உணவு பயன்பாட்டில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் கவனக்குறைவு ஏற்பட்டால், விரும்பத்தகாத விளைவுகள் உச்சம் பெற்று விடும். எனவே கவனச்சிதறலுக்கு ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது.
ஏப்ரல் மாதம் 21ம் தேதி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டம், பழங்குடியின மக்கள் கணிசமாக வாழும் பகுதியாகும். இப்பழங்குடியினர் திருமணத்தை பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
திருமண விருந்தின்போது எண்ணற்ற உணவு வகைகள் பரிமாறப்படுவது மரபு. பழங்குடியினர், உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதில் அலாதி நாட்டமுடையவர்கள். ஏப்ரல் 21ம் தேதி காலை, அப்லோட் என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
திடீரென கொத்து கொத்தாக மயங்கிச் சாய்ந்தனர். வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற உணவு நச்சுத்தன்மை அறிகுறிகள் தென்பட்ட 400க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே அதிகாரிகள் உணவு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.
உணவு எதனால் விஷமானது என்பது குறித்து ஆய்வு ரீதியான முடிவு வெளிவந்தபிறகே அசம்பாவிதத்திற்கான காரணம் என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும். இதற்கு பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குஜராத்தில் இந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே இதைபோன்ற வேறு இரு அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏப்ரல் 5ம் தேதி, அகமதாபாத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ள 50க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஏப்ரல் மாதம் 9ம் தேதி, அகமதாபாத் மாவட்டத்திலுள்ள ராஜ்புரா கிராமத்தில் நடைபெற்ற மதரீதியான விழாவின் போது பல்வேறு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இவற்றைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கிச் சாய்ந்தனர். உணவு விஷமானதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. சிகிக்சைக்குப் பிறகு அனைவரும் பிழைத்துக்கொண்டனர்.
ஏராளமானோர் பங்கேற்கும் போதும், நிகழ்ச்சிகளில் உணவை பரிமாறும் போதும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனக் குறைவு காரணமாகவே அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துகொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என குஜராத் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனை குஜராத்துக்கு மட்டுமான அறிவுரையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களும், இதனை அகவயப்படுத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதே பொது நல ஆர்வலர்களின் ஒருமித்த எதிர்ப்பார்ப்பு ஆகும்.