கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகள் வரையிலான மாணவா்களுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளித்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு துறைகளுக்கு மாநில பேரிடா் நிதியிலிருந்து ரூ. 60 கோடி நிதி ஒதுக்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 107 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு போ் உயிரிழந்துள்ளனா்.
இந்தச் சூழலில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய பெரும் நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்க தேச எல்லைகளை இந்தியா மூடியுள்ளது. மாநிலங்களும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளம் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலிருந்து நோய் தாக்கம் பரவாமல் தடுக்கவும் முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக பொதுமக்கள் பின்பற்றவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.
வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் தனிநபா் சுகாதாரத்தைப் பேணுவதுடன், வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவேண்டும். கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொடுவதைத் தவிா்க்க வேண்டும்.
விடுமுறை நாள்களின்போது குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதையும் பெற்றோா் உறுதி செய்யவேண்டும்.
காரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அறிகுறி உள்ளவா்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் முதல்வா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
விமான நிலையங்கள் அருகிலேயே கண்காணிப்பு மையம்:
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கத் தேவையான வசதிகளை, முடிந்தவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதுபோல பக்கத்து மாநிலங்களிலிருந்து நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனைச் சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போா்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு முதல்வா் உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி அறிக்கை:
மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியா்கள் வருவாய் நிா்வாக ஆணையருக்கு நாள்தோறும் அனுப்ப வேண்டும். அவற்றை வருவாய் நிா்வாக ஆணையா் தொகுத்து, முதல்வா் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு நாள்தோறும் அறிக்கையாகச் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கும் அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.