சுவாமி ராம தீர்த்தர்
சுவாமி ராம தீர்த்தர் ஹிந்துத்துவத்தின் தத்துவ ஞானி ஆவார். 1893-ல் சுவாமி விவேகானந்தரும், 1920-ல் பரமஹம்ச யோகானந்தரும், அமெரிக்காவிற்குப் பயணம் செய்த நிலையில், 1902-ம் ஆண்டு அங்கு சொற்பொழிவாற்றிய முதல் குறிப்பிடத்தக்க ஹிந்து மத தத்துவ ஞானிகளில் இவரும், ஒருவர்.
தனது அமெரிக்கப் பயணங்களின் போது, சுவாமி ராம தீர்த்தர் “நடைமுறை வேதாந்தம், இந்திய இளைஞர்களின் கல்வி” என்ற கருத்தைப் பற்றி அடிக்கடி பேசினார். அவர் இளம் இந்தியர்களை, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அழைத்து வர அழைப்பு விடுத்து, அங்குப் பயில வரும் மற்றும் இந்திய மாணவர்களுக்கான
கல்வி உதவித்தொகைகளை கிடைக்க செய்யும் நிறுவனங்களை ஏற்பாடு செய்தார்.
சுவாமி ராம தீர்த்தர், இன்றைய பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரான்வாலா மாவட்டத்தின் முரளிவாலா கிராமத்தில், பண்டிட் ஹிரானந்த் கோஸ்வாமிக்கு மகனாக, 1873 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி தீபாவளி அன்று பிறந்தார். அவருக்கு சில நாட்களே ஆனபோது, அவரது தாயார் இறந்து விட்டார் மேலும் அவர் தனது மூத்த சகோதரர் கொசைன் குருதாஸால் வளர்க்கப்பட்டார். லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு, லாகூரில் உள்ள ஃபோர்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் கணிதப் பேராசிரியரானார்.
1897 ஆம் ஆண்டு, லாகூரில் சுவாமி விவேகானந்தருடன் ஏற்பட்ட ஒரு தற்செயலான சந்திப்பு, பிற்காலத்தில் அவர் ஒரு சந்நியாசி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு உத்வேகம் அளித்தது. கிருஷ்ணர் மற்றும் அத்வைத வேதாந்தம் பற்றிய தனது சொற்பொழிவுகளுக்காக நன்கு அறியப்பட்ட அவர், 1899 ஆம் ஆண்டு தீபாவளி அன்று துறவி ஆனார். தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பேராசிரியர் பதவியைத் துறந்தார்.
“பெண்கள், குழந்தைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் கல்வியைப் புறக்கணிப்பது, நம்மைத் தாங்கும் கிளைகளை வெட்டுவது போன்றது – இல்லை, அது தேசியம் எனும் மரத்தின் வேர்களுக்கு மரண அடி கொடுப்பது போன்றது” என்று கூறினார்.
1906-ல், அவர் பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இமயமலையின் அடிவாரத்திற்குச் சென்று ரிஷிகேஷுக்கு அருகிலுள்ள வசிஷ்ட ஆசிரமத்தில் குடியேறினார். சுவாமி ராம தீர்த்தர் 17 அக்டோபர் 1906 அன்று காலமானார்.