வெற்றிகரமான விக்ரம் – 1 பயணம்

பாரத தேசத்தின் விண்வெளி துறை மாபெரும் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், பத்தாயிரம் கோடிக்கும் மேலான அளவில் இத்துறை சார்ந்த பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்படுகிறது. இதற்கு அடித்தளம் அமைக்க, திறன் மிகுந்த, நம்பகமிக்க தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதுடன், இத்துறையில் பலவித ஸ்டார்ட்-அப் கம்பெனிகள் உருவாவதற்கும் வழி செய்கிறது. இவற்றை நெறிப்படுத்தத் தேவையான சட்ட திட்டங்கள், வழிகாட்டல்கள், உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்ய வழிமுறைகள் என பலவற்றையும் மனதில் கொண்டு, தொலை நோக்குப் பார்வையுடன் வகுக்கப்பட்டது இந்திய விண்வெளிக் கொள்கை, 2023
இவ்வகையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, 2026 ஜூலை 18ல், வெற்றிகரமாக ஏவப்பட்ட விக்ரம்-1 ஏவூர்தி (Orbital Launch Vehicle), வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற தனியார் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம், இஸ்ரோ விஞ்ஞானிகளின் வழிநடத்தலில் தயாரித்த முதல் ஏவூர்தி இது. நம் நாட்டு விண்வெளித் திட்டத்தின் தந்தையான டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களை நினைவு கொள்ளும் விதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஏவூர்தி சுமார் 20 – ———–24மீ உயரமும், 1.7மீ விட்டமும் கொண்டது. ஏழு மாடிக் கட்டிடம் பறப்பது போல கற்பனை செய்து பாருங்களேன்! அதனால், குறைந்த எடையும், அதிக வலிமையும் கொண்ட கார்பன்-கம்போசிட் (Carbon-Composite) மூலப்பொருட்களால், இதன் பல பாகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நான்கு நிலை அமைப்பு கொண்ட இந்த ஏவூர்தியின் பாகங்கள், பல அதிநவீன 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை.
தரத்தோடு, ஓரளவு குறைந்த செலவிலும், மிகக் குறுகிய நாட்களிலும் ஏவூர்தியை ஒருங்கிணைத்து (Modular Design) ஏவுதளத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இதன் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில், வேகமாகவும், துல்லியமாகவும் இலக்குப் பாதையை அடைந்தது. அவ்வளவு சீராக இதை வடிவமைத்த பொறியாளர்களின் திறனை நாம் அனைவரும் பாராட்ட வேண்டிய தருணம் இது!
பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு (Low Earth Orbit – LEO) கிட்டத்தட்ட 350கி லோ வரையிலான ஏற்றுச்சுமைகளை (Payloads) சுமந்து விண்வெளியில் வெற்றியுடன் பாய்ந்தது விக்ரம்-1. ஸ்கோப், க்ரஹா எனும் இரண்டு விண்கலங்களை ஏற்றிச் சென்று குறிக்கப்பட்ட வட்டப் பாதையில் லாவகமாக இறக்கியது. இதன் முதல் மூன்று நிலைகள் (கலாம்- 1200, கலாம்- 250, கலாம்- 100) திட எரிபொருளைப் (Solid Fuel) பயன்படுத்தி இயங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து செயல்படும் நாலாவது நிலை, திரவ எரிபொருளால் இயங்கும் ராமன் எஞ்சின்களைக் கொண்டது.
அடுத்து வரப்போகும் விக்ரம்-2வில் குளிர் நைட்ரஜன் மற்றும் குளிர் ஆக்சிஜன் பயன்படுத்தும் இன்ஜின்களும் உண்டு. நமக்குப் பரிச்சயமான இஸ்ரோவின் PSLV போன்றவை பெரிய வகை ஏவூர்திகள். பெரிய செயற்கைக்கோள்களை வட்டப் பாதையில் நிறுத்த இவை உதவுகின்றன.
மாறாக, விக்ரம்-1 ஒரு சிறிய வகை ஏவூர்தி, சிறிய செயற்கைக்கோள்களை ஏற்றிச் சென்று, அவற்றை தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்த வடிமைக்கப்பட்டது. முன்னது ஒரு லாரி என்றால், இது சிறிய சுமை ஏற்றிச் செல்லும் சின்ன டெம்போ வண்டி என எடுத்துக் கொள்ளலாம்.
வணிக ரீதியில், சிறிய ரக செயற்கைக்கோள் ஏவும் உலகச் சந்தை மிகப்பெரியது. இதற்கான தேவை என்ன எனப் புரிந்தால்தான், விக்ரம்-1ன் முக்கியத்துவத்தை நாம் உணர இயலும். இணையம் உலகத்தை இணைப்பது என்பது நமக்குத் தெரியும், கேபிள் கம்பிகளுக்கு பதில் செயற்கைகோள் வழியே இணைய சேவை வழங்கும் போது, மலைப்பகுதிகள், தீவுகள் மற்றும் தொலைதூர கிராமங்கள் என உலகளாவிய அதிவேக இணைய சேவை கிடைக்க வழிவகுக்கும். புயல், வெள்ளம், காட்டுத்தீ, நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிய பிரத்யேக செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பேரிடர் காலங்களில் தரைவழித் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும்போது, மீட்புக் குழுவினர் தொடர்பில் இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.
கடல்சார் ஆய்வு மற்றும் இயற்கை மாசுபாட்டை அளக்க, சில வகை செயற்கைக்கோள் உண்டு. நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், தேசிய பாதுகாப்புக்கும் இவை அத்தியாவசியம். கணினி மயமாக்கலுக்குப் பின், மருத்துவ சிகிச்சை, கல்வி, விவசாயம், தொலைபேசி, தொலைக்காட்சி, விமான சேவை தொடங்கி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஓலா, ஸ்விக்கி என இவை அனைத்தும் செய்திகளை பரிமாறிக் கொள்ள, விதவிதமான செயற்கைக்கோள்கள் தேவை.
நம் நாட்டின் தொழில்நுட்பத் தேவைகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், பிற நாடுகளோடு போட்டிபோட்டு முன்னேறவும், பல நாடுகளோடு கைகோர்க்கவும், இந்தத் துறையின் வளர்ச்சி அவசியமாகிறது. எனவே, விண்வெளி ஆய்வில் இரு கிளைகள். ஒன்று, செவ்வாய், நிலவு மற்றும் பாதுகாப்பு மற்றும் முக்கிய ஆய்வுத் திட்டங்களில் இஸ்ரோ (ISRO) முன்பு போல் தனது கவனத்தைச் செலுத்த வழி செய்யும் பாதை. மற்றொன்று, மாறி வரும் உலகச் சந்தையில் பிற நாடுகளை சாராமல் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள, புதிய பாதை!
இஸ்ரோ விஞ்ஞானிகளின் வழிகாட்டலில், இவ்வாறு மலர்ந்தது தான் விண்வெளி ஆய்வில் தனியார் பங்களிப்பு! ஆய்வு சார்ந்தும், பாதுகாப்புக் காணோட்டத்திலும், வணிக ரீதியாகவும் இரண்டு வகை சுயசார்பு முயற்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நம்மால் முடியும் என “மேக் இன் இந்தியா” பாதையில், அடுத்த தலைமுறைக்கான விண்வெளித்துறை வேலை வாய்ப்புகளை, கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியின் முதல் வெற்றிதான் விக்ரம்-1.
பாரதத்தை ஒரு முன்னணி நாடாக உருவாக்க, தனியாரின் பங்கேற்பு மிக அவசியம். மேலும், சிறிய வணிகச் செயற்கைக் கோள்களைத் தனியார் துறை ஏவுவதன் மூலம், நாட்டின் அடுத்த தலைமுறை இயற்பியல், கணிதம், கணினி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மிக அதிக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்க, இத்தகைய தனியார் நிறுவனங்கள் களம் அமைக்க இயலும். அதற்கான முதல் வெற்றிப்படிதான், விக்ரம்-1ன் விண்வெளிப் பயணம்.

கட்டுரையாளர்: டாக்டர் உத்ரா துரைராஜன்

கல்லூரிப் பேராசிரியர்