ஹிந்து அமைப்பு தலைவர் ரஞ்சீத் பச்சன் சுட்டுக் கொலை

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், அந்தராஷ்ட்ரீய ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சீத் பச்சன், மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நடை பயணம்

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின், ராஷ்ட்ரீய ஹிந்து மகாசபா தலைவராக பதவி வகித்தவர், ரஞ்சீத் பச்சன், 40. நேற்று காலை, ரஞ்சீத் பச்சன், காலையில் உடற்பயிற்சிக்காக நடை பயணம் சென்ற போது, அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை குறித்து, லக்னோ இணை போலீஸ் கமிஷனர் நவீன் அரோரா கூறியதாவது: உத்தர பிரதேச மாநில அந்த ராஷ்டிரிய ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சீத் பச்சன், நேற்று காலை, அவரது உறவினர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவுடன் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஒரு நபர், சால்வையால் தன்னை மூடியபடி வந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், அவர்களிடம் இருந்த மொபைல் போன்களைப் பறித்து, தப்பி ஓடியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில், ரஞ்சீத் பச்சன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவின் இடது கையில், காயம் ஏற்பட்டுள்ளது.

வழக்குபதிவு

விசாரணையில், ரஞ்சீத் பச்சனுக்கும், அவரது மனைவி கலிண்டி சர்மாவுக்கும் இடையே, சுமுகமான உறவு இல்லை என்றும், இது தொடர்பாக கோரக்பூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட ரஞ்சீத் பச்சன், ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். பின், விஸ்வ ஹிந்து மகாசபா என்ற அமைப்பை நிறுவி, அதன் தேசிய தலைவராகவும் இருந்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.