பயங்கரவாதம், பிரிவினைவாதம் இல்லாத காஷ்மீர் – பிரதமர் மோடி அழைப்பு

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ‘டிவி’ மூலம் நேற்று நாட்டு மக்களிடையே 40 நிமிடங்கள் உரையாற்றினார்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை ஒரு நாடாக ஒரு குடும்பமாக நாம் எடுத்துள்ளோம்.

சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பாயி உட்பட கோடிக்கணக்கான மக்களின் கனவு நிறைவேறி உள்ளது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு இருந்து வந்த முட்டுக்கட்டை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த 370வது பிரிவை பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கான ஒரு ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீர் லடாக்கில் 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் குடும்ப அரசியலுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும். நாம் அனைவரும் இணைந்து பாகிஸ்தானின் மோசமான சதி திட்டங்களை முறியடிப்போம்.

கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் உள்ள நிர்வாகம் மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் தாக்கம் அங்கு வெளிப்படையாக தெரிய துவங்கியுள்ளது. பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு வந்த திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளதால் லடாக்கின் வளர்ச்சி மத்திய அரசின் நேரடி பொறுப்பாகும். எங்களுடைய பொறுப்பை சிறப்பாக செய்வோம். ஜம்மு – காஷ்மீர் நமது நாட்டின் மகுடம். அதன் பாதுகாப்பை உறுதி செய்வோம். நமது பாதுகாப்புப் படைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

எங்களுடைய வலிமை என்ன, எங்களுடைய திறமை என்ன என்பதை ஜம்மு – காஷ்மீர், லடாக் மக்கள் இந்த உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு இதை உலகுக்கு பறைசாற்றுவோம் என்று பேசினார்.

மேலும் விரைவில் பக்ரீத் வருவதால் முஸ்லிம் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் மோடி தெரிவித்துக் கொண்டார். தனது உரையில் பிரதமர் மோடி மேலும் கூறியதாவது: ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் இளைஞர்கள் தங்கள் பகுதியின் வளர்ச்சியில் இணைந்து கொள்ள வேண்டும். இந்த இளைஞர் சக்தியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தொழில் நிறுவனங்களும் இங்கு ஆலைகளை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் எந்த சட்டத்தையும் ஜம்மு – காஷ்மீரில் செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கல்வி என்பது குழந்தைகளுக்கு உரிமையாக உள்ளது. ஆனால் காஷ்மீரத்து குழந்தைகளுக்கு இந்த உரிமை பறிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜம்மு – காஷ்மீர், லடாக் மக்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் உள்ள சட்டங்களின் பலன் இட ஒதுக்கீட்டு பலன்கள் இவர்களுக்கு கிடைக்க உள்ளது. உங்களுடைய உரிமை நிலைநாட்டப்படும். அது நீடித்து நிலைத்து இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *