வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு வானிலிருந்து வந்த ‘காவலன்’

வீட்டைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வெள்ளம். வெளியேற வழியில்லை. சாலைகள் இருந்த இடத்தில், சீறிப்பாயும் தண்ணீர். உதவி கேட்டு காத்திருக்கும் குடும்பங்கள். இப்படியொரு சூழலில் மீட்புக் குழுவினருக்கு முதலில் எழும் கேள்வி — “யார் எங்கே சிக்கியிருக்கிறார்கள்?”
குஜராத்தின் தோல்கா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம், இந்தக் கேள்வியை மிகப்பெரிய சவாலாக மாற்றியது. கனமழையால் வீடுகள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. பல குடும்பங்கள் வீடுகளின் மாடிகளிலும், பள்ளிகளிலும் தஞ்சமடைந்தனர். சாலைகள் நீரில் மூழ்கியதால், வழக்கமான வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்வதும் கடினமானது. அந்த நேரத்தில், தரையில் செல்ல முடியாத இடங்களை வானிலிருந்து தேடத் தொடங்கின ட்ரோன்கள்.
குஜராத்தின் மெஹ்சானாவைச் சேர்ந்த பிரைம் யு.ஏ.வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ட்ரோன்கள், தோல்காவில் சிக்கியிருந்த மக்களைக் கண்டறியவும், வெள்ள நிலவரத்தை மதிப்பிடவும், மீட்புக் குழுவினரால் சென்றடைய முடியாத இடங்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவின.
வெள்ள மீட்புப் பணியில் முக்கியமான சவால், பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், தரையில் இருந்து நிலைமையை முழுமையாக அறிந்துகொள்வது சிரமமாக இருந்தது. ட்ரோன்களின் நேரலை வான்வழிக் காட்சிகள், இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்தன. வீடுகளின் மாடிகளில் சிக்கியவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் வெள்ளம் அதிகமாக சூழ்ந்தப் பகுதிகளை மேலிருந்து கண்டறிய முடிந்தது.
இதன் மூலம் எங்கு முதலில் செல்ல வேண்டும், எந்தப் பாதை பாதுகாப்பானது, எங்கு உடனடி உதவி தேவை என்பதை மீட்புக் குழுவினர் விரைவாகத் தீர்மானிக்க முடிந்தது. சூரியன் மறைந்த பிறகும், ட்ரோன்களின் கண்காணிப்பு தொடர்ந்தது. இருளில் தரைவழிப் பயணம் ஆபத்தான நேரத்திலும், வெள்ளப் பகுதிகளின் நிலவரத்தை அறிய உதவின.
ஜி.பி.எஸ் கண்காணிப்பு, நேரலைக் காட்சிகள் மற்றும் சுமைகளை எடுத்துச் செல்லும் வசதி ஆகியவை இந்த நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தன. சாலை அல்லது படகு மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் ட்ரோன்கள் உதவின.
2019ல் பிரதீப் படேல் மற்றும் ஹிதேன் படேல் ஆகியோரால் தொடங்கப்பட்ட பிரைம் யு.ஏ.வி விவசாயம், நில அளவீடு, வரைபடமிடல், உள்கட்டமைப்பு ஆய்வு உள்ளிட்ட துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. கொரோனா காலத்தில் தூய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் ஊரடங்கு கண்காணிப்பிலும், 2020ல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஏற்பட்ட வெட்டுக்கிளித் தாக்குதலின் போதும் இந்த நிறுவனம் ட்ரோன்களைப் பயன்படுத்தியது.
தோல்கா அனுபவம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது, “ட்ரோன்கள் மீட்புப் படையினருக்கு கண்களாகவும், சென்றடைய முடியாத இடங்களுக்கு நீளும் கரங்களாகவும் செயல்பட முடியும்”. பேரிடர் நேரத்தில் தொழில்நுட்பம் மனிதர்களை மாற்றுவதற்காக வரவில்லை. உயிர்களைக் காப்பாற்றப் போராடும் மனிதர்களுக்கு இன்னொரு வலிமையான கரமாக மாறி வருகிறது!

கட்டுரையாளர்:அன்னபூரணி ராஜேஷ்