திருப்பள்ளியெழுச்சி 3

காலை நிகழ்ச்சிகளை அறிவிக்க முனையும் மணிவாசகர், முதற்கண் இறைவனை விளிப்பாராய் தேவ என்றார் . இவ்வாறு அவர் கூறியது. அவன் தேவ தேவனாக விளங்கும்  திறத்தைச் செப்பியது.

“பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் யாராலும் காண்டற்கரியார் எமக்கெளிய பேராளன்,” என்று அவரே திருவம்மானைப் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி பிறர்க்கு அரியனாக விளங்கும் இறைவன், தன்னை வணங்கும் அடியவர்க்கு எளியவனாக இருக்கும் தன்மையை உணர்த்துகிறார். இனி காலைப்போதில் நிகழும் நிகழ்ச்சிகளை அறிவுறுத்துவார் வேண்டி, அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின என்கிறார். “வால்வெண் சங்கொடு  வகை பெற்றோங்கிய காலை முரசம் கணை குரல் இயம்ப,” என்று இளங்கோவடிகளும் வைகறையில் சங்கம் முழங்குதலை குறிப்பிடுகிறார்.

மேலும் “காலை வேளைதனில் நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது” என்று வைகறை நிகழ்ச்சிகளை வனப்புடன் மொழிந்து, எம் தலைவனே! எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளி எழுந்தருள்வாயாக என்கிறார் மணிவாசகர்.

ஆர்.  கிருஷ்ணமூர்த்தி