பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் சத்தியமங்கலத்தில் நடத்திய ரகசிய கூட்டம்

‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தியது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு மாரத்தஹள்ளி புருக்பீல்டில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில், கடந்த 1ம் தேதி பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. ஹோட்டல் பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தொப்பி அணிந்த நபர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

குண்டுவெடிப்பு குற்றவாளிகளாக, கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த முஸவீர் ஷாகிப் ஹுசைன், அப்துல் மதின் தாஹா என, அடையாளம் கண்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக, சென்னை மண்ணடி அருகே முத்தையால்பேட்டையை சேர்ந்த அபுதாஹிர், ராயப்பேட்டை பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த லியாகத் அலி, வண்ணாரப்பேட்டை ரஹீம், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத், அவரது தந்தை அன்பு பக்ருதீன் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்த மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, பெங்களுரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டு வைத்தவர்கள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாரையும் அடையாளம் கண்டுள்ளோம். குண்டுவெடிப்பு குற்றவாளிகள், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தனியார் விடுதியில் தங்கித் தான் சதித் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த இடத்திற்கு பல முறை வந்துள்ளனர்.

இவர்களுக்கும், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்.,23ல், கார் குண்டுவெடிப்பு நடத்தி பலியான ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபினுக்கும் தொடர்பு உள்ளது. ஜமேஷா முபின் தலைமையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுதப் பயிற்சி குறித்தும் விவாதித்து உள்ளனர்.

இவர்களுக்கு தலைவனாக, இலங்கையில், 2019ல், ஈஸ்டர் அன்று தொடர் குண்டுவெடிப்பு நடத்தி, 270 பேரை கொன்ற சஹ்ரான் ஹாசிம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. சஹ்ரான் ஹாசிம் குண்டு வெடிப்பு நடத்தி பலியாவதற்கு முன், சென்னைக்கு பல முறை வந்துள்ளார். அவர் நடத்திய ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் தான், கோவையிலும், பெங்களூரிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.