ரா ஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகிலபாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபாளே அவர்கள் புவனேஸ்வரில் “வேதாந்த கேசரி சுவாமி லஷ்மணானந்த சரஸ்வதி: கிருத்தி ஏவம் வ்யக்தித்வா” என்ற புத்தகம் வெளியீட்டு விழாவில், “தர்மத்திற்கு எதிரான சக்திகள், தர்ம விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஆற்றிய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த மாபெரும் ஆளுமைகளை பலவீனப்படுத்தவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது” என பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், தர்மத்திற்காக தியாகம் செய்யும் பாரதத்தின் பாரம்பரியத்தை குறிப்பிட்டார். குருதேக் பகதூர் மற்றும் சுவாமி ஸ்ரத்தானந்தா முதல் சுவாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி வரை, எண்ணற்ற தனிநபர்கள் தர்மத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காக, தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
கேரளாவில் இடதுசாரி குழுக்களின் வன்முறை மற்றும் பல மாநிலங்களில் நக்சலைட் பயங்கரவாதிகளின் வன்முறை உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டிற்காக உழைக்கும் தனி நபர்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளது. லக்ஷ்மணானந்தா சரஸ்வதி சுவாமிஜி அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் தர்மத்தின் பாதுகாப்பிற்கும், சமூகத்தில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், அவரது பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும், ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கம் அளித்தார்.
சுவாமிஜி அவர்கள் உலக வாழ்க்கையையும், பொருள் பற்றுகளையும் துறந்து, பழங்குடியின சமூகங்களின் மேம்பாடு, பசு பாதுகாப்பு, தர்ம பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
பூரி சங்கராச்சாரிய சுவாமி நிஷ்சலானந்த சரஸ்வதி செய்தியை குறிப்பிட்டு, தவம் மற்றும் ஒழுக்கத்தின் மூலம் ஆன்மீக உச்சத்தை அடைபவர்கள் மற்றும் தர்மத்தையும், தேசத்தையும் காக்கும் போது வீர மரணம் அடைபவர்கள் என பொதுவாக இரண்டு வகையான மகான்கள் உள்ளனர். உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக பாரதம் தொடர்ந்து விளங்க வேண்டுமானால், தற்போதைய தலைமுறை சுவாமிஜி வாழ்க்கை மற்றும் தத்துவத்தில் இருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சுவாமிஜியை வெறும் ஒரு தனி நபராக மட்டும் கருதாமல், ஒரு கருத்தாகவும், ஒரு தத்துவமாகவும், தேசிய வாழ்விற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊற்றாகவும் வர்ணித்தார்.
சுவாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி அவர்கள் வெறும் ஞானி மட்டுமல்ல, கந்தமாலின் பழங்குடி சமூகங்களுக்கு ஒரு பாதுகாப்பு சக்தியாகவும், ஆன்மீக விழிப்புணர்வின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார் என ஹொஸபாளே அவர்கள் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் துறவிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அறங்காவலர் மன்சூக்லால் சேத்தியா நடத்தினார்.
தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசும் போது, சுவாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதிக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவரது வாழ்நாள் சேவை அர்ப்பணிப்பை பின்பற்றுவதே ஆகும், சுவாமிஜி தனது தியாகத்தின் மூலம் ஒடிசாவை முன்னோக்கி வழிநடத்தினார் என குறிப்பிட்டார்.
சுவாமிஜி பற்றி பேசிய ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, பழங்குடியின பெண்களுக்கு கல்வி அளித்து அவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றுவதற்காக சுவாமிஜி பணியாற்றினார் என்றும், சட்டவிரோத மதமாற்றங்கள், பசுவதை, தேசவிரோத சதித்திட்டங்கள் போன்ற பிரச்சினைகளை வெளிப்படையாக எதிர்த்து, சமூகம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் மீது தனக்கு இருந்த அசைக்க முடியாத பற்றை அவர் வெளிப்படுத்தினார் என எடுத்துரைத்தார்.
மேலும், புல்பானியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஒடிசா அரசு சுவாமிஜி பெயரை சூட்டியுள்ளதாக அறிவித்தார். ஜலேஷ்பதா ஆஸ்ரமத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்தல், 300 பேர் தங்கும் விடுதி கட்டுதல் மற்றும் குடிநீர் வினியோகம் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக ரூபாய் 13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், 2008 ஆம் ஆண்டு சுவாமிஜி படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு, அப்போதைய அரசாங்கத்தின் தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்தார். லோக் சேவா பவனில் இருந்து நீதிபதி நாயுடு ஆணையத்தின் அறிக்கை மற்றும் அது தொடர்பான கோப்புகள் காணாமல் போனதை, ‘நன்கு திட்டமிட்ட சதி’ என்று விவரித்தார்.
ஒடிசாவின் இளைஞர்கள் சுயமரியாதை வளர்த்துக் கொள்ளவும், மகத்துவத்தை அடையும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளவும் ‘வசூதைவ குடும்பகம்’ என்ற உலகளாவிய தத்துவத்தை தழுவி, அதன் மூலம் உலக நல்லிணக்க உணர்வை வளர்க்கவும் ஒடிசா முதலமைச்சர் வலியுறுத்தினார்.
– கட்டுரையாளர்: செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்