செவிகளில் அணிந்த குழை என்னும் தோடுகள் ஆடவும், பிற நகைகள் அசைந்தாடவும், கூந்தலில் சூடிய மாலைகள் ஆடவும், அந்த மாலைகளில் தேனை உண்ண வந்து மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் மயக்கத்தில் எழுந்து ஆடவும், குளிர்ந்த பொய்கையில் மூழ்கி எழ விழைகிறார்கள் தோழியர். பின்னர் தில்லையில் எழுந்தருளி ஆனந்தக் கூத்தாடும் சிற்றம்பலத்தானைப் பாடி மகிழவும், மறைப்பொருளைப்பாடவும், முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப் பாடவும், அவன் திருமுடியில் விளங்கும் போன் கொண்டற்றை மலர் மாலைதனைப் பாடவும், முதலும் முடிவுமாக இருக்கும் நிலையைப் போற்றிப் பாடவும் தோழியர் ஆர்வத்துடன் உள்ளனர்.
முத்தாய்ப்பாக, ஏனைய உயிர்களினும் நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிர் போன்ற கரங்களையுடைய சிவகாமி அம்மையின் திருவடிச் சிறப்பையும் பாடிக்கொண்டே நீராடுவோமாக! என்கிறார்கள் சிவ சக்தி ஐக்கிய பக்தியில் திளைத்த தோழிகள்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி