சமூகக் கோபம் – அறநெறி சார்ந்து, ஆத்திரம் சார்ந்து…!

சம்பவம்1: சமீபத்தில், சுற்றுலாப் பயணியாக கார்கில் பகுதிக்கு சென்ற ஸ்ருதி பதானா என்ற பெண்மணி, சில பாதுகாப்பு காரணங்களால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தடுத்து நிறுத்தப்படுகிறார். அந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒத்துழைப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பு படை வீரர்களுடன் சண்டைக்கு செல்வதோடு, ராணுவத்தினர் நீங்கள் எங்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கூப்பாடு போடுகிறார். இவ்வளவுக்குப் பிறகும் அங்கிருந்த உயர் அதிகாரிகள் அந்தப் பெண்ணை மரியாதையாகவே நடத்துகிறார்கள்.

சம்பவம் 2: தஞ்சையில் ஆகாஷ் என்ற இளைஞர் தன்னை தாக்கிய காவல்துறையினர் ஒருவரை திருப்பித் தாக்குகிறார். காவல்துறையினர் அந்த இளைஞரை அடித்து இழுத்துச் செல்கிறார்கள். நடந்தது இதுதான். தஞ்சையில் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கிறார்கள் வி.சி.க.வினர். காவல்துறை அதை அகற்றுகிறது. அதை எதிர்த்து தஞ்சாவூரின் முக்கிய சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபடுகிறார்கள் அக்கட்சியினர். அந்த நேரம் அங்கு வரும் இளைஞராக ஆகாஷ் தனக்கு வழி விடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடமும், காவல்துறையிடம் கோரிக்கை வைக்க, வாய் வார்த்தைகள் தகராறாக மாறி, காவல்துறை அவரை அடிக்க அவர் திருப்பி அடிக்கிறார். காவல்துறை அவரை கைது செய்கிறது.

முதல் சம்பவத்தில் இளைஞராக தன்னை சொல்லும் ஒருவர் ராணுவத்தை எதிர்த்து பேசுகிறார். அவர் சட்டத்தை மதிக்க தயாராக இல்லை. ஆனாலும் ராணுவம் அவரிடம் மரியாதையாக நடந்து கொள்கிறது. அத்துமீறவில்லை. இரண்டாவது சம்பவத்தில், காவல்துறையை எதிர்த்துப் பேசும் இளைஞர் தவறு செய்யாதவர். ஆனாலும் காவல்துறை அவரிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது. இதில் கோபப்படுவர்களுக்கு பாடம் இருக்கிறது. தமிழக காவல்துறைக்கு அதிகம் பாடம் இருக்கிறது திருந்தட்டும் அவர்கள்! தன்னை அடித்த காவல்துறை அதிகாரியை திருப்பி அடிக்கிறார். காவல்துறை தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவரை தண்டிக்கிறது. காவல்துறை தவறு செய்யாத ஒருவரிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது.

ஒரு நொடி கோபம், ஒருவரின் தேச விரோதத்தனத்தை உரித்துக் காட்டி இருக்கிறது, மற்றொருவரின் நியாயமான சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறது. ராணுவத்தின் கண்ணியத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழக காவல்துறையின் அடாவடி போக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இரண்டு சம்பவங்களிலும் நமக்கும் பாடம் இருக்கிறது. யாராக இருந்தாலும் ஒரு நொடி கோபம், கோபப்படுபவரை தாழ்த்தி விடும். அறம் சார்ந்த கோபம் என்றால், வெளியேறி வரலாம். ஆத்திரத்தால் வந்த கோபம் என்றால் நாம் மூழ்குவது உறுதி!