தயாரிப்பு துறை உற்பத்தி செயல்பாடு: 7 மாதங்களில் இல்லாத அதிகரிப்பு

தயாரிப்பு மற்றும் சேவைகள் துறைகளில் வலுவான தேவையின் காரணமாக, நடப்பு பிப்ரவரி மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி செயல்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு வேகம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவுக்கான ‘பிளாஷ் பி.எம்.ஐ.,’ குறியீட்டை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு என்பது ஒவ்வொரு மாதம் முடிந்த பிறகும் வெளியாகும் பி.எம்.ஐ., குறியீடுகளுக்கு முன்னோட்டமாக, 80 முதல் 90 சதவீத பதில்களின் அடிப்படையில் முன்கூட்டியே வெளியிடப்படும் பி.எம்.ஐ., குறியீடு ஆகும்.

இது குறித்து அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: நடப்பாண்டில் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான எஸ் அண்டு பி., – பி.எம்.ஐ., பிளாஷ் குறியீடு, கடந்த ஜனவரி மாதத்தில் 61.20 புள்ளிகளாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 61.50 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 31 மாதங்களாக இக்குறியீடு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய ஏற்றுமதி ஆர்டர்களும் பிப்ரவரியில் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின், உலகளவில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இதுதவிர, எச்.எஸ்.பி.சி., அதன் சார்பில் பிரத்யேகமாக வெளியிடும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டிலும், நடப்பு பிப்ரவரி மாதத்துக்கான தயாரிப்பு துறையின் உற்பத்தி 56.70 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது ஜனவரியில் 56.50 புள்ளிகளாக இருந்தது. முதற்கட்ட தரவுகளின் அடிப்படையில் சேவைகள் துறைக்கான பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடும், ஜனவரியிலிருந்து 61.80 புள்ளிகளிலிருந்து 62 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. தொழில் துறை உற்பத்தியும் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.