கடல் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் வானைத் தொட்டு நிற்கும் மலைச்சிகரங்கள், இயற்கையின் பிரம்மாண்டமான கோட்டையைப் போல கம்பீரமாக சூழ்ந்திருக்கும், காற்று மிகவும் லேசாக இருக்கும். ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கும் போதும், நெஞ்சுப் பகுதியில் ஒரு லேசான பாரத்தையும், காற்றில்லாத திணறலையும் உணர முடியும். புயல் வீசும் போது, வானமும், பூமியும் வெண்ணிறமாக மாறி, கண்ணுக்கு எதிரே இருப்பவை தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் சுற்றிலும் கவிழும்.
சியாச்சின் என்பது “அழகும் ஆபத்தும், பிரம்மாண்டமும் பயமும் ஒரே இடத்தில் உறைந்துபோன ஒரு மாய உலகம்!”சால்டோரோ மலைத்தொடர் (Saltoro Ridge), சியாச்சின் பனிப்பாறையின் தென்மேற்கு எல்லையாக அமைந்து, இந்திய ராணுவத்தின் விநியோகப் பாதைகளை கண்காணிக்கும் முக்கியமான இடமாக இருந்தது.
இந்த மலைத்தொடர் சியாச்சின் பனிப்பாறையை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது. இதன் உச்சிப் பகுதிகள் அனைத்தையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், சியாச்சின் பள்ளத்தாக்கு முழுவதும் இந்தியாவின் முழுப் பாதுகாப்பில் இருந்தது.
அங்கு மனிதர்கள் யாரும் இருக்க முடியாது என்று இந்திய ராணுவம் நினைத்தது. இந்தச் சாதகத்தைப் பயன்படுத்திய பாகிஸ்தானின் சிறப்புப் படை (SSG) கமாண்டோக்கள், 1986ல் யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக அந்த உச்சியை அடைந்து காயித் போஸ்ட் முகாம் அமைத்தனர்.
அங்கிருந்து இந்திய ராணுவத்தின் உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதைகள், ரோந்துப் படைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கிகள் மற்றும் கனரக இயந்திரத் துப்பாக்கிகள் (Machine guns) மூலம் சுட்டனர். இதனால் இந்திய வீரர்களின் நடமாட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
1987 ஜூன் மாதம், ‘ஆபரேஷன் ராஜீவ்’ நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ராணுவத்தின் மிக வலுவாகப் பாதுகாக்கப்பட்டிருந்த காயித் போஸ்ட் நிலையை கைப்பற்ற இந்திய ராணுவம் முயன்றது.கடுமையான பனிப்பொழிவு காரணமாக அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.அப்போது நாயிப் சுபேதார் பானா சிங், ஐந்து வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்த முன்வந்தார்.
–40°C வரை வெப்பநிலை குறையக்கூடிய சூழலில்,பாகிஸ்தான் ராணுவம் எதிர்பாராத ஒரு திசையில் இருந்து, அவரது குழு முன்னேறியது. ஏறக்குறைய செங்குத்தாக இருந்த பனிச்சுவர் மற்றும் பனிச்சரிவுகளை கடந்து அவர்கள் மேலேறினர்.அதிகாலை நேரத்தில் எதிரிகளைத் திடீரெனத் தாக்கிய அவர்கள், கடுமையான நெருக்கமான போரில் ஈடுபட்டு அந்தக் கோட்டையை கைப்பற்றினர்.பின்னர் அந்த முக்கியமான ராணுவ நிலைக்கு “பானா போஸ்ட்” என்று அவரது பெயர் சூட்டப்பட்டது.
நாயிப் சுபேதார் பானா சிங்கின் இந்த அசாதாரண வீரத்திற்கும், தலைமைத்துவத்திற்கும் இந்தியாவின் உயரிய போர்க்கால வீர விருதான ‘பரம்வீர் சக்ரா’ வழங்கப்பட்டது. பஞ்சாப் அரசு அவரை அங்கு குடியேறுமாறு அழைத்தது. அவருக்கு 25 ஏக்கர் நிலம், ₹25 லட்சம் மற்றும் மாதம் ₹15,000 ஓய்வூதியம் வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் அவருக்குக் கிடைத்த ஓய்வூதியம் மாதம் வெறும் ₹168 மட்டுமே எனத் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் பானா சிங் ஜம்முவிலேயே தங்க முடிவு செய்தார்.“என் அப்பா, அம்மாவை விட்டுவிட்டு நான் எப்படி பஞ்சாபுக்குச் செல்வேன்?நான் இங்கே பிறந்தவன். இங்கேதான் இருப்பேன்.” பொருளாதார வசதிகளையோ, புகழையோ அவர் தேர்ந்தெடுக்கவில்லை.அவர் தேர்ந்தெடுத்தது தனது குடும்பம், மற்றும் சொந்த ஊர்.
சின்மய அம்ரித் யாத்திரையின் மிக நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று, ஜம்முவின் ஆர்.எஸ்புராவில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் அவர்களைச் சந்தித்தது.இந்தியா–பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடியால் கிராமத்தில் வாழ்கிறார் கேப்டன் பானா சிங். போர்க்களத்தில் அவரது வீரக்கதை வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை வியக்க வைக்கும் அளவுக்கு எளிமையானது.கடியாலில் அவரது வீட்டைத் தேடி கண்டுபிடிப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.
தெளிவான முகவரியோ, பெரிய பெயர்ப்பலகையோ எதுவும் இல்லை. அவருடைய பெயரில் அருகிலேயே ஒரு விளையாட்டு அரங்கம் இருந்தபோதிலும், பலருக்கும் அவரது வீடு எங்கே என்று தெரியவில்லை.கிராமப் பள்ளிக்கு அருகில் இருந்த சில பெண்களிடம் விசாரித்தபோது, அவரது வீடு பள்ளியின் அருகிலேயே இருப்பதாகக் காட்டினார்கள்.
ஒரு எளிமையான, அமைதியான வீடு.சென்னையிலிருந்து தன்னைச் சந்திக்க வந்திருப்பதைப் பார்த்து பானா சிங் மிகவும் மகிழ்ந்தார். எங்களை வரவேற்று, வந்ததற்கு நன்றி தெரிவித்தார். 1960-களில் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தரை சந்தித்த நினைவுகளையும், இளைஞர் முகாமுக்குச் சென்றதையும் நினைவுகூர்ந்தார்.
சின்மய அம்ரித் யாத்திரைக் குழுவினர் அவரிடம், “உங்களுடைய வீட்டிற்கு வருவதே எங்களுக்கு ஒரு தீர்த்த யாத்திரை”என்றனர்.மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக, அருணாசலப் பிரதேசத்தின் பாரம்பரிய வாள் (சௌரியம்) மற்றும் பகவத் கீதை(தர்மம், ஞானம் மற்றும் பலனை எதிர்பாராத கடமை அடையாளம்) அவருக்கு வழங்கினோம். அவர் மீண்டும் மீண்டும் கூறிய வார்த்தைகள்:“பாரதத்தை ஒன்றாக வைத்திருங்கள். பாரதத்தை ஒன்றாக வைத்திருங்கள்.”
போர்க்களத்தில் அவர் வெளிப்படுத்தியது அசாதாரணமான வீரமும், துணிச்சலும்.ஆனால் சாதாரண வாழ்க்கையில் அவர் வெளிப்படுத்தியது இன்னொரு வகையான வலிமை — புகழ், செல்வம், அந்தஸ்து ஆகியவற்றிலிருந்து விலகி நிற்கும் மனநிலை.
பனி உறைந்த சியாச்சின் சிகரத்தில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏற்றி,நாட்டின் மிக உயரிய ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற நாயிப் சுபேதார் பானா சிங் அவர்களை, சின்மய அம்ரித் யாத்திரைகுழுவினர் நேரில் சந்தித்த தருணம், வாழ்நாளின் மறக்க முடியாத பெருமிதம்!
கட்டுரையாளர்: சின்மயா மிஷன், தென்னிந்தியப் பிரிவு ஆச்சார்யர் மற்றும் தேசிய ஆலோசகர், அனைத்திந்திய சின்மயா யுவகேந்திரா
தமிழில்: மருத்துவர் சுபா