பால பிருந்தாவன் என்ற பெயரில் சிறுவர்களுக்கான பள்ளி அடையார் வீட்டின் அருகிலேயே இருந்தது. பால பிருந்தாவன் தன்னலமற்ற அமைப்பு. அந்த இடத்தில் இலவச அனுமதியோடு, இசை கச்சேரிகள் நடக்கும். ஒரு நாள் மாலை ஒரு பெண்மணி பாடிக் கொண்டு இருந்தார். அவருக்கு எதிரே ஆறு சிறுவர்கள். எல்லோரும் அண்ணன், தம்பிகள் என்பதால் பெயரைச் சொல்லமுடியும் – நாரயணசாமி, ஏகாம்பரம், சீதாராமன், தியாகராஜன், சுப்பு, விச்சு என்ற விஸ்வநாதன். விச்சுவை தனியாகச் சொல்வதற்குத் தக்க நியாயங்கள் உண்டு. எந்த இடத்துக்குப் புறப்பட்டாலும், முதலில் தயாராவது விச்சு தான். அங்கே போன பிறகு, வீட்டுக்கு போகணும் என்று அடம் பிடிப்பதும் அவன்தான். விச்சு பால பிருந்தாவன் மாணவன். நான் ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியில் ஆறாவது வகுப்பு.
நான் அப்போதுதான் கிராமத்திலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.
நான் அறிந்தது எல்லாம் சீர்காழி கோவிந்தராஜனின் “விநாயகனே வினை தீர்த்தவனே” மற்றும் டி.எம்.எஸ் குரலில் “அச்சம் என்பது மடமையடா”. இவ்வளவுதான். சாஸ்திரிய சங்கீதம், கர்னாடக இசை என்பதெல்லாம் சுத்தம்.
அந்தப் பெண்மனி ‘கஸ்தூரி திலகம் லலாட பலகே’ என்று ஆரம்பித்தார். விச்சு உடனே வீட்டுக்கு போகணும் என்று ஆரம்பித்து விட்டான். எழுந்து போவது தப்பு என்பதால், நான் கவனிக்காத மாதிரி இருந்தேன். விச்சு குரலை உயர்த்தினான். பிரச்சினை பெரிதாகக் கூடாது என்று அண்ணன்மார்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். வீட்டிற்குப் போனபிறகு பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும், விச்சு மீண்டும் பாட்டுக்குப் போகலாம் என்றான். அவனை அழைத்துக்கொண்டு, பால பிருந்தாவனுக்கு வந்தால் அந்தப் பெண்மனி அப்பொழுதும் ‘கஸ்தூரி திலகம் லலாட பலகே’ வில் தான். இருக்கிறார். எனக்காக காத்திருந்தது போல் கொஞ்ச நேரம் கழித்து, அடுத்த வரிக்கு வந்தார்.
இந்தமாதிரி காரணிகள்தான் என்னை கர்னாடக இசையின் பக்கம் போகவிடாமல் தடுத்தது. பள்ளி, கல்லூரி எல்லாம் முடித்து வேலைக்குப் போகவேண்டிய பருவம். கர்நாடக இசை பற்றி அண்ணன் ஏகாம்பரத்தோடு பேசிக் கொண்டிருந்தேன். மனித வாழ்க்கைக்கு இசை அவசியமில்லை என்றேன் நான். அண்ணன் சூடாகி விட்டான்.
‘உனக்கு இரண்டு சாய்ஸ் தான். கலை, இசை என்று சம்பந்தப் படுத்திக்கொண்டால் மனுஷனாக இருக்கலாம். இல்லாவிட்டால் மிருகம் தான்’ என்றான். அதுமட்டுமல்ல மறுநாள் ராணி சீதை ஹாலில், லால்குடி ஜெயராமனுடைய மைக் இல்லாத கச்சேரிக்கு அழைத்துச் சென்றான். அரங்கம் நிரம்பிவிட்டது என்பதால், சிலர் மேடையின் ஓரத்தில் அனுமதிக்கப் பட்டார்கள், நானும் அண்ணனும் கூட. அது ஒரு புதிய கதவைத் திறந்து விட்டது. அந்த அனுபவத்தை விரிவாக எழுத இங்கே இடமில்லை.
பல தசாப்த இடைவெளிக்குப் பிறகு, சங்கீத ரசனை தொடர்ந்தது ரவியோடு. ரவி என்னுடைய சாரதி. அது மட்டுமல்ல, உதவியாளரும் கூட. தமிழ்நாடு வாசகர்வட்ட பணிகளுக்காகவும், இன்னும் சில இயக்கப் பணிகளுக்காகவும், பல்லாண்டுகள் தமிழகமெங்கும் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, ரவியுடைய வண்டியைப் பயன்படுத்துவது வழக்கம். அதில் பல சௌகரியங்கள் உண்டு, சில அசௌகரியங்கள் கூட. ரவியின் வண்டியில் கர்னாடக இசை மட்டும்தான் ஒலிக்கும். பஜனைக்குக்கூட இடமில்லை. இவனைத் திருத்த வேண்டுமென்பது என் திட்டம். ஒருநாள் பயணத்தில், அப்போது கஜா புயல் நேரம். ரவியிடம் பித்துக்குளி முருகதாஸ் பாடலைத்தான் போட வேண்டும் என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டேன்.
“ஆடாதே அசங்காதே வா கண்ணா” என்ற பாடல், சாதாரணமாக போய்க் கொண்டிருந்தது. திடீரென திரும்பி கோபால பாலா என்று வேகம்.
இன்னும் துரிதம். இன்னும் மேலே. அந்த இடத்திலேயே அப்படியே விட்டுவிட்டு, நிச்சயமாக தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் என்று பெருமாளின் பெருமை. திருத்தமாக அதை அப்படியே நிறுத்திவிட்டு, அச்சுதாவின் ஒரு அலசல், விஸ்தாரமான அலசல். நேர் வழியை விட்டுவிட்டு, திடீரென்று நோ என்ட்ரி. அங்கே பால் வடியும் முகமும், பரவசமும் உபாயம். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குறுகிய சந்து விரிவடைந்து, அந்த பால்வடியும் முகம் ராஜபாட்டையாய் மாறிவிடுகிறது. அந்தக் கணத்தில் நீலக் கடலும் நிலத்தழகும் ஜொலிக்கிறது. நிறைவாக ராதா லாலா சின்னி கிருஷ்ணா என்று பஜனை. தபேலாவை மிஞ்சும் சலங்கை.
என்னை அறியாமல் இசையின் “இத்தாலியன் ஜாப்” என்று சொல்லி விட்டேன். ரவி யோசிப்பதற்குள் அவனுக்காக விளக்கம். ஐரோப்பாவின் வெனிஸ் நகரத்திலுள்ள தங்கப் பெட்டகத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் சிலர் ஈடுபடுகிறார்கள். இதுதான் இத்தாலியன் ஜாப் என்ற ஆங்கில படத்தின் சுருக்கம். “மினி கூப்பர்” என்ற காரை தயாரித்து, நகரத்தின் பிளாட்பாரங்களிலே படுவேகமாக ஓட்டிச் சென்ற அவர்கள் கொள்ளையடிக்க முடிந்ததா, இல்லையா என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருப்பார்கள். பித்துக்குளியின் பாடலில் அத்தனை வளைவுகள் இருந்ததால், இசையின் இத்தாலியன் ஜாப் என்று சொல்லிவிட்டேன்.
ஆத்திகம் அடிபட்டுவிட்டது நாத்திகம் ஜெயித்து விட்டது என்ற கதையை, நூறாண்டுகளாக இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்போது சொல்வது அந்த பக்கம் இருந்து மனம் மாறி இந்த பக்கம் வந்தவரைப் பற்றி. “சின்னஞ்சிறு பெண் போலே” என்கிற பக்திப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கேட்டிருப்பீர்கள். சாக்தர்களுக்கு நெருக்கமான பாடல் அது. பக்தி பூர்வமான அந்தப் பாடலை எழுதியவர், உளுந்தூர்பேட்டை சண்முகம். இவர் இதுபோன்று எண்ணற்ற பாடல்களை எழுதி இருக்கிறார். இதில் பல இன்றும் ரசிக்கப்படுபவை.
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சண்முகம், 1960களில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். அதன் பொருட்டு கைக்காசையும், குடும்பச் சொத்தையும் இழந்தார். பிறகு அவருக்கு எப்படி மாற்றம் ஏற்பட்டது என்பதை அவரிடம் கேட்டேன்.
“எனக்கு காலில் ஒரு புண் ஏற்பட்டது. அது பெரிதாகி செருப்புப் போட முடியவில்லை, பேண்ட் அணிய முடியவில்லை. சென்னைக்கு போவதற்கு பஸ் ஏற முடியாது. அதற்காகவே ஒரு கார் வாங்கினேன். வீட்டில் இருந்தவர்கள் என்னை ஒதுக்கி வைத்தார்கள். ஒரு கட்டத்தில் இது சகிக்கமுடியாதபடி, நண்பரின் ஆலோசனைப்படி ஒரு ஜோசியரைப் பார்த்தேன். அவர் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது என்றார். நான் ஒப்பவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, சென்னையில் மருத்துவரைப் பார்த்தேன். அவர் உடலில் இன்னொரு பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்தால், காலில் உள்ள புண் குணமாகிவிடும் என்றார். இந்த முறை நான் உடன்பட்டேன். சிகிச்சை பலனளித்தது. என்னுடைய சிந்தனையின் போக்கை, இது மாற்றி அமைத்தது. ஜோசியக்காரர் எப்படி சொன்னார் என்ற கேள்வி என்னை சுற்றி வந்தது. நான் ஜோதிடம் படிக்க ஆரம்பித்தேன். அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து, இந்தப் பக்கம் வரும்படியாக அவள் செய்து விட்டாள்” என்றார்.
இளமைப் பருவத்தையும் இருப்பையும் நாத்திகத்திற்காக செலவழித்த உ.ச.வை நான் சந்தித்தபோது அவருக்கு வயோதிகம். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். புண்ணியத்தில் தமிழ் வளர்ச்சி என்ற அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க என்னையும், அவரையும் இணைத்தது சாக்தம். கரையற்ற வெள்ளம் போல அந்தக் கல்வியை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். அவர் படிக்கும் புத்தகங்களை எனக்கு இரவல் கொடுப்பார். இருவரும் புத்தகங்கள் குறித்துப் பேசுவோம், சிந்திப்போம்.
ஒருமுறை மகாபாரதம் பற்றிய புத்தகம் ஒன்று கொடுத்தார். அதை வாங்கி வந்த மறுநாளே நண்பர் ஒருவர் அதை எடுத்துக் கொண்டு போய் விட்டார். நமக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உண்டு என்பதால், எந்த நண்பரிடம் கொடுத்தோம் என்ற தெளிவு இல்லை. அவ்வப்போது உ.ச. டெலிபோன் செய்தால், அதைத் தொடாமல் தள்ளிக் கொண்டு வந்தேன். ஒரு நாள் என்னைப் பிடித்து விட்டார். “சுப்பு, சண்முகம் பேசுறேன். லைனை கட் பண்ணாதீங்க” என்றார். அவர் தொடர்ந்தார். “உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். புத்தகம் தொலைந்து போச்சா, கவலைப்படாதீங்க. புத்தகம் முக்கியமில்லை. நட்பு முக்கியம்” என்றார்.
இரண்டு நாள் கழித்து புத்தகம் இல்லாமல் அவர் வீடு தேடி போனேன். அப்போதும் அதே உ.ச.தான், ஏனென்றால் நட்பு முக்கியம். தொடரும்…
கட்டுரையாளர் : சுப்பு