உத்தரப் பிரதேசம் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட லுலு மாலில் சமீபத்தில் சிலர் தொழுகை நடத்துவதைக் காணும் ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தற்போது உ.பி’யின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் ஒரு நபர் தலைமையிலான குழுவினர் தொழுகை நடத்தும் ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருவது அடுத்த புதிய சர்ச்சையை தூண்டியுள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ஒரு காத்திருப்பு அறையில் 10க்கும் மேற்பட்டவர்கள் தொழுகை நிகழ்த்தினர். ரயில்வே துறையிடம் இதற்கு எவ்வித முன்னனுமதியும் இன்றி அவர்கள் இதில் ஈடுபட்டனர். இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக லுலு மாலில் சிலர் தொழுகை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொது இடங்களில் ஒரு சார்பு மத வழிபாடுகள் நடத்துவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 16ம் தேதி, லூலூ மால் வளாகத்திற்குள் ராமாயணத்தின் சுந்தரகாண்டம் வாசிக்க முயன்ற ஹிந்து சமாஜ் கட்சியை சேர்ந்த மூன்று பேரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சர்ச்சை குறித்து லுலு மாலின் பொது மேலாளர் சமீர் வர்மா கூறுகையில், இந்த மாலில் எந்த பிரார்த்தனையும் நடத்த அனுமதி இல்லை. லுலு மால் அனைத்து மதங்களையும் மதிக்கிறது. வழிபாடுகள் இங்கு அனுமதிக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்க எங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.