ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், கலிஃபோர்னியா, அமெரிக்காவில் 2026 ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற “த்ரைவ் கான்பரன்ஸ் 2026” நிகழ்ச்சியில், “அறிவியல், அறிவு அமைப்புகள் மற்றும் நாகரிக வழிகாட்டுதல்” என்ற தலைப்பில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்கார்யவாஹ் (அகில பாரத பொதுச்செயலாளர்) தத்தாத்ரேய ஹொஸபாளே அவர்கள் வழங்கிய உரையிலிருந்து….
நம்மை ஒன்றிணைத்து, உரையாடலுக்கான இந்த வாய்ப்பை உருவாக்கிய உலக அறிவியல் மற்றும் புத்தாக்க மன்றத்திற்கு (Global Science and Innovation Forum, GSIF) நன்றி.
பாரத நாகரிகத்தின் அறிவைப் பகிர்ந்து கொள்வதும், உலகின் பிற பகுதிகளிலிருந்து கற்றுக் கொள்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும். எங்கள் பாரத பாரம்பரியத்தில், ஆன்மிக அறிவுக்கும், அறிவியல் அறிவுக்கும் இடையில் எவ்வித பிரிவும் இல்லை; இரண்டும் ஒரு முழுமையின் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. உபநிஷதங்கள் போன்ற தத்துவ நூல்கள், மனித உடற்கூறியல், மனம், செயல் மற்றும் செயல்விலக்கு, உணர்வு மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நிலைகள் போன்றவற்றை வெறும் பக்தி சார்ந்த கருத்துக்களாக அல்லாமல் விரிவாக விளக்குகின்றன.
நூற்றாண்டுகளாக, அறிவியல் சிந்தனைகளை ஆன்மிக நூல்களுக்குள் காத்து வந்ததால், அடுத்தடுத்து வந்த தலைமுறைகள் அவற்றின் அறிவியல் பரிமாணத்தைப் பல நேரங்களில் கவனிக்கவில்லை.
வெளிநாட்டு படையெடுப்புகளும், நீண்டு நிலவிய வம்சாவழி ஆட்சிகளும், நிறுவனங்களுக்கும், பாரம்பரியங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின; இதனால் இந்த அறிவின் பெரும்பகுதி ஒடுக்கப்பட்டும், மறக்கப்பட்டும் பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை, பாரத அறிவு அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க, நவீன திட்டமிட்ட வழியில் முயற்சி செய்து வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக, நம் மக்கள் நம்முடைய அறிவியல் பாரம்பரியத்தையும், அறிவுசார் மரபுகளையும் மறக்கடிக்கப்பட்டனர்.
பாரத நாகரிக பாரம்பரியம், பிரபஞ்சத்தை ஆராயும் ஆழமான பழக்கத்தை கொண்டது. அதாவது விண்வெளி, பிரபஞ்சம், மண்ணுலகம், விண்ணுலகம் போன்றவற்றிற்கு இடையிலான தொடர்பு குறித்து எழும் கேள்விகளை உள்ளடக்கியது. வரலாற்றில், திட்டமிட்ட நகரங்கள், பல்கலைக்கழகங்கள், என நவீனத்துவம் மிகுந்த மேம்பட்ட கட்டிட அமைப்புகள் இருந்தன; இவை அனைத்தும் உயர்ந்த பொருளாதார மற்றும் அறிவியல் புரிதலை முன்வைக்கின்றன.
பாரம்பரிய அறிவியல் மனப்பாங்கு, இயற்கையைப் புரிந்து கொண்டு, அதை அறிவுடன் பயன்படுத்தி, அதே நேரத்தில் அதைப் பாதுகாப்பதே ஆகும்; அதை சுரண்டுவது அல்ல. சமூகத்தை வடிவமைப்பதிலும், அறிவியல் மற்றும் அறிவு மனிதகுலமெங்கும் பயன்படுவதை உறுதி செய்வதிலும் கல்வி முக்கியமாக உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில், அறிவியல் ஆராய்ச்சியும், ஆன்மிகமும் எதிர்மறையானவை அல்ல; அவை ஒன்றுக்கொன்று ஆதரித்து செழிக்கச் செய்கின்றன. வரலாற்றுப் பார்வையில், அறிஞர்களும், வல்லுநர்களும், பல நேரங்களில் அறிவியல் ஆராய்ச்சியிலும், ஆன்மிகப் பயிற்சியிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டு, தர்மம், நாகரிகம், ஞானம் ஆகியவற்றை ஒருங்கிணைத்தனர்.
சட்ட அமைப்புகளும், அறிவியல் அமைப்புகளும், மக்களின் உயிர், வாழ்வாதாரம், அன்றாட வாழ்வின் நலம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டவை. தொழில்நுட்பம் வேகமாக முன்னேறும் போது, சமூகத்தின் சில பகுதிகள் கல்வியில் பின்தங்கினால், அதன் விளைவாக சமத்துவமின்மை அதிகரிக்கும்.
பொருளாதார வளர்ச்சி, கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவை ஆழமாக ஒன்றோடொன்று இணைந்தவை. ஒரு பக்கம், சமத்துவமின்மை, பாரபட்சம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை ஒழிக்கப்பட வேண்டும்; மற்றொரு பக்கம், அறிவியல் முன்னேற்றத்தையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அறிவியலை மூடநம்பிக்கையிலிருந்து பிரித்தறிவதற்கு, ஆழமான சமூக மற்றும் அறிவுசார் முயற்சி தேவைப்படுகிறது. இது பெரிய சவாலாகவே உள்ளது.
நமது அறிவுசார் அமைப்பு, இந்த பாரம்பரியத்தை தற்போது விமர்சன ரீதியாக மீட்டெடுத்து ஒருங்கிணைக்க முயற்சியெடுத்து வருகின்றது. அனைத்து உயிர்களும் ஒரே முதன்மை ஆற்றல் மூலத்திலிருந்து தோன்றுகின்றன என்ற புரிதலிலிருந்து உருவாகிறது. இயற்கையை, மனிதர்களின் தேவைகளையும் பேராசையையும் பூர்த்தி செய்யும் ஒரு அடிமையாக மட்டுமே பார்க்கும் போது, ஒடுக்குமுறை ஏற்படுகிறது.
நமது ஹிந்து பாரம்பரியம், ஒவ்வொரு உயிரினத்தையும் மரியாதையுடன் பார்க்க கற்பிக்கிறது; அதாவது, தன்னுள்ளும், பிறருள்ளும், அனைத்து தாவரங்களிலும், விலங்குகளிலும் தெய்வீகத்தைக் காணும் ஞானத்தை வழங்குகிறது. இந்த ஒருமைப்பாட்டு உணர்வே, மாண்பையும் அமைதியையும் உருவாக்கி, முழு பிரபஞ்சத்தையும் ஒன்றோடொன்று இணைந்த ஒரே முழுமையாகப் பார்க்கும் பார்வையை அளிக்கிறது. அறிவு ஜனநாயகமயமாக்கல் மிகவும் அவசியமாகிறது.
உண்மையான ஜனநாயகமயமாக்கல் என்பது, அனைத்து சமூகங்கள், நாடுகள், நாகரிகங்களிலிருந்தும் வரும் அறிவு, அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதே; இதனால் மக்கள் சம நிலைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். மனித நலனுக்காக உருவாக்கப்படும் எந்த தொழில்நுட்பமும், பொருளாதாரம், சூழலியல், நெறிமுறை என்ற மூன்றின் அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
இயற்கையை சுரண்டி அதன் விதிகளை மீறும் தொழில்நுட்பங்கள், இறுதியில் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவித்து, பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்கும். ஞானம், விவேகம் மூலம் வழிநடத்தப்பட வேண்டும்; அதுவே ஞானத்தின் பொறுப்பான பயன்பாட்டை உறுதி செய்யும் என்ற கருத்தை பாரதிய பாரம்பரியம் முன்வைக்கிறது.
விவேகமில்லாத ஞானம், ஆணவத்தை உருவாக்கும்; ஆனால் விவேகத்துடன் இணைந்த ஞானம், தனிநபருக்கும் மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும்.
தமிழில்: திவ்யா இரா.கு,
முனைவர் பட்ட ஆய்வாளர்