ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் செயல்பாடு

ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் நடத்தப்படும் ஆசிய விளையாட்டு போட்டிகள், ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும். 2026 செப்டம்பர் மாதம் 19 முதல் அக்டோபர் மாதம் 4ம் தேதிவரை, ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 46 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி முதன் முதலாக 1951-ம் ஆண்டு இந்தியாவின் புது தில்லியில் துவக்கப்பட்டது. ஒலிம்பிக்கிற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டு விழாவாக இது கருதப்படுகிறது.
2026ல், இந்திய அணி மொத்தம் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. ஆண்கள், பெண்கள் கபடி போட்டியின் இரு பிரிவிலும் தங்கத்தை தக்கவைத்து கொண்டதுடன், புதிய வரவான கிரிக்கெட்டின் இரு பிரிவிலும் தங்கத்தை வென்றது. கபடி, கிரிக்கெட் இரண்டிலும் பாகிஸ்தானை தோற்கடித்து ஆண்கள் அணியினர் தங்கம் வென்றனர்.
இந்தமுறை தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் 400 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலமும், 400 x 4 கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியையும், 400x 4 தொடர் ஒட்டத்தில் தங்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா உள்ளிட்ட வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
பெண்கள் வில்வித்தை பிரிவில் தங்கப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. கோல்ப் போட்டியில் பிரணவி உர்ஸ் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். கடந்த முறை 2023ம் ஆண்டு ஹாங்சோ நகரில் நடந்த போட்டியில் பெற்ற பதக்கங்களை விட, குறைந்த அளவிலான பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த முறை நமது வீரர்கள் அதிக அளவில் பங்கேற்ற நிலையில் பதக்க எண்ணிக்கை குறைந்தது ஏன் என்பது தொடர்பாக விளையாட்டு ஆர்வலர்கள் கேள்விக் கணைகளை எழுப்பியுள்ளனர். கடந்த முறை வென்ற 106 பதக்கங்களை விட, 21 பதக்கங்கள் குறைவாகும். குறிப்பாக 7 தங்கப் பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் தவற விட்டுள்ளனர்.
இம்முறை தடகளம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு பதக்கங்கள் வரவில்லை. தடகளம், துப்பாக்கிச் சுடுதல், பாட்மிண்டன் போன்ற நிச்சயம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கங்களை தவற விட்டதால், மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை குறைவானது. துப்பாக்கிச் சுடுதலில் கடந்த 2023-ல் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 22 பதக்கங்களை வென்று அசத்திய நிலையில், இம்முறை 3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனைகள் பதக்கம் பெறாமல் வெளியேறிய நிலையில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனுபாகர் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றினார். ஆறுதலாக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப்பிரிவில் சுருச்சி சிங், கமல்ஜீத் ஆகியோர் அடங்கிய ஜோடி மட்டுமே தங்கம் வென்றனர். தடகளத்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயத்தால் விலகிய நிலையில், ஜிந்தர்பால் சிங்கும் தங்கத்தை வெல்லத் தவறினார். நீளம் தாண்டுதல் போட்டியில் முரளி சங்கர், உயரம் தாண்டுதல் போட்டியில் சர்வேஷ் குஷாரே ஆகியோர் வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றனர்.
ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் நம்பிக்கை அளிக்கும் வீரராகத் திகழ்ந்த அவினாஷ் சேபிள், 4-வது இடத்தை மட்டுமே பிடித்தார். கிரண் பஹால், எம். பூவம்மா, பிராச்சி சவுத்ரி, வித்யா ராம்ராஜ் ஆகியோரைக் கொண்ட மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட அணி, தடகளப் பிரிவின் ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. கடந்தமுறை ஹாங்சோ போட்டியில் 6 தங்கப் பதக்கங்களை தடகளத்தில் வென்றிருந்த நிலையில், இம்முறை ஒரே ஒரு தங்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்திற்கும், போட்டிகள் நடைபெறும் இடத்திற்கும் இடையே உள்ள நீண்ட பயணங்கள், தாமதமான பேருந்துகள், குறைக்கப்பட்ட ஓய்வு நேரம், ஒரே நாளில் குறைந்த நேரத்தில் அதிக போட்டிகள் ஆகியவை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூடுதல் பதக்கங்களை வெல்ல முடியாமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாட்மிண்டனில் ஒரு பதக்கம் மட்டுமே இம்முறை கிடைத்தது. முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து உள்ளிட்ட இந்தியர்கள் பதக்கங்களை வெல்லவில்லை. அதேநேரத்தில் வில் வித்தையில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பியது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது. முக்கியமாக ரீகர்வ் பிரிவில் இந்திய வீரர்கள் 5 போட்டிகளிலும் பதக்கங்களை வென்றனர். இதில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கும்.
ஒட்டுமொத்தமாக இந்தமுறை, ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் குறைந்தாலும், நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறமைகள் வளர்ந்து உள்ளது என்பதை மறுக்க முடியாது. அடுத்தமுறை கத்தார் நாட்டின் தோஹாவில் 2030ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் அதற்கான முன்முயற்சிகளை இந்திய விளையாட்டு அமைச்சகம் இப்போதிருந்தே பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
கட்டுரையாளர்: பத்திரிகையாளர்