டெல்லி போராட்டம் மாணவன் போர்வையில் மற்றவன்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற போர்வையில், டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது மாணவர்களின் கோபம் திட்டமிட்டு தூண்டப்பட்டு அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டதா? இதுதான் ஆராயப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. அதனைப் பற்றி….

 

டெல்லியில் வெடித்த நீட் தேர்வு சீர்திருத்தப் போராட்டம் காரணமின்றித் தொடங்கியதல்ல. மருத்துவப் படிப்புக்கான 2026 நீட் நுழைவுத் தேர்வுக்காக ஏறக்குறைய இருபது லட்சம் மாணவர்கள் பல ஆண்டுகளாகத் தயாராகியிருந்தனர். பெற்றோர்கள் பெரும் தொகையைச் செலவிட்டிருந்தனர். மாணவர்கள் தங்கள் உழைப்பையும், நேரத்தையும், எதிர்காலக் கனவுகளையும் இந்தத் தேர்வின் மீது வைத்திருந்தனர்.
அப்படிப்பட்ட சூழலில் வினாத்தாள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, இரவு பகலாகப் படித்து அந்தத் தேர்வுக்குத் தயாரான மாணவர்களின் உழைப்பு வீணானது. பெற்றோர்களும், மாணவர்களும் ஆத்திரமடைந்தனர். அவர்களின் இந்தக் கோபம் இயல்பானதே. நாடு முழுவதும் நடக்கும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக ஆனது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், இந்த விஷயம் வெளிவந்தவுடன் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அத்துடன், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், மறுதேர்வு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தேர்வு முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நியாயமான ஒரு மாணவர் போராட்டமாகத் தொடங்கிய நிகழ்வு, விரைவிலேயே வேறொரு திசையில் திருப்பப்பட்டது. தேர்வில் நீதி வேண்டும் என்ற கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் மோதலாக அது மாற்றப்பட்டது.
கரப்பான் பூச்சி இயக்கம்
இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காக்ரோச் ஜனதா பார்ட்டி, அதாவது கரப்பான் பூச்சி இயக்கம் உண்மையில் எப்படித் தொடங்கியது? ஒரு வழக்கின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன ‘கரப்பான் பூச்சிகள்’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு தொடங்கப்பட்டது இந்த இயக்கம். இந்த இயக்கம் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களைப் பற்றி வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட நையாண்டி இணைய இயக்கமே அதன் ஆரம்பம்.
அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே, அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு கற்றுக்கொண்ட ஊடக உத்திகள், விளம்பர வடிவமைப்பு, தகவல் தொடர்பு, இயக்கத்தின் அடையாளத்தை உருவாக்குதல் போன்ற முறைகளைப் பயன்படுத்தியே இந்தப் பிரசாரத்தை அமைத்ததாக அவர் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். ராய்ட்டர்ஸ்,
பி.பி.சி, அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களுடன் தொடர்புகொள்வதற்கும் தனது மக்கள் தொடர்புப் பயிற்சி உதவியதாக திப்கே கூறியுள்ளார்.
தொடங்கிய சில நாட்களிலேயே, இயக்கத்திற்கென தனி இணையதளம் உருவானது. உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வந்தன. கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. “கரப்பான் பூச்சி” சின்னம் இயக்கத்தின் அடையாளமாக மாற்றப்பட்டது. ஒரே மாதிரியான வாசகங்கள், நிறங்கள், படங்கள், காணொளிகள் வழியாக சமூக ஊடகங்களில் திட்டமிட்ட பிரசாரம் நடத்தப்பட்டது.
வெளிநாட்டில் கல்வி கற்றது குற்றமல்ல. ஊடக உத்திகளைப் பயன்படுத்துவதும் தேசத்துரோகம் அல்ல. ஆனால் இவை ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த இயக்கம் திடீரென வெடித்த மாணவர் எழுச்சி மட்டுமல்ல. தொழில்முறை முறையில் கட்டமைக்கப்பட்ட அரசியல் பிரச்சார இயக்கம்.
நீட் தேர்வு உருவாக்கிய மாணவர்களின் கோபம் அதற்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. இந்தப் பிரச்சினை மாணவர்களைச் சார்ந்தது. ஆனால் அதற்குக் கொடுக்கப்பட்ட வடிவம் முழுமையாக அரசியல் சார்ந்தது.
நீட் எப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டது?
நீட் மாணவர்களின் நலனே பிரதான நோக்கமாக இருந்திருந்தால், போராட்டத்தின் கோரிக்கைகள் தெளிவாக இருந்திருக்கும். வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். மறுதேர்வு நேர்மையாக நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்குத் தீர்வு காண வேண்டும். தேசியத் தேர்வு முகமை சீர்திருத்தப்பட வேண்டும். பாதுகாப்பான தேர்வு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நியாயமானவை.
ஆனால் போராட்டத்தின் மையக் கோரிக்கையாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டது. அதன்பின் வேலைவாய்ப்பின்மை, அரசு அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை, இளைஞர்களின் அதிருப்தி, உயிரிழப்புகளுக்கான இழப்பீடு, பிரதமர் மோடி அரசுக்கு எதிரான பரந்த அரசியல் பிரச்சாரம் என்று போராட்டத்தின் எல்லை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளும் இந்த வாய்ப்பை விரைவாகப் பயன்படுத்திக் கொண்டன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. தனியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. நாடாளுமன்றத்திலும் பிரச்சினையை முன்வைத்து, அவைகளை முடக்கி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தின.
இதன் பின்னர் நீட் பிரச்சினை போராட்டத்தின் நோக்கமாக இல்லாமல், அரசுக்கு எதிரான பெரும் அணிதிரட்டலுக்கான காரணமாக மாறியது. ஒரு அமைச்சரை விமர்சிப்பது ஜனநாயக உரிமை. அவர் பதவி விலக வேண்டும் என்று கோருவதும் தவறல்ல. ஆனால் அரசு அறிவிக்கும் விசாரணை, மறுதேர்வு, நிர்வாகச் சீர்திருத்தம் போன்ற அனைத்தையும் நிராகரித்து, ஒரு குறிப்பிட்ட அரசியல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் போராட்டம் நிறுத்தப்படும் என்று கூறும்போது, அங்கு மாணவர்களுக்கான நீதி மட்டும் நோக்கமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
“சலோ சன்சத்”
எல்லை மீறிய பேரணி
ஜூலை 20 அன்று நடத்தப்பட்ட “சலோ சன்சத்” பேரணியே போராட்டத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய திருப்புமுனையாக அமைந்தது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இந்தச் சமயத்தில், நாடாளுமன்றத்தைச் சுற்றிய பகுதி உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்து. இருப்பினும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். பாதுகாப்புத் தடுப்புகளைத் தள்ளினர். தடுப்புகளை மீறி முன்னேற முயன்றபோது காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், தடியடியையும் பயன்படுத்தியது.
பின்னர் காவல்துறை நடவடிக்கையின் படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டன. அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது எந்தத் தூண்டுதலும் இல்லாமல் காவல்துறை தாக்குதல் நடத்தியது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் காவல்துறையின் எதிர்வினையை மட்டும் காட்டிவிட்டு, அதற்கு முன்பு நடந்தவற்றை மறைத்துவிட முடியாது.
டெல்லி காவல்துறையின் படியும், சமூக ஊடகங்களில் வெளியான பல காணொளிகளின் படியும், ஜூலை 20 வன்முறையில் மூத்த அதிகாரிகள், பெண் காவலர்கள் உட்பட 118-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்திருக்கின்றனர். இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. சில போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களையும், பாட்டில்களையும்
வீசியதாகச் செய்திகள் வெளியாகின. காவலர்கள் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கல் வீச்சு, காவல்துறையினர் மீது தாக்குதல், அரசு ஊழியர்களின் பணியைத் தடுத்தல், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கண்காணிப்புக் கேமரா பதிவுகள், ட்ரோன் காட்சிகள், செல்பேசி வீடியோக்கள், சமூக ஊடகப் பதிவுகள் ஆகியவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இப்போது இந்த வழக்கு நீதிமன்றம் சென்றிருக்கின்றது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இறுதி உண்மை தெரியவரும். ஆனால் போராட்டக்காரர்களுக்கு சாதகமில்லை என்பதற்காக இக்குற்றச்சாட்டுகளை முழுவதுமாகப் புறக்கணிக்க முடியாது. தொடர்ந்து தடுப்புகளை உடைக்க முயல்வது, காவல்துறையினரைத் தாக்குவது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, “இவர்கள் மாணவர்கள்” என்ற பெயரில் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. மாணவர்களை அரசியல் அமைப்புகளின் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
வன்முறையால் நீட் மாணவர்களுக்கு என்ன கிடைத்தது?
போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை, நீட் மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா? வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களை அது அடையாளம் காட்டியதா? சிபிஐ விசாரணையை அது விரைவுபடுத்தியதா? தேர்வு முறையை அது பாதுகாப்பானதாக மாற்றியதா? இவற்றில் எதுவும் நடைபெறவில்லை.
ஆனால் தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் ஏராளமான பரபரப்பான காட்சிகள் கிடைத்தன. தடுப்புகள், கண்ணீர்ப்புகை, தடியடி, காயமடைந்தவர்கள், காவல்துறை மோதல்கள் எனப் போராட்டம் ஒரு பெரிய அரசியல் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. ஒரு தேர்வு முறைகேடு பற்றிய பிரச்சினை, சர்வதேச அளவில் பிரதமர் மோடி அரசுக்கு எதிரான இளைஞர் எழுச்சியாகச் சித்தரிக்கப்பட்டது.
அமைதியான விசாரணை, கைது, தேர்வுச் சீர்திருத்தம் போன்ற செய்திகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் தடுப்பை உடைக்கும் காட்சி, கண்ணீர்ப்புகையில் ஓடும் மாணவர், காவல்துறை தடியடி போன்ற காட்சிகள் சில நிமிடங்களில் நாடு முழுவதும் பரவுகின்றன.
இதனைப் போராட்ட அமைப்பாளர்கள் நன்கு அறிந்திருந்தனர். நாடளுமன்றம் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் என்று தெரிந்தும் அவர்கள் பேரணியை நடத்தினர். பின்னர் எதிர்பார்த்த மோதல் நிகழ்ந்ததும், அந்தக் காட்சிகளே இயக்கத்தின் மிகச் சக்திவாய்ந்த பிரச்சார ஆயுதமாக மாற்றப்பட்டன.
வெளிநாட்டுத் தொடர்புகள்: கேள்விகள் ஏராளம்
இந்தப் போராட்டம் சில தவிர்க்க முடியாத கேள்விகளை எழுப்புகிறது. காக்ரோச் இயக்கத்தின் இணையதளத்திற்கு பணம் செலுத்தியது யார்? சமூக ஊடகப் பிரச்சாரத்திற்கான செலவுகளை ஏற்றது யார்? பேரணி, மேடை, வாகனம், பயணம், தங்குமிடம், சட்ட உதவி ஆகியவற்றுக்கான நிதி எங்கிருந்து வந்தது? போராட்டத்தின் போது மாணவர்களுக்கு உணவு அளிப்பதற்கான பணம் கத்தார் நாட்டிலிருந்து வந்ததாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். இது எப்படி நடந்தது?
பாரதத்திற்கு வெளியே வாழும் நபர்களிடமிருந்தோ, அமைப்புகளிடமிருந்தோ நிதி கிடைத்ததா? வெளிநாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள் தன்னிச்சையானவையா? அல்லது பாரதத்தில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டவையா? சமூக ஊடகங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சி இயற்கையானதா? அல்லது தொழில்முறை பிரச்சார அமைப்புகளின் உதவி இருந்ததா?
இக்கேள்விகளுக்கு இயக்கம் வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும். முழுமையான நிதி வெளிப்படைத்தன்மையை வலியுறுத்த வேண்டும். இயக்கத்தின் வரவு செலவு கணக்குகள் வெளியிடப்பட வேண்டும். வெளிநாட்டு நிதி வந்திருந்தால், அதன் பணப்பாதை விசாரிக்கப்பட வேண்டும். சட்டவிரோத நிதி கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முகமூடிகள் கிழிகின்றன
டெல்லி நீட் போராட்டம் உண்மையான ஒரு பிரச்சினையிலிருந்தே தொடங்கியது. மாணவர்களின் கோபம் நியாயமானது. வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் இயக்கம், அந்த ஆரம்பக் கோரிக்கையிலிருந்து வெகுதூரம் விலகிவிட்டது. தொழில்முறையாக வடிவமைக்கப்பட்ட இணைய இயக்கம் நீட் பிரச்சினையைக் கைப்பற்றியது. அரசியல் கோரிக்கைகளை விரிவுபடுத்தியது. எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. அனுமதியின்றி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தியது. பின்னர் வன்முறை, காவல்துறை தாக்குதல், பொதுச் சொத்துச் சேதம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக மாறியது.
போராட்டம் என்ற பெயரில் பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் இறைவனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி, நமது தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. “ஆசாதி” போன்ற கோஷங்கள் எழுப்பி காஷ்மீருக்கு எதிராகவும், ஆர்டிகல் 370வை நீக்க வலியுறுத்திய கோரிக்கை ஏன் இடம் பெற்றது? வன்முறையைத் திட்டமிட்டவர்கள், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள், காவலர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள், மாணவர்களை அரசியல் குழப்பத்திற்கான கருவிகளாகப் பயன்படுத்தியவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஒரு ஜனநாயக அரசு மாணவர்களின் குரலைக் கேட்க வேண்டும். ஆனால் மாணவர்களின் பின்னால் மறைந்து அரசியல் நடத்துபவர்களிடம் சரணடைய வேண்டியதில்லை.

கட்டுரையாளர்:  டி.எஸ். கிருஷ்ணன்