புரட்டாசி மாசம் – என்ன சிறப்பு? – –ஜி. அசோக், மேட்டுப்பாளையம்
புரட்டாசியில் தான் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபடும் நவராத்திரி வருகிறது, பித்துருக்களை வழிபடும் மஹாளயபட்ச அமாவாசை நாட்கள் வருகின்றன, திருப்பதி பிரமோற்சவம் வருகிறது. புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
தீபாவளி திருநாள் − தீப ஒளி திருநாள் எது சரி? – வி. ராம்பிரபு, உளுந்தூர்பேட்டை
தீபாவளி என்பதே சரி. “ஆவளி” என்றால் வரிசை என்று அர்த்தம். தீபங்களின் வரிசை தீபாவளி. தமிழில் வாழ்த்துகிறோம் என்ற பெயரில் “தீப ஒளித் திருநாள்” என்று கூறுவது, அதன் சிறப்பை மட்டுப்படுத்துவதாகும்!
கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் போராடி ஃப்ளை துபாய் விமானத்தை மீட்ட இந்திய பைலட்டின் சாகசம் பற்றி? –ஹெச். கோபால கிருஷ்ணன், விருதுநகர்
எனக்கு அந்த நேரத்தில் போராடும் தைரியத்தை, வல்லமையை கொடுத்தது, அன்றாடம் நான் ஜெபிக்கும் “அனுமன் சாலிசா” என அவர் கூறியிருப்பது, சர்வதேச அரங்கில் பலரின் புருவங்களை உயர வைத்திருக்கிறது..
விமானி சுமித் மச்சாரை கத்தியால் குத்திய ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியின் பெயர் எங்கும் சொல்லப்படவில்லையே? – –இ.கிருத்திகா, இராமநாதபுரம்
அவரின் பெயரை சொன்னால் ஒரு சமூகமே குற்றவாளி ஆக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். ஆனால் இதுவரை ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு இடம் அளிக்காது வந்த ஓமன் இப்போது கவலைப்பட துவங்கியுள்ளதாம் !
நாங்கள் ஆட்சியில் இருந்து விலகும் போது, அடுத்து நீங்கள்தான் என்று தன்னிடம் மோடியும், அமித்ஷாவும் கூறியதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் கூறியிருக்கிறாரே! –வி.கே. காயத்திரி, திருச்சி
இதுவரை மக்களிடம் தான் பொய் சொன்னார், நாம் ஆமோதித்தோம், இப்போது நம்மிடமே அந்த வித்தையை காட்டுகிறாரே என்கிறார்களாம் அந்த காங்கிரஸ்காரர்கள்! மோடியும், அமித்ஷாவும் இதை ரசிக்கிறார்களாம்!
இண்டி கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு பினராயி விஜயன், ஸ்டாலின், விஜய் ஆகியோர் செல்லவில்லையே? –ஆர். அம்பிகா, சேலம்
தில்லியிலும், மும்பையிலும் கரப்பான் கட்சி மற்றும் ஆம் ஆத்மியுடன் அடி வாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரசின் கூட்டணிக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கலாம்!
இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் திமுக, தவெக இருதரப்பினரும் வசைமொழியில் இறங்கி உள்ளனரே? – –ஜி. பாக்யம், பாண்டிச்சேரி
வசைமொழி பொழிவில் கூட, திமுகவுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று தவெக நிரூபிக்கிறதோ என்னவோ? இது தமிழகத்தின் துரதிஷ்டம்!