100 கி.மீ. தூரம் சென்று ஷாகா நடத்திய சீனிவாசன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து,
தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு
முன்னுதாரணமாக செயல்பட்ட, திருச்சி சீனிவாசன் ஜியைப் பற்றி இந்த இதழில்
அறிவோம்…

 

சுப்பிரமணியன் – கோமதி தம்பதியினருக்கு மகனாக, 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்தார், சீனிவாசன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் ஒரு தங்கை. தந்தை காவல்துறை பணியில் இருந்ததால், பணியிட மாற்றம் இருந்தது. அதனால் அவருடைய படிப்பும் பல ஊரில் இருந்தது.
இரண்டாம் வகுப்பு வரை அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்திலும், மூன்று மற்றும் நான்காம் வகுப்பை கரூரிலும், ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு வரை திருச்சியிலும், 10 மற்றும் 11 ஆம் வகுப்பை மண்ணச்சநல்லூரிலும் படித்துத் தேர்ச்சிப் பெற்றார். 1969 – 71 வரை திருவெறும்பூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஐ.டி.ஐ படித்த பிறகு, 1972 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் (BHEL) பயிற்சி தொழிலாளாராக (அப்ரெண்டிஸ்) பணியில் சேர்ந்தார்.
பிறகு 1973 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, 1975ல் தற்காலிக ஊழியராக பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து, 1977 ஆம் ஆண்டு முதல் 2012 வரை நிரந்தர ஊழியராக பெல் நிறுவத்தில் பணிபுரிந்தார்.
1983 ஆம் ஆண்டு முதல் 1987 வரை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், டிப்ளமோவில் மெக்கானிக்கல் படிப்பை முடித்த பின்னர், இளங்கலை பட்டமும், மனோ தத்துவ இயல் பாடத்தில் முதுகலைப் பட்டத்தை அஞ்சல்வழிக் கல்வியில் பெற்றார்.
1961ல், கரூரில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளிக்கூட ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்ற ரவி வாத்தியார் மூலமாக சங்க அறிமுகம் கிடைத்தது. ரவி வாத்தியார் மூலமாக பலருக்கும் சங்க அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் தினமும் ஷாகா செல்ல ஆரம்பித்தார்.
தந்தையின் பணியிட மாறுதலால், மண்ணச்சநல்லூருக்கு சென்ற போது அங்கு ஷாகா இல்லாததால், அங்கு ஷாகா ஆரம்பித்தார். 1968ல் குருஜி அவர்கள் திருச்சிக்கு வந்தார். 1970ல் திருச்சி வழியாக மதுரை சென்றார் குருஜி. அந்த இரண்டு முறையும் குருஜியை அருகில் இருந்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, தனக்கு கிடைத்த வாழ்நாள் பாக்கியம் என நம்மிடம் தெரிவித்தார், சீனிவாசன் ஜி.
சங்கம் அறிமுகம் இல்லாத ஊருக்கு சங்கத்தை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 100 கி.மீ. தூரம் தள்ளி உள்ள ஜெயங்கொண்டம் ஊருக்கு வாரந்தோறும் ஞாயிறன்று ஷாகா நடத்த சனிக்கிழமை இரவே சென்று தங்கியிருந்து ஷாகா நடத்துவார். ஒரு வாரம் ஜெயங்கொண்டம் மறு வாரம் குளித்தலை, அடுத்த வாரம் முசிறி என தொடர்ந்து அந்தப் பகுதியில் ஷாகா நடத்தி, பலரையும் சங்கப் பணியில் ஈடுபடுத்தினார். இதனைக் கேட்ட சங்கத்தின் மூத்த பிரச்சாரக் யாதவராவ் ஜோஷி ஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வாரந்தோறும் ஷாகா நடத்த 100 கி.மீ. தூரம் செல்வது, நல்லதொரு முயற்சி என பாராட்டினார்.
1975ல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையில், பத்து ஜில்லாவிற்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் பொறுப்பு, சீனிவாசன் ஜிக்கு இருந்தது. அப்போது இராம கோபாலன் ஜி, சூரி ஜிக்களை கே.என். ஸ்ரீனிவாசன் ஜி வீட்டில் தங்க வைப்பார். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராட்டம் செய்த 12 ஸ்வயம்சேவகர்கள் கைது செய்யப்பட்டு, 18 மாதங்கள் சிறையில் மிகுந்த துயரத்திற்கு உள்ளானார்கள். அவர்களுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டதுடன் தேவையான உதவிகளை தொடர்ந்து 18 மாதங்கள் செய்து வந்தார், சீனிவாசன் ஜி. சிறையில் இருந்த உத்தம்ராஜ் ஜி மற்றும் கார்யகர்த்தர்களை சந்திக்க, ஆச்சார குடும்பத்தைச் சேர்ந்த தனது தாயார் கோமதி அம்மாளுடன் 18 மாதங்கள் தொடர்ந்து சிறைக்கு சென்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டி ஆறுதல் கூறுவார்.
1982ல், சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலிலும், பி.எம்.எஸ் ஷேத்ர பொறுப்பாளர் பிரபாகர் காட்டே வழிகாட்டுதலில், பெல் நிறுவனத்தில் பி.எம்.எஸ் தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக பி.எம்.எஸ். ஆக, பல முயற்சிகள் எடுத்து 1992 முதல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக பெல் நிறுவனத்தில் பி.எம்.எஸ் இருந்து வருகிறது.
சங்க ஏற்பாட்டில் தமிழகத்திலிருந்து 10 ஸ்வயம்சேவகர்கள் மனோரீதியான பயிற்சிக்காக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதில் ஒருவராக சென்ற சீனிவாசன் ஜி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மனரீதியான உளவியல் ஆலோசனைகள் வழங்கி, அவர்கள் நல்ல நிலைக்கு மீண்டுவர பெரும் பங்கு வகித்தார்.
1987ல், முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை கரூரிலும், 1988ல் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை பெங்களூரிலும், 1990ல் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை நாக்பூரிலும் முடித்தார். ஒருங்கிணைந்த திருச்சி ஜில்லா கார்யவாஹ், வியவஸ்தா பிரமுக், திருச்சி கோட்ட வியவஸ்தா பிரமுக், சம்பர்க பிரமுக் என பல பொறுப்புகள் வகித்த சீனிவாசன் ஜி தற்போது திருவிடைமருதூர் கண்ட சங்கசாலக்காக உள்ளார். தென் தமிழகத்தின் அலுவலகமான `சாதனா’ அறக்கட்டளையின் டிரஸ்டியாக உள்ளார்.
1983 பிப்ரவரி 18ல், பால சரஸ்வதி அம்மாளை திருமணம் செய்த சீனிவாசன் ஜிக்கு, தாரிணி என்ற ஒரு பெண் உள்ளார். அவர் திருமணமாகி, நல்ல நிலையில் உள்ளார்.
சங்கம் இல்லாத ஊரில் ஷாகா ஆரம்பித்து, எமர்ஜென்சி துயரத்தில் சக கார்யகர்த்தர்களுக்கு தோள் கொடுத்து, பல பொறுப்புகளில் இருந்து, தற்போதும் சங்கப்பணி செய்து வரும் சீனிவாசன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.