திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனைப் புகழுந்தும், அவனுடைய வீரதீரச் செயல்களை விளக்கமாக எடுத்துரைத்தும், அவனுடைய மனைவி நப்பின்னையை நயந்து வேண்டிக் கொண்டும் பலவாறாக கண்ணனைத் துயிலிலிருந்து எழுப்ப முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
மழைக்காலத்தின் போது, மலையில் இருக்கும் குகையில் ஒட்டிக் கொண்டு அமைதியாக பெருமை மிக்க சிங்கம் உறங்கும். அந்த சிங்கம் உறக்கத்தில் இருந்து எழும்பொழுது அதன் கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழிக்கும். உடம்பை எல்லாப் பக்கமும் அசைத்து, திரும்பிப் பார்த்து தன் பிடரிமயிர்கள் பொங்கும்படி உதறி சோம்பல் முறித்து தன் பெருமைத் தோன்ற நிமிர்ந்து வீரத்துடன் அக்குகையிலிருந்து கர்ஜனை செய்துக்கொண்டு வெளியில் வரும்.
அதுபோல, யசோதை வளர்க்கும் இளஞ்சிங்கமான கண்ணனே! காயாம்பூ போன்ற நீல நிறமுடை நீயும் வீரநடை போட்டு, உன் கோயிலில் இருந்து எழுந்து வந்து உறுதியான சட்டங்களைக் கட்டிய உன் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் உன்னிடம் கூற வந்த குறைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்கள்.