பம்மல் சம்பந்தம் முதலியார்

தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடகஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத்திறமை வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் குறித்த சில அரிய தகவல்கள்:

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந்தவர். சிறுவயது முதலே, புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பார். அம்மாவிடம் புராணக் கதைகளை கேட்பார். சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் பணியாற்றினார். ஆங்கில நாடகங்கள் அதிகம் பார்ப்பார். பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் இருப்பதை அறிந்ததும், இவருக்கு நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது. சுகுண விலாஸ் சபா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்றுஅழைக்கச் செய்தார். 22வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட், மெக்பெத் உட்பட பல நாடகங்கள், ஹிந்தி நாடகங்கள் பலவற்றை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.

94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி, சுலோசனா போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவரது 30 தமிழ் நூல்கள், 30 ஆங்கில நூல்களை தமிழகஅரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது. சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.