நவீன கல்வியும் தொன்மைக் கல்வியும் ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை

காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்றழைக்கப்படும் ஜெகத்குரு ஸ்ரீ சந்தரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ நூலின் ஹிந்தி பதிப்பை ஜனவரி 21 அன்று சென்னை செம்பாக்கம் காஞ்சி மஹாஸ்வாமி வித்யாமந்திர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்யர் பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நூலை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது காஞ்சி மஹாஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தொண்டுப் பணிகள் பற்றிய நிரந்தரக் கண்காட்சியையும் மோகன் பாகவத் திறந்து வைத்தார்.

எளிய தமிழில் அனைத்து சம்ஸ்கிருத வேதாந்த பாடங்களை கற்றுத் தரும் ஸ்வாமி ஓம்காரானந்தா, ஆர்.ஏ.சங்கர நாராயணன், நிர்வாக இயக்குநர் கனரா வங்கி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

மஹாஸ்வாமி அறக் கட்டளைத் தலைவர் பாம்பே சங்கர்  தனது வரவேற்புரை “மஹாஸ்வாமி சனாதன தர்மத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார், தனது வாழ்க்கை மூலம் பலருக்கு வழிகாட்டினார்.  இந்த தேசத்தில்  தோன்றிய மகான்கள் அனைவருமே  கோட்பாடுகளை உரைப்பதுடன் நில்லாமல், வாழ்ந்தும் காட்டினார்கள். கடவுளை   பார்த்திருக்கிறீர்களா என சுவாமி விவேகானந்தர் கேட்டபோது, ‘‘இப்போது  உன்னை காண்பது போல கடவுளை காண்கிறேன்” என்று சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் வாழும் போது இணக்கம் ஏற்படுகிறது. உலகமே ஒரே குடும்பம் எனும் இந்த தத்துவம்   பாரதத்திற்கு மட்டுமே உரியது. நாம் அனைவரும் சிறந்த மனிதராக வாழ்ந்து வழி காட்ட வேண்டும். ஒரு ஆசிரியர் தமது வாழ்க்கை மூலம் மாணவர்களுக்கு வழி
காட்டுகிறார் .

‘‘ஆன்மீக உண்மைகளை உணர்ந்த பின்னர், பல முறை ஆராய்ந்து பாருங்கள், பின்னர் அதிலிருந்து விலகாமல் இருங்கள். ஆன்மீகமே இந்தியாவின் ஆன்மா. தர்மமே நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்கிறது.    நவீன கல்விமுறையுடன் சேர்ந்த ஆன்மீக கல்வியே ஒருங்கிணைந்த கல்வி முறையாகும். இன்றைய சூழலில் இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கல்வியே  மிகவும் அவசியம்.  இதன் மூலமே உடல், மன பயிற்சியும் கல்வியும் மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் இந்த கல்வி நிறுவனத்திற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.  இந்த உலகில் அனைத்துமே முன்னேறி வரு கிறது. முன்னேற்றம் என்பது இயற்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். சில சமயம் தர்மம் அதர்மம் போன்றும், அதர்மம் தர்மம் போன்றும் தோன்றும். இதை சரியாக உணர ஆன்மீக ஞானம் அவசியம்.

பூஜ்யஸ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் “சங்கர மடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிக்கிடையேயான தொடர்பு மிக ஆழமானது. மஹாபெரியவரின் ஆலோசனை குருஜி கோல்வல்கருக்கு உத்வேகம் அளித்தது.  சமுதாயத்தை முன்னேற்றவும், தேசத்தை முன்னேற்றவும் ஆர்.எஸ்.எஸ் பெரும் பங்கு வகிக்கிறது. குக்கிராமங்கள், மலைப் பகுதிகள் முதல்  பல ஊர்களில் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை சங்கம்  நடத்தி வருகிறது இதன் மூலம் தேசபக்தி, தெய்வ பக்தி கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியரே இல்லாத இடங்களில் ஆசிரியர்களை நியமித்து  பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் இங்கிருப்பதால், இந்த ஒருங்கிணைந்த கல்வி முறையினை  நாடு முழுவதும் எடுத்து செல்ல முடியும்.

‘‘நம் தேசப் பெருமைகளை நிலை நிறுத்த வேண்டும், பரப்ப வேண்டும். பொருளாதாரம், விஞ்ஞானம், மனித நேயம், கலாச்சாரம், பாரம்பரியம், தாய்மொழிப் பாதுகாப்பு இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  இசை, கலாச்சாரம், தேவாரம், திருப்புகழ், ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை அனைவர் மத்தியிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இவைகளை கொண்டதே ஒருங்கிணைந்த கல்விமுறை” எனக்கூறி ஆசி வழங்கினார் .

பூஜ்யஸ்ரீ ஓம்காரனந்த  ஸ்வாமிகள் “மஹாஸ்வாமிகளின் தெய்வத்தின் குரலால், ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவும், இந்தியர்கள் இந்தியர்களாகவும் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். வள்ளுவர் சொல்வது போல கற்க வேண்டியதை முறையாக கற்று அதன்படி நடக்க வேண்டும். மாணவர்களுக்கு படிக்க சரியான வசதி ஏற்படுத்தித் தரும்போது பள்ளியின் மதிப்பு தானாக உயரும். அம்மாணவர்கள் உலகுக்கே வழிகாட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்” என ஆசி கூறினார்.  நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.