சில பயணங்கள்.. சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்…

12. உச்சி முதல்…

பாண்டிச்சேரியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பாரதியார், அரவிந்தர், என்று சொல்லலாம். இன்னொரு விசேஷத்தையும் சேர்த்துக் கொள்ளவும். அது வெயில். அப்படி பிரசித்தி பெற்ற ஒரு வெயில் நாளில், மாம்பலம் வாசுவின் அனுபவம் இது. இந்தக் காட்சியில் இருப்பவர்கள் நான்குபேர். வாசு, ஆர்.எஸ்.எஸ். ப்ரசாரக், அவருடைய தாய், தந்தையர். ப்ரசாரக்குக்கு இருபது ப்ளஸ் வயது இருக்கும். அப்போதுதான் அவர் சங்கத்தில் முழுநேர ஊழியராக வந்து சேர்ந்திருக்கிறார். அதில் அவரது தாய், தந்தையருக்கு விருப்பம் இல்லை. அவரை எப்படியாவது மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு அழைத்துப் போகவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்கள்.
காரியாலயத்தில் இருந்து இறங்கி, சாப்பிடப் போகும்போது அந்த வெயில் பிளக்கும் வீதியில், ப்ரசாரக் முன்னால் நடந்துபோகிறார். சற்றுத்தள்ளி பின்னால் மாம்பலம் வாசுவும், பெற்றோரும் பேசிக்கொண்டே போகிறார்கள். “நீ சொல்லுப்பா.. நீ சொல்லுப்பா!” என்று வாசுவிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்டபிறகு, வாசுவுக்கு மனது இளகி விடுகிறது. முன்னால் சென்று கொண்டிருந்த ப்ரசாரக்கை அணுகியும், வாசுவால் பேச முடியவில்லை. காரணம், மெல்லிய குரலில் “பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம், அர்ப்பணம் ஆவோம் அவள் தாளினினிலே, தூய மலர்கள் நாம்.” என்ற சங்கப் பாடலைப் பாடிக்கொண்டு அவர் நடக்கிறார். முகத்தில் வெயிலை மீறிய வெளிச்சம். அவர் பெயர் சண்முகநாதன் ஜி.
வருடங்கள் கடந்து விட்டன. இப்போது சண்முகநாதன் ஜி சங்கத்தின் படிநிலைகளில் உயர்ந்து பிராந்த ப்ரசாரக் ஆகி விட்டார். சென்னை பெசன்ட் நகர் ஷாகாவைப் பார்வையிட வந்தார். ஸ்ரீமஹாலட்சுமி கோயிலுக்குப் பின்புறத்தில் கோ சாலையும், வேத பாடசாலையும் இருக்கிறது. அதை ஒட்டியுள்ள காலி மனையில்தான் ஷாகா. வேத பாடசாலையில் படிக்கின்ற சிறுவர்கள் அதிலிருப்பார்கள். ஓடைக் குப்பத்துப் பையன்களும் உண்டு. மணலில் இருசாராரும் கட்டிப்பிடித்து உருண்டு காயப்படுத்திக் கொள்வார்கள், கபடி ஆட்டத்தில்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சண்முகநாதன்ஜிக்கு கண்கலங்கி விட்டது. “இதைத்தாம்பா செய்யணும், இதைத்தாம்பா செய்யணும் என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார். ஷாகா முடிந்து அவருடைய ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டேன். நாங்கள் ராகவன் வீட்டுக்கு வந்தோம். அங்கேதான் இரவு உணவு. அங்கிருந்த நண்பரிடம் சண்முகநாதன்ஜி என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். “நீங்கள் எல்லாரும் மஹாலட்சுமி கோயில் ஷாகாவிற்கு வந்திருக்கணும், காணக் கிடைக்காத காட்சி” என்று சொல்லும்போதே உணர்ச்சிவசப்பட்டார்.
அதிகமாக உணர்ச்சி வசப்படுவது நமது இயல்பு இல்லை. நான் சொன்னேன் “அதிலேயும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இவங்க அவங்க கிட்டேயிருந்து ஸ்லோகமெல்லாம் கத்துக்கிறாங்க. ஆனால் அவங்க இவங்ககிட்டேயிருந்து மெட்ராஸ் பாஷையைக் கத்துக்கிறாங்க…” என்று இழுத்தேன்.
ஜி என்னை முறைத்தார்.

துருவ நட்சத்திரம் பழனி சுப்பிரமணிய பிள்ளை / லலிதா ராம் / சொல்வனம்
பாலக்காடு மணி ஐயரோ, ‘சறுக்கி விட்டது தனக்குத் தெரிந்தால் போதும். எல்லோருக்கும் தெரியப்படுத்தி கச்சேரியின் சீரான ஓட்டத்தை குலைக்க தேவையில்லை’ என்ற அணுகுமுறையை பின்பற்றினார். ‘நான் வீட்டில் சாதகம் செய்யும் பொழுது, மூன்று/ஐந்து வரவேண்டிய இடத்தில் ஒரு ஐந்துக்கு பதில் நான்கை பாடிவிட்டால் நிறுத்தாதே, அடுத்த ஐந்தை ஆறாக பாடு, சரி பண்ணு. அடுத்த கச்சேரியில் பாடும் பொழுது, தப்பு வராமல் பார்த்துக் கொள் என்று அப்பா சொல்வார்’. ஒருவகையில் இந்த சமயோசிதம் வாய்ந்த அணுகுமுறையை மணி ஐயர் தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் இருந்து வாங்கிக் கொண்டார் எனலாம்.
கர்நாடக இசைக் கலைஞரான பழனி சுப்பிரமணிய பிள்ளை பற்றிய புத்தகம் இது. சாஸ்திரிய சங்கீதத்தில் பயிற்சி உள்ளவர்களுக்கும் பயிற்சி தேவைப்படுகிறவர்களுக்கும் இந்தப் புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்.
மிருதங்க கலைஞர் பழனி சுப்பிரமணிய பிள்ளையை நடுவாந்தரமாக வைத்துக் கொண்டு மான் பூண்டியா பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர் தஞ்சாவூர் பாணி, புதுக்கோட்டை பாணி என்று எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் ஒரு அதிர்ஷ்ட கலவை. லலிதா ராம் எழுதியிருப்பது புத்தகமல்ல புத்தகங்களின் வளாகம்.
தட்சிணாமூர்த்தி பிள்ளை பற்றி.
தாது வருஷம், வைகாசி 13ஆம் தேதி 6:30 மணிக்கு தன் நேரம் முடிஞ்சுரும்னு முன்னாலேயே எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கார். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வந்து சமாதி காரியமெல்லாம் செஞ்சு வச்சு ‘இவர் மரணம் அடையவில்லை ஜீவனை அடக்கி வைத்திருக்கிறார்’னு சொன்னார்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை / விகடன் பிரசுரம்
இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் மீது, 1984 ஆம் ஆண்டு மதுரை நகரில் ரயில் நிலையத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. கோபால்ஜியை ரயில் நிலையத்தின் படிகளில் இறங்கும் போது, பின்னால் இருந்து வெட்டியது ஒரு முஸ்லிம் தீவிரவாதி. தலையிலும், கழுத்திலும் ஆழமான காயம் ரத்தப்பெருக்கு. அந்தநிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். வந்து பார்த்த தலைமை மருத்துவர், முதலில் ரத்தத்தை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தையல் போடுங்கள், ரத்தம் வீணாகக் கூடாது, மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பொறி தட்டியது, இதே மாதிரி நிகழ்வு வேற எங்கேயோ நடந்திருக்கிறதே என்று குடைந்தேன். 1973 ஜூலை 18 சென்னை மூலக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தொழிற்சங்கத் தலைவர் வி.பி சிந்தன், குண்டர்களால் தாக்கப்பட்டு, வெட்டப்பட்டு மருத்துவமனைக்கு வந்தபோதும் இதே வாசகம் சொல்லப்பட்டது. முதலில் ரத்தத்தை நிறுத்த வேண்டும், பிறகுதான் மற்ற சிகிச்சைகள் எல்லாம்.
நீங்கள் காவியைச் சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது சிகப்போடு ஒன்றியவராக இருக்கலாம், எப்படி இருந்தாலும் உடல் என்று வரும்போது உங்களுக்கான அலோபதி மருத்துவம் ஒரே முறையில் தான் இருக்கும். உடலைப் பற்றிய விளக்கமாக இருக்கும். உண்மையில் உடல் என்பது என்ன, அதனுடைய பகுதிகள் என்ன, செயல்பாடு என்ன என்பதைப் பற்றி, ஒரு சிறப்பான புத்தகத்தைத் தயார் செய்து இருக்கிறார்கள் ஆனந்த விகடன் நிறுவனத்தார்.
தலையில் தொடங்கி கால் வரை ஒவ்வொரு பகுதிக்கும், விரிவான விறுவிறுப்பான கட்டுரைகள். அனுபவமும் திறமையும் கொண்ட டாக்டர்களை எழுத வைத்திருக்கிறார்கள்.
பிற உறுப்புகளின் வலியை உணர்கின்ற மூளை, தன் மீது அடிபட்டால் வலியாக உணர்வதில்லை. அறுவை சிகிச்சை செய்யும்போது மூளைக்கு என்று மரத்துப் போகும் ஊசி கூட போடுவதில்லை. நேரடியாக கத்தி தான். (பக்கம் 8)
தலை தோலின் கீழே சதை கிடையாது. இதனால் மென்மையான ஆயுதத்தால் தாக்கினால் கூட, வெட்டுக்காயம் ஏற்படும். தலையில் அடிப்படும் போதுதான், ரத்த சேதம் அதிகமாக ஏற்படுகிறது. தலையிலிருந்து ரத்தம் பெருகுவதை தடுக்க, காதுக்கு பக்கத்தில்தான் கட்டுப்போட வேண்டும். (பக்கம் 13)
மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை 20 ட்ரில்லியன், அதாவது 2,000 கோடியே கோடி. மூளையில் இருக்கும் நரம்புகளை எடுத்து ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வைத்தால், அந்த நீளத்திற்கு பூமியிலிருந்து சந்திர மண்டலம் வரை போய்விட்டு திரும்பலாம். ஆனால் எண்ணிக்கையோ, நீளமோ, பருமனோ முக்கியமல்ல. அதன் உள்ளே இயங்கும் சர்க்யூட்டுகள் தான் முக்கியம். கண் இமைக்காமல் ஒருவரை பார்க்க வேண்டுமானால் அதற்கு ஒரு சர்க்யூட். அப்படிப் பார்த்தால் கிளம்பும் பெருமூச்சை வெளியேற்ற இன்னொரு சர்க்யூட். (பக்கம் 6)
பரிணாம வளர்ச்சியின் போது, மனிதன் கொஞ்சம் அவசரப்பட்டு முன்கூட்டியே செய்துவிட்ட காரியம் நிமிர்ந்து நின்றதுதான். நிமிர்ந்து நிற்க தேவையான உறுப்பு முதுகெலும்பு. அது சரியான விகிதத்தில் வளர்ச்சி பெறுவதற்கு முன்னதாகவே ஆதி மனிதன் ஆர்வக்கோளாறால் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டான். இதனால் மனித உடலிலேயே பலவீனமான அதாவது மெக்கானிக்காக வீக்கான பகுதியாக இருக்கிறது முதுகெலும்பு. (பக்கம் 31)
மனித உடலின் அறிவியல் பெயர் ஹோமே சேப்பியன்ஸ். எனக்கு தெரியும். எனக்கு தெரியும் என்பதும் எனக்கு தெரியும் என்று இதற்கு அர்த்தம் (பக்கம் 52). கம்ப்யூட்டர்கள் இயங்குவது மின்னியல் அடிப்படையில், மூளை மின் வேதியல் அடிப்படையில் இயங்குகிறது (பக்கம் 54). உடம்பில் என்னென்ன வியாதி இருக்கிறது என்று ஒருவன் தோலை பார்த்தாலே டாக்டர்களுக்கு தெரிந்து விடும். அதனால் மருத்துவ உலகில் தோலை ஷோகேஸ் என்று குறிப்பிடுகிறார்கள் (பக்கம் 64).
ஏப்பம் விடும்போது வாய் வழியாக காஸ் வெளியே போவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஏப்பத்தின் போது காஸ் உள்ளே போகிறது. (பக்கம் 140) தொண்டைக் குழாயில் இருந்து ஆசனவாய் வரை உணவு, உடம்புக்குள் பயணம் செய்யும் பாதையை Gastro intestinal tract என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இதன் மொத்த நீளம் 30 அடி. பெயர் தான் சிறுகுடலே தவிர, சுருண்டு சுருண்டு போகும் இதன் நீளம் 20 அடி. உணவுக் குழாய், பெருங்குடல் ஆசனவாய் என்று உணவு செல்லக்கூடிய மற்ற உறுப்புகளை மொத்த நீளமோ 10 அடிதான் (பக்கம் 131).
இரைப்பைக்குள் போய் விழும் உணவை அமிலங்கள் தாக்கும்போது, அங்கே பல ரசாயன மாற்றங்கள் நடந்து ஹைட்ரஜன் சல்பைட், மீத்தேன், கரியமில வாயு என்று பலதரப்பட்ட கேஸ் உண்டாகின்றன. இந்த கேஸ் இறப்பையைத் தாண்டி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் கடந்து ஆசனவாய் வழியாக சவுண்டோடு பொது இடத்தில் வெளியேறும் போதுதான் சுற்றி இருப்பவர்களுக்கும் நமக்கும் ஒரு சேர சங்கடம் (பக்கம் 139).
எல்லா மூட்டுகளிலும் வலி என்ற படி எங்களிடம் வருபவர்களை முதலில் ஒரு பல் டாக்டர் கிட்ட போய் உங்கள் ஈறுகளில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சொல்வோம். அவர்கள் குழம்பிப் போவார்கள். ஆனால் ஈறுகள் பாதிக்கப்பட்டால், அங்குள்ள நச்சுப் பொருட்கள் உடலில் மூட்டுகளையும், தசைகளையும் பாதிக்கும் என்பது உண்மை (பக்கம் 148).

உடுமலைக்காரன் கதைகள்/ மஹேஷ் குமார்/ நோஷன் பிரஸ்.
உடுமலை என்பது உடுமலைப்பேட்டை. அந்த ஊர் பாஷையிலேயே நிகழ்ந்ததையும். நினைத்ததையும் சேர்த்து. பல கட்டுரைகளை எழுதித் தொகுத்து கொடுத்திருக்கிறார் மஹேஷ் குமார். இத்தகைய வகைகளை. வட்டார வழக்குகளை இலக்கியத்தில் கொண்டு வந்தவர் கி.ராஜநாராயணன். கோவில்பட்டி பகுதியில் இருந்து எழுதப்பட்ட எழுத்துக்களை ‘கரிசல் இலக்கியம்’ என்று சொல்வதுண்டு.
சிறப்பாக கி.ரா தொடங்கி வைத்த இந்த மரபு, பூமணியில் உச்சம் கண்டது. இதைத்தொடர்ந்து மற்றவர்கள் எழுதிய எழுத்து வைகோலைத் தின்று வெந்நீரை குடிப்பது போலத்தான் இருக்கிறது.
மஹேஷ் குமார்? இயற்கையான ஓட்டத்தில் இடைஞ்சலாக கொஞ்சம் செயற்கை. படிக்கலாம்.
தொடரும்…

 

கட்டுரையாளர் : சுப்பு