனத்தை ஈர்த்தார். அந்த நூல் 1867ல் வெளியானது. அதே ஆண்டுதான் காரல் மார்க்ஸ் மூலதனம் என்ற அவருடைய கருத்தியல் நூலை வெளியிட்டார். இந்தியாவில் வெளியான விஷ்ணு பாவாவின் நூல் மராட்டிய மொழியில் பன்னிரண்டு பக்கங்கள் கொண்டது. இந்நூலுக்கும் சுமார் ஏழாயிரம் கி.மீ தள்ளியுள்ள ஜெர்மனியில் வெளியான மூலதனம் என்ற மார்க்ஸின் நூலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

விஷ்ணு பாவாவின் நூல் அப்போதைய ஆங்கிலேய அரசின் உயர் அதிகாரியான கேப்டன் பிலிப் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விக்டோரியா மகாராணிக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், பெர்சியா , அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்த அரசியல் தலைவர்களுக்கு அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு விவாதத்தை கிளம்பிய பாவாவின் நூல் நம் நாட்டில் உரிய கவனம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது. விஷ்ணு பாவா பிரம்மச்சாரி சிறந்த அறிஞர். அவர் இந்நூலை வெளியிடுவதற்கு முன்பாக வேதோத்த தர்மபிரகாஷ் பாவார்த்த சிந்து என்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த நூல் சமுக மாற்றத்தை பற்றி பொதுவான முறையில் பேசுகிறது. மாற்றத்தை எப்படி ஏற்படுத்துவது என்பதை பற்றி பேசவில்லை. அதற்கு இரண்டு காரணங்களை ஆசிரியர் கூறுகிறார். ஒன்று , இக்கருத்துக்கள் பொது ஜனங்களிடையே வெகுவாக பரவவில்லை. இரண்டு, மக்கள் தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்ககூடிய நிலையில் (நாடு அப்போது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்ததை நினைவில் கொள்ள வேண்டும்) இல்லை என்பதேயாகும்.

பாவா கூறும் உன்னதமான சமுக நிலை உலகமெங்கும் ஏற்பட வேண்டுமென விரும்பினாலும் அது முதலில் பாரதத்தில் ஏற்பட வேண்டுமென தெரிவிக்கிறார். பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் 27 வது ஸ்லோகத்தில் நான்காவது வரியில் எழுதப்பட்டுள்ளதின் அடிப்படையில்
உன்னத அரசு ஏற்பட வேண்டுமென கூறுகிறார். இதை இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா அரசுகள் தீயதென ஒதுக்கலாம். ஆனால் நாம் ஏற்படுத்த விழையும் உன்னத ஆட்சியின் முன்பு அந்த அரசுகள் அனைத்தும் சூரியன் முன்பு மின்மினிகள் போல் ஒளியிழந்து போய்விடும் என்றார் விஷ்ணு பாவா பிரம்மச்சாரி.

அந்த நூலின் சாராம்சத்தை சுருக்கமாக பார்ப்போம் :

பிரிவு 1
அரசன் தன் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் தன் குடும்பத்தினரைப் போல் கருத வேண்டும். அரசன் அந்த குடும்பத்தின் தலைவன். நந்தவனத்தில் பல்வேறு மலர்கள் மலர்ந்து மணம் வீசுவது போல் அதற்கு தேவையானவை செய்யும் நந்தவன பொறுப்பாளர் போல் அரசன் தன் மக்கள்
அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வாழ்வதற்கு ஆவணச் செய்ய வேண்டும்.

பிரிவு 3
நாடு முழுவதும் விவசாயம் செய்யப்பட வேண்டும். அந்தந்த மண்ணுக்கேற்ற பயிர்களும் தாவரங்களும் விளைவிக்கப்பட வேண்டும். எல்லா பகுதிக்கும் நீர் போய் சேரும்படி ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் பன்னிரண்டு மாதமும் நீர்வரத்து இருக்கும்படி செய்ய வேண்டும். பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், பயிர் வகைகள் என அனைத்தும் பயிர் செய்ய வேண்டும். ஆடு , மாடு , கோழி, குதிரை, ஒட்டகம், கழுதை போன்றவை வளர்க்கப்பட வேண்டும். அதற்கான தீவனமும் உற்பத்தி செய்யப்பட வேண்டும். களஞ்சியம் அனைவருக்கும் பொதுவாக இருக்குமென்றாலும் அதை பார்த்து கொள்ள ஒரு தக்கார் இருக்க வேண்டும். மின்சாரம், ரயில்வே, தொலைத்தொடர்பு எங்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசனுக்கும் மக்களுக்கும் ஒரே மாதிரியான உணவு. பொன், வெள்ளி ஆபரணங்களை ஆண்கள் பெண்கள் என இருபாலரும் அணிந்து கொள்ளலாம். அவை பழுது பட்டால் உரிய ஆவணத்தில் கொடுத்து மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

திருமணத் துறை மூலமாக ஆண் பெண் திருமணம் செய்து வைக்கப் படும். பொருத்தமில்லையென தெரிந்தால் அவர்கள் பிரிந்து விடலாம். வேறு திருமணத்தை துறை மூலமாக செய்து கொள்ளலாம். குழந்தைகள் பெற்றோருடன் ஐந்து வயது வரை இருக்கலாம். அதன் பின் அவர்கள், ஆணோ
பெண்ணோ, அரசனின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய கல்வி அளிக்கப்படும். படிக்கும் போதே அவர்களுடைய திறன், விழைவு சோதிக்கப்பட்டு அதற்கேற்ப பணியமர்த்த படுவார்கள். வேலை செய்ய முடியாத வயதானவர்கள் வேலை செய்ய வேண்டியதில்லை. அதன்
பின்பு அவர்கள் செய்த தொழில் சார்ந்த ஆலோசனை மன்றத்தில் உறுப்பினராக்கப் படுவார்கள். இறந்தவர்கள் அனைவரும் உரிய முறையில் எரிக்கும் பொறுப்பு அரசனுடையது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்றபோது அங்கு கொலை, கொள்ளை , திருடு , மோசடிகள் இல்லாமல் போகும். எனவே நீதிமன்றங்கள் தேவையற்றதாகும். பஞ்சமும் பட்டினி சாவும் இல்லாமல் போகும். எல்லோருடைய உலகியல் ஆசைகளும் பூர்த்தி யாகும். அரசனுக்கும் மக்களுக்குமான உறவு பற்றி இந்த பிரிவில் கூறப்பட்டுள்ளவை உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும்.

பிரிவு 8
குடிமக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர், வளங்கள் உற்பத்தி அனைவருக்கும் பொதுவாகும். பட்டு பீதாம்பரங்கள் , தங்க நகைகள் அனைவருக்கும் கிடைக்கும். அனைவரும் பல்லாக்கில் ஏறும் வாய்ப்பு அளிக்கப்படும். கலை, நடனம், நாட்டியம் அனைத்தையும் எல்லோரும் கண்டுகளிக்க முடியும். எல்லோருக்கும் மகிழ்ச்சி என்னும்போது ஒருவர் மற்றவரைப் பார்த்து பொறாமை பட அதிருப்தி அடைய காரணமே இல்லாமல் ஆகிவிடும்.

பிரிவு 11
இப்படிப்பட்ட சமுதாயம் அமையும் போது யார் கொள்ளையடிக்க நினைப்பார்கள்? யார் பதுக்கல் செய்வார்கள்? யார் போட்டி வணிகத்தில்  ஈடுபடுவார்கள்? மற்றவரை கொல்வதற்கு மூலம் என்ன கிடைத்துவிடும்? இப்படிப்பட்ட சூழ்நிலை மனதில் அமைதியை ஏற்படுத்தும். இது போன்ற
உன்னத அரசு ஏற்படுத்தி தந்தமைக்கு பரமேஸ்வரனுக்கு நன்றி கூறும் மனநிலை ஏற்படும். இது போன்ற நிலை ஒரு நூற்றாண்டு காலம் நீடித்தால், இப்போதுள்ள (1867 ல்) அரசர்களும் நீதிபதிகளும் மனிதர்களே அல்ல, மிருகங்கள் என்றே கருதப்படுவார்கள். உலகியல் ரீதியில் பார்த்தால் விஷ்ணு பாவாவும் மார்ஸூம் முன்னிறுத்தும் உன்னத அரசு என்ற கருத்தில் பல ஒற்றுமைகள் தெளிவாக உள்ளன. எதிர்காலத்தை பற்றி ஒரு ஹிந்து  சிந்தனையாளர் தன்னிச்சையாக இந்த கருத்தியலை முன் வைத்தது குறிப்பிட்ட தக்கது. எந்த  இசத்தையும் இயலையும் முற்றுமுடிவானதாக ஹிந்து  பாரம்பரியம் ஏற்பதில்லை. அதேவேளையில் இது, ஹிந்து ஞானமரபின் வல்லமையையும் திறனையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த கண்ணோட்டத்தில் தான் ஸ்ரீ குருஜி இந்த கருத்தியல் நூலின் முக்கியத்துவத்தை முன்னிருத்தி யிருந்தார். அதுவன்றி இதையே நம்முடைய எதிர்காலத்திற்கான திட்ட வரைபடமாக அவர் ஏற்கவில்லை.

விஷ்ணு பாவா பிரம்மச்சாரி யின் கருத்துக்களில் சில முக்கியமான அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும். மார்க்ஸ் ஒரு பருப்பொருள்வாதி. விஷ்ணு பாவா அப்படி அல்லர். பருப்பொருள் வாதம், பரிணாம வாதம், முரணியக்கம் ஆகிய கொள்கைகள் மார்க்ஸின் சிந்தனைக்கு அடிப்படையானவை. விஷ்ணு பாவா ஹிந்து பாரம்பரியம், மரபு, கலாச்சாரம், வாழ்வியல் நோக்கு ஆகியவற்றால் ஊக்கம் பெற்றவர். சீரிய சிந்தனையாளரான அவர் தற்போதுள்ள சமூக அமைப்புகளின் போதாமையை உணர்ந்தார். ஆனால் அவருடைய சமூக- பொருளாதார கொள்கை பாரம்பரிய ஹிந்து சிந்தனையிலிருந்து மாறுபட்டதல்ல. அவர் தன்னுடைய புதிய பொருளாதாரக் கருத்துக்களை பழமையான ஹிந்து அறவியலுடன் இணைந்து உருவாக்கினார். இது போன்றதொரு சமூக அமைப்பு முன்பொரு காலத்தில் பாரதத்தில் நிலவியது என்று அவர் உறுதிபட கூறுகின்றார். அவ்வகையில் இது நம் சிந்தனைக்குரியது.

கருத்துதவி Third Way

 

திருநின்றவூர் ரவிக்குமார்