தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடை இல்லை – தமிழக அரசு விளக்கம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யத் தன்னார்வலர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப்.13) வெளியிட்ட அறிக்கையில், “சுனாமி, பெரு வெள்ளம், ‘ஓகி’ புயல், ‘வர்தா’ புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானவை.அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது.

ஆனால், தற்போது, இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில், நோய்த் தொற்றினைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதைத் தவிர்க்கவும், முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே, புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்துவிட்டால், நோய்த் தொற்று தான் அதிகமாகும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதனால் தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும், அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமோ, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ, மண்டல அலுவலர்களிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால், செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால், வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.

மேலும், இத்தகைய உதவிகளைச் செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு, அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம். அதற்கென சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களும், மற்ற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, மாநில அளவில் கரோனா நிவாரணத்தை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில், ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே, அரசு நேற்றைய தினம் (ஏப்.12) வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத் தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை.

மாறாக விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை என்து தெளிவுபடுத்தப்படுகிறது.

stopcorona.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் நிவாரணங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. இதற்கு ஓரிரு நியாய விலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை காரணம் காட்டி, நியாயப்படுத்தி பேசுவதும் சரியல்ல.

நியாய விலைக் கடைகள், பிற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இதர கடைகளில் கூடும் கூட்டத்திலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ள இந்த அரசு, அதை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.

ஏற்கெனவே, அரசு நேற்றைய தினம் (ஏப்.12) வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத் தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை.

மாறாக, விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை என்து தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், வைகோ மற்றும் கே.எஸ்.அழகிரி போன்ற தலைவர்களும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்துவிட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதில் அரசு, எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை. கொடிய கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழ்நாடு அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.