மழை வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் ஆகிவிட்டதா தமிழகம்?

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழைக்கான காலம் என்றாலும் மற்ற மாதங்களைவிட தொடர்ந்து நம்மை அச்சுறுத்தி வருவது டிசம்பர் தான். இந்த முறை வடகிழக்குப் பருவமழையை ஒட்டி போர்க்கால அடிப்படையில் விரிவான முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
சென்ற ஆட்சியின் போது 90 சதவிகிதம் என்று கூறி, பாதிப்பு ஏற்பட்டவுடன் 45 சதவீத பணிகள் தான் முடிந்திருந்தன என அமைச்சர் கே. என். நேரு கூறியதை யாரும் மறக்கவில்லை. மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை உடனடியாக வெளியேற்ற சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 1,300-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் (டிராக்டர்களில் பொருத்தப்பட்ட 500 அலகுகள் உட்பட) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
28 ரயில்வே பாலங்களின் கீழ் உள்ள பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 2,000 வெள்ள அபாயப் பகுதிகள் கண்டறியப்பட்டு, நிகழ்நேர மழையளவைக் கண்காணிக்க கூடுதலாக 1,000 தானியங்கி மழைமானிகள் (Automatic Rain Gauges) பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்குவதற்குப் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைக்க, சென்னையில் 220-க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களும், 111 சமூகச் சமையலறைகளும் தயார் நிலையில் உள்ளன.
பேரிடர் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் உதவ சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே தீபாவளிக்குப் பிறகு மழைப்பொழிவின் அளவை கணக்கிடுவதில் தவறு ஏற்படுவதாலும், எல்-நினோ (El Niño) மற்றும் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் காரணமாக, குறுகிய நேரத்தில் கொட்டும் அதீத கனமழையினால் சில இடங்களில் தற்காலிக நீர் தேக்கங்களும், போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்படுவதாலும், மக்கள் தங்களுக்குத் தாங்களே சிறு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இப்போதே தயாராக வேண்டும் என்பதுதான் எதார்த்த நிலை. இதை மனதில் வைத்துக் கொண்டு, அரசு நிர்வாகம், பேரிடர் மீட்புக் குழுக்களை தயார் செய்து, மக்களோடு இணைப்பு ஏற்படுத்தி இப்போது முதலே முழு விழிப்புடன் தயார் நிலையில் இயங்கி வர வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. தயாராகி விட்டதா தமிழக அரசு ?