காஷ்மீர் விவாதத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டிய சிதம்பரத்துக்கு சாரு நிவேதிதாவின் சில கேள்விகள்

மிஸ்டர் சிதம்பரம். வரலாறு நிரூபித்தது என்னவென்றால், காங்கிரஸின் காஷ்மீர் கொள்கை எத்தனை தவறானது என்பதைத்தான். அதை நீங்கள் ஒரே ஒரு சுற்றுப் பயணத்தின் மூலம் – ஒவ்வொரு காஷ்மீரியும் எப்படி வாழ்கிறான் என்பதை கவனிப்பதன் மூலம் – தெரிந்து கொள்ளலாம். அந்த நிலத்திலேயே நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பண்டிட்டுகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அங்கிருந்து விரட்டினார்களே மிஸ்டர் சிதம்பரம், அப்போது உங்கள் வரலாறு எங்கே ஒளிந்து கொண்டிருந்தது?

இந்திய நாட்டின் குடிமகன் யாரும் காஷ்மீரில் குடியேற முடியாது; சொத்து வாங்க முடியாது. ஆனால் பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட ரோஹின்யா அங்கே போய் குடியேறலாம். சொத்து வாங்கலாம். காரணம், அவன் முஸ்லீம். இந்தியா எப்போது மத அடிப்படையிலான நாடாக மாறியது மிஸ்டர் சிதம்பரம்?

காஷ்மீர்ப் பெண்களை ஒரு இந்தியன் மணம் செய்து கொண்டால் அவனுக்கு அங்கே வாக்குரிமை கிடையாது. ஆனால் ஒரு பாகிஸ்தானி முஸ்லீம் அவளை மணந்து கொண்டால் அவனுக்கு வாக்குரிமை உண்டு. இதையெல்லாம் உங்கள் வரலாறு – நீங்கள் குறிப்பிடும் quote unquote வரலாறு – கண்ணை மூடிக் கொண்டுதானே பார்த்துக் கொண்டு இருந்தது?

காங்கிரஸின் காஷ்மீர் கொள்கை இதுவரை காஷ்மீரை சுடுகாட்டைப் போல் ஆக்கி விட்டது. அமீத் ஷாவுக்குக் கொஞ்சம் வழி விடுங்கள். ஒரு ஜனநாயக நாட்டில் எல்லா மாநிலமும் ஒன்றுதான். எல்லா மதத்தினரும் ஒன்றுதான். யாருக்கும் எந்த விசேஷ சலுகையும் கொடுக்கப்படலாகாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை இதில் சேர்க்கக் கூடாது. அது சமூக நீதியின் பாற்பட்டது. அதிலும் கூட சில rational சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். பிஎம்டபிள்யூ காரில் வந்து இறங்கி எனக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கும் அபத்தங்களும் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன.