நாடெங்கும் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள், கடந்த 9ஆம் தேதி வெளியாகியது. அதன்படி தமிழகத்தில் தவெக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் பாஜக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றுள்ளன. புதுச்சேரியில் பாஜக ஆதரவு NR காங்கிரஸ் ஒரு தொகுதியையும், அஸ்ஸாமில் பாஜக ஒரு மக்களவைத் தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் இல்லாமலே சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற கட்சி தவெக என்பதால், இது காங்கிரஸின் வெற்றியாகாது.
மொத்தமாக தமிழகம் தவிர மற்ற பகுதிகளில் பாஜகவே வெற்றிக் கொடி நாட்டி உள்ளது. பாஜக பெற்றிருக்கும் வெற்றி அசாத்தியமானது. அதற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசத்தை, அது நிறுவி உள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு பெற்ற வாக்குகளைவிட, மதுராந்தகத்தில் 8,658 வாக்குகள் கூடுதலாகவும், தாராபுரத்தில் 20,403 கூடுதலாகவும் பெற்று தவெக தனது ஆட்சிக்கு வலுசேர்த்துள்ளது.
அதேசமயம் சட்டசபையை நடக்கவிடாமலும், பொதுவெளியில் ஆபாசமாகவும் பேசி வந்த திமுக, ஐந்து மாதங்களுக்கு முன் பெற்ற ஓட்டுகளை விட 9,064 ஓட்டுகள் குறைவாக மதுராந்தகத்திலும், தாராபுரத்தில் 7,003 ஓட்டுகள் குறைவாகவும் பெற்றிருக்கிறது. உதயநிதியின் தரக்குறைவான தலைமைக்கு மக்கள் கொடுத்த அடி இது. அதிமுகவின் ஜீவன் என்பதே திமுக எதிர்ப்பு அரசியல் தான்.
அதிமுக உருவாகி 54 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த தேர்தலில் தான் திமுக எதிர்ப்பை சுத்தமாக கைவிட்டு, தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. விளைவு, ஐந்தே மாதத்தில் தாராபுரத்தில் 35,820 ஓட்டுகளையும், மதுராந்தகத்தில் 23,896 ஓட்டுகளையும் பறி கொடுத்துள்ளது.
தனித்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டுகள் கால் காசுக்கு பிரயோஜனம் அற்றவர்கள் என்பதை மக்கள் அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.
ஆகவே தீயசக்தி திமுகவை எதிர்க்க, இன்றைக்கு தவெகவை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மக்கள் தள்ளிவிடப்பட்டு இருக்கிறார்கள். தவெகவுக்கு கிடைத்த இந்த வெற்றி, ஆட்சிக்கு வலுசேர்த்திருக்கிறது என்றாலும், இது முழுமையான மக்கள் அங்கீகாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதை அக்கட்சி புரிந்து கொள்வது நல்லது.
திமுக எதிர்ப்பு மட்டுமே தவெகவின் பலமாக இருக்கிறது. திமுக எதிர்ப்பில் விலகாமல், ஆளும் கட்சியின் அவலங்களை எதிர்க்கும் கட்சி, தவெகவிற்கு சவாலாக மாற முடியும்.