நக்சல் ஒழிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி…

2014-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி. டெல்லியில் உள்ள ஒரு ராணுவ கட்டுப்பாட்டு அறைக்குள், சிவப்பு நிற வரைபடம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அது எதிரி நாட்டின் வரைபடம் அல்ல. பாரதத்தின் உள்ளிருக்கும் நக்சல் பயங்கரவாதிகள், பாரதியர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் மாவட்டங்களின் வரைபடம் அது. வரைபடத்தை வைத்து ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையின் தொடர்ச்சி பிரதமர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அடுத்த காட்சி இது: பிரதமர் அலுவலகத்தின் ஒரு ரகசிய அறை.
தலைமைப் பொறுப்பில் நரேந்திர மோடி. அவருக்கு அருகில் அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மேசையின் மறுபுறம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா, ஐ.பி, என்.ஐ.ஏ, சி.ஆர்.பி.எப் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கே இருந்தனர். ஆலோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.
கூட்ட அரங்கில் இருந்த திரையில் ஒரு வரைபடம் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது. அதுதான் “Red Corridor” — சிவப்பு வழித்தடம். நக்சல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 126 மாவட்டங்கள், அந்தப் படத்தில் ஒளிர்ந்தன. பாரத நாட்டின் கிழக்குப் பகுதிகளிலிருந்து பஸ்தர் வரை — அடர்ந்த காடுகள், மலைகள், சிதைந்த சாலைகள், படமாக்கப்பட்டு, ‘எங்களை மீட்பார் இல்லையா?’ என்று பரிதாபமாக கூடியிருந்தவர்களை கேட்பது போல் இருந்தது. காரணம், அங்கு தான், அந்த நிலங்களின் அடியில்தான், எண்ணற்ற வகையான
கனிம வளங்கள் குவிந்து கிடைக்கின்றன நிலக்கரி, இரும்புத் தாது, பாக்சைட், மாங்கனீஸ் போன்றவை. பாரதிய கனிம வளத்தின் இதயப் பகுதி இந்த மாவட்டங்கள்.
இந்தக் கனிம வளங்களை உபயோகத்திற்கு கொண்டு வந்தால், அப்பகுதி மக்களும் வளம் பெறுவார்கள், பாரதம் வளம் பெறும். ஆனால் அது நடந்து விடக்கூடாது, அதுவே நக்சல்களின் திட்டம். அதற்காகவே அவர்களுக்கு அன்னிய நாடுகள் பணம் கொடுத்து ஆதரவளித்து வருகின்றன. நக்சல்களும் அவர்கள் வேலையை சிறப்பாகவே செய்து வந்தனர். அப்பகுதி மக்களை ஏழைகளாகவே படிப்பறிவு இல்லாதவர்களாகவே பார்த்துக் கொண்டனர். பள்ளிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, மின்சாரம் இல்லை, வங்கிகள் இல்லை, தபால் நிலையங்கள் இல்லை. உண்மையை சொல்வதென்றால், மாவோயிஸ்டுகள் அங்கு அரசுக்கு இணையான ஒரு மாற்று அரசாங்கத்தையே உருவாக்கியிருந்தனர். அவர்களை மீறி, அங்கு எதுவும் நடந்து விட முடியாது.
வெளிநாடுகளுடனும், மாவோயிஸ்டுகளுக்கு எண்ணற்ற தொடர்புகள் இருந்தன. பிலிப்பைன்ஸ், துருக்கி, மியான்மர், நேபாளம் என்ற சாதாரண நாடுகளில் இருந்து சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் வரை உறவுகள் இருந்தன. வெளிநாட்டு நிதியும், ஆயுதங்களும் குறைவில்லாமல் கிடைத்தன.
இவர்களின் அட்டூழியத்தால், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப் பட்டனர். 3,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். ஆயுதம் ஏந்திய ஒரு நக்சலை வீழ்த்தினால், மற்றொருவன் மீண்டும் வந்தான். காடுகள் இன்னும் நக்சல் அச்சத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அந்தப் பகுதிகள் நக்சல் ராஜ்ஜியத்திலிருந்து பாரத அரசின் நிர்வாகத்திற்குள் வரவேண்டும் என்ற விஷயங்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2017ல், National Policy and Action Plan — தேசியக் கொள்கை மற்றும் செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.
வெறும் குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் அல்லாமல் – பாதுகாப்பு, வளர்ச்சி, உரிமைகள், நல்லாட்சி என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை வடிவமைக்கப்பட்டது. மக்களை அரசின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்கள் உடனான இணைப்பை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்று திட்டங்கள் தீட்டப்பட்டன. இத்திட்டங்களுக்கு சமாதன் (SAMADHAN) என்று பெயர் சூட்டப்பட்டது.
திட்டத்திற்கான அணுகுமுறை முடிவு செய்யப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய காவல் நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டன. நிதி ஆதாரங்கள் அதிகரிக்கப்பட்டு, பகுதி வாரியாக உளவுத்தகவல் பரிமாற்றத்திற்கு அதிக நபர்களும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது. துணை ராணுவப் படையினர் காடுகளுக்குள் சென்றனர். மாநில காவல்துறைகள் உள்ளூர் அளவில் வேட்டையைத் தீவிரப்படுத்தின. பாதுகாப்பு நிலையங்கள் அதிகரிக்கப்பட்டன. பாதுகாப்பு முகாம்கள் காடுகளின் உட்பகுதிக்கே நகர்த்தப்பட்டன. சிவப்பு நிறத்தில் இருந்த வரைபடம் மெதுவாகச் சுருங்கத் தொடங்கியது.
2019 – உள்துறை அமைச்சராகிறார் அமித்ஷா. அவரின் வழிகாட்டுதலில் நடவடிக்கைகள் மேலும் வேகமடைந்தன. என்.ஐ.ஏ நக்சல் அமைப்புகளின் நிதி அமைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்டன. ஈ.டி அவர்களுடன் தொடர்புடைய சொத்துகளை முடக்கியது. நக்சல்கள் ஒன்று சரணடைய வேண்டும், இல்லையேல் இறைவனிடம் சரணடைய வைக்கப்படுவார்கள் என்ற செய்தி அவர்களுக்கு அனுப்பப்படுகிறது. சரணடையும் நச்சல்களுக்கு மாற்று வாழ்க்கை பாதை அமைத்துக் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது. இதற்காக படிப்படியாக கால நிர்ணயம் செய்யப்பட்டு, இறுதி நாள் 31 மார்ச் 2026 என்று அமித்ஷாவால் அறிவிக்கப்படுகிறது. அதற்குள் நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நாட்டு மக்களுக்கும் செய்தி சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு நக்சலுக்கும் செய்தி போய் சேருவது உறுதி செய்யப்படுகிறது. அவ்வளவுதான், விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகள் போல, அடுத்தடுத்து பலர் சரணடைகிறார்கள். ஒரு சிலர் திமிர்த்தனத்தை காட்டுகிறார்கள். அவர்களை அரசின் பிடியில் கொண்டு வர எண்ணற்ற ஆபரேஷன்கள் நடத்தப்படுகின்றன. ஆப்ரேஷன் டபுள் புள், ஆக்டோபஸ், சக்கரபந்தா, ப்ளாக் பாரஸ்ட் என்று ஒவ்வொரு நடவடிக்கையும் நக்சல்களின் மனவலிமையை சூறையாடின.
எல்லாம் முடிந்தது. கொஞ்சமே கொஞ்சம் மிச்ச சொச்சம். அவற்றையும் முடிக்க வேண்டும். 2025ல் 21 நாட்கள் நீடித்த ஆப்ரேஷன் ப்ளாக் பாரஸ்ட் அவற்றையும் செய்து முடித்தது. CoBRA, சி.ஆர்.பி.எப் சத்தீஸ்கர் மாநில காவல்துறை என அனைத்து படைகளும் இணைந்து நக்சல்களின் கோட்டையை உடைக்கத் தொடங்கினர். தலைவனுக்கு எல்லாம் தலைவனாக இருந்த மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு வீழ்ந்தார்.
ஆம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 31 மார்ச் 2026 க்குள் அனைத்து நச்சல்களும் கதம் கதம். அதன் பின்னர், நிர்வாகம் காடுகளுக்குள் நுழைந்தது. மக்கள் மகிழ்வோடு ஒத்துழைப்பு நல்கினர். வரலாறு காணாத வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
15,189 கி.மீ. சாலைகள் போடப்பட்டன. 9,497 மொபைல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. 44,728 கிராமங்கள் இணைக்கப்பட்டன. 1,804 வங்கிக் கிளைகள் துவங்கப்பட்டு, 1,321 ATM-கள் நிறுவப்பட்டன. 6,025 தபால் நிலையங்கள் நிறுவப்பட்டன. 179 ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள், 47 ITI-கள், 49 திறன் மேம்பாட்டு மையங்கள். 90,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி என்று வளர்ச்சியின் முன்னெடுப்பால், நக்சல் ஆளுகையில் இருந்த மாவட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டு முழுவதாக வந்து சேர்ந்து இனி எந்த மாவட்டமும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இல்லை. ஆயுதம் ஏந்திய நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்தே ஆகஸ்ட் 15, 2026 செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஒரு புதிய எச்சரிக்கையை முன்வைத்தார்: திமாகி நக்சல் சிந்தனையில் இருப்பவர்களையும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அது. அதுவும் நடக்கும்!  

 

துடைத்தெறியப்பட்ட நக்சலைட்

 

இடதுசாரி பயங்கரவாதம் எனப்படும் நக்சல்பாரி இயக்கங்கள், 1967-ல் மேற்குவங்கத்தில் முளைத்தது. மேற்குவங்கம், ஒரிசா, மஹாராஷ்டிரா, பிஹார், சத்தீஸ்கர், ஆந்திரா என்று வளர்ந்தது. தமிழ்நாடும் சில ஆண்டுகளுக்கு நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. 2004ம் ஆண்டு, நக்சல் ஆதிக்கம் உச்சத்தை அடைந்தது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்கள் ‘சிவப்பு காரிடார்’ என அழைக்கப்பட்டது. 2004 −- 2014 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 17,000-க்கும் மேற்பட்ட நக்சல் தாக்குதல்கள் நடைபெற்றன. இவற்றில் பாதுகாப்பு படையினர் 1,900 பேரும், பொதுமக்கள் 5,000 பேரும் கொல்லப்பட்டனர்.
2014-ல், நாட்டில் நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 126 ஆக இருந்தது. பல கொடூரங்களை நிகழ்த்திய நக்சல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு உறுதி காட்டவில்லை.
இப்படியான ஒரு சூழலில் தான், 2014ல் மோடி அரசு பதவியேற்று, ஆயுதம் ஏந்திய நக்சல்கள் இன்று முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்திய 26 மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆயுதமேந்திய நக்சல்கள் போய் விட்டார்கள். ஆனால் அறிவுசார் நக்சல்கள், வன்முறையை தூண்ட முயற்சி செய்து வருகிறார்கள். இந்த அறிவுசார் நக்சல்களை கண்டறிந்து அவர்களின் சதியை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.
இந்த அறிவுசார் நக்சல்கள், நியாயமான போராட்டங்களில் ஊடுருவி, அவற்றை திசைத் திருப்பி, அப்பாவிகளை பகடைக்காயாக்கி, தங்களது சுயநல திட்டங்களை நிறைவேற்றி கொள்வதில் கை தேர்ந்தவர்கள். இது பற்றி மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசே தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நக்சல் சிந்தனையாளர்கள், கல்வி நிலையங்கள் சமூக அமைப்புகள் என்று பல இடங்களில் ஊடுருவியுள்ளார்கள். அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகிறார்கள் இவர்கள் ஆயுதமேந்திய நக்ஸல்களை விட, ஆபத்தானவர்கள் என்று தெரிவித்தது. சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், மக்களை குழப்பி, தூண்டி விடுகிறார்கள் என்று தெரிவித்தது. 2010-ல் நக்சல் தாக்குதலில், 76 படை வீரர்கள் கொல்லப்பட்ட பிறகும் கூட, அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கக் தவறினார். மாறாக “நக்சல்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், ஆயுதங்களை கீழே போடுமாறு நான் கேட்க மாட்டேன், ஏனெனில் நீங்கள் செய்ய மாட்டீர்கள், பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்” என்று கெஞ்சினார்.
காட்டில் நக்சலைட் கொல்லப்பட்டால் கண்ணீர் வடிக்கும் இந்த அறிவுசார் நக்சல்கள், நமது பாதுகாப்புப் படை வீரர்கள் புல்வாமாவில் கொல்லப்பட்ட போதும், சாமான்ய சுற்றுலா பயணிகள் மதத்தின் பேரில் பஹல்காமில் கொல்லப்பட்ட போதும், பயங்கரவாதிகளையும், பாகிஸ்தானையும் கண்டித்து அறிக்கை கூட வெளியிடவில்லை. இப்படிப்பட்ட கும்பலின் சதியை அம்பலப்படுத்துவது ஒவ்வொரு தேசபக்தரின் கடமை. 