அண்மையில் சங்க கார்யகர்த்தர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். புதிதாக திருமணம் முடித்த அவருக்கு குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) தரக் கோரி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
பின்னர் அது சம்பந்தமாக அலுவலகத்திற்குச் சென்று கேட்ட போது, “உங்களின் கேஸ் கனெக்சன் ரசீது கொண்டு வாருங்கள்” என்று அவர்கள் கூறினார்களாம். அதற்கு அவர், “என்னிடம் ரேஷன் கார்டே இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி எனக்கு கேஸ் கனெக்சன் கிடைக்கும்?” என்று கேட்டுள்ளார்.
ஆனால் அந்த தாலுகா அலுவலகத்திலோ, “நீங்கள் உடனடியாகச் சென்று முதலில் கேஸ் கனெக்சனை பதிவு செய்யுங்கள். அவர்கள் கொடுக்கும் ரசீதைக் கொண்டு வந்து கொடுத்தால், உங்களுக்கு அடுத்ததாக ரேஷன் கார்டு கொடுப்பது பற்றி பரிசீலிக்க முடியும்” என்று கூறினார்களாம்.
இதில் வேடிக்கை என்ன என்றால், மத்திய அரசாங்கத்தின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கொடுக்கக்கூடிய இலவச கேஸ் கனெக்சன் பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதில், இங்கு உள்ள திராவிட மாடல் அரசாங்கங்கள் மிகத் தெளிவாக உள்ளதுதான்!
இவர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் இலவச எரிவாயு இணைப்பு கிடைத்து விட்டால், அவர்களுக்கு வாக்கு கிடைக்காமல் போய்விடும். இதை மனதில் கொண்டு இந்த கேஸ் பதிவை செய்யச் சொல்கிறார்கள். ரேஷன் கார்டு இருந்தால் அதன் மூலம் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் இலவச கேஸ் இணைப்புக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் முன்பே பதிவு செய்திருந்தால், இதற்குத் தகுதி கிடையாது.
மத்திய அரசின் இலவச எரிவாயு இணைப்பு, ஏழை மக்களுக்குக் கிடைத்து விட்டால், அதன் பின்னர் அந்த வீட்டின் வாக்குகள் தமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக, இதுவரை ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளும், இப்பொழுது இருக்கக் கூடிய ஆட்சியும் தொடர்ந்து இப்படி மக்களை ஏமாற்றி வருகின்றன. ஏற்கனவே மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி அல்லது தங்கள் புகைப்படத்தை ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து வரும் நிலை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையும் நாம் அன்றாடம் பார்த்தே வருகிறோம்.
மத்திய அரசின் திட்டங்களால் ஏழை மக்கள் இங்கே பயனடைந்துவிடக் கூடாது என்பதில், இவர்களுக்கு இருக்கும் குரூர புத்தியைக் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம்தான் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.
இதுபோல் மேலும் இரண்டு விஷயங்களை அந்தக் காரியகர்த்தர் வருத்தத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவை குறித்து பின்னர் வரும் இதழில் தெரிவிக்கிறேன்.
கட்டுரையாளர்: தென் பாரத ஊடகத்துறை பொறுப்பாளர், ஆர்.எஸ்.எஸ்.