ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, சண்முகவேல் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
ராஜாமணி -− வள்ளியம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார், சண்முகவேல் ஜி. உடன் பிறந்தவர்கள் இரு தங்கைகள். தந்தை கூலி வேலை செய்து, குடும்பத்தை கவனித்துக் கொண்டார். 1974 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எஸ்.ஏ.வி உயர்நிலைப்பள்ளியில், சண்முகவேல் ஜி எஸ்.எஸ்.எல்.சி படிப்பை படித்தார்.
1977 ஆம் வருடம் தூத்துக்குடிக்கு, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வருகை புரிந்தார்கள். ஸ்வாமிகளை காண இரவு அங்கு சென்றார், சண்முகவேல் ஜி. அப்போது அங்கே பேசிக் கொண்டு இருந்தவர்களின் பேச்சு பிடித்திருந்ததால், அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்கள் சங்க ஸ்வயம்சேவகர்கள் மற்றும் ஜனசங்கத்தினர். அவர்களில் நகர் கார்யவாஹ் திருவேங்கட நாராயணன் ஜி, தினசரி காலை நடைபெறும் சங்க ஷாகாவிற்கு வரும்படி அழைத்தார். இப்படித்தான் சண்முகவேல் ஜிக்கு, சங்க அறிமுகம் கிடைத்தது.
தூத்துக்குடிக்கு இராமகோபாலன் ஜி, பாஸ்கரராவ் ஜி, தற்போது திருச்சி கார்யாலயத்தில் இருக்கும் ஸ்ரீகணேஷ் ஜி வருவார்கள். இவர்கள் மூவரும் வரும்போது, கார்யாலத்திற்கு வந்து அவர்களிடம் மணிக்கணக்கில் பேசி, எமர்ஜென்ஸி நேரத்தில் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும், சங்கத்திற்கும் ஏற்பட்ட துயரங்கள் போன்ற பல விபரங்கள் அறிந்து கொள்வார். பாஸ்கரராவ் ஜி, தனியே இருக்கும்போது சங்க கோஷ் ஸ்வரங்களின் ரஸனாவை முணுமுணுத்துக் கொண்டு இருப்பார். வாத்தியக் கருவிகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவார்.
அப்போது தூத்துக்குடி ஜில்லா ப்ரச்சாரக்காக இருந்த சண்முக சுடலையாண்டி ஜி, ஷாகா ஆரம்பிப்பதற்கு முன்னதாக வந்துவிட்டால், சங்கஸ்தானை சுத்தம் செய்து, த்வஜ மண்டல் அமைத்து வட்டம் போட்டு ஓம் எழுதி வைத்திருப்பார், பல நல்ல விஷயங்களை கற்றுத் தருவார்.
1983 ஆம் ஆண்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிலஅளவையர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டதால், அரசுப்பணி கிடைத்து, திறம்பட பணி செய்து மேல்அதிகாரிகளிடம் நற்பெயர் பெற்றார். நில அளவைப்பணியில், மூன்று மாதங்கள் ஒரு கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும். தங்கி இருந்த கிராமங்களில் ஷாகா நடத்தி, ஊர் பெரியவர்களிடம் சங்கத்தை அறிமுகப்படுத்துவார்.
திருச்செந்தூருக்கு மாறுதலான நேரத்தில், ராமர் கோயிலுக்கு செங்கல் அனுப்பும் நிகழ்வு நடந்து கொண்டு இருந்தது. நிறைய கார்யகர்த்தர்களுடன் இணைந்து, அந்தப் பணியை வெற்றிகரமாக செய்ய முடித்தார்.
ஸ்ரீ கந்தசஷ்டி விழா நேரத்தில், ஆறு நாட்களும் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும், குழுவாகச் சென்று, மக்களிடம் சங்கத்தைப் பற்றிப் பேசுவார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்தெல்லாம் தமிழர்கள் வருவார்கள். அவர்களிடம் சங்கத்தைப் பற்றி கூறும்போது, மிகவும் ஆவலாக கேட்பார்கள். இதை முன்நின்று நடத்தியது, காயாமொழி சுப்பிரமணிய ஆதித்தன் ஜி.
பின் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டு மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுகா தனி தாசில்தார் அலுவலகத்தில் பணி. அருகில் உள்ள அன்னூர் குமாரபாளையம் கிராமத்தில் தங்கி, ஷாகா நடத்தினார். இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள அன்னூருக்கு, ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் சென்று, பெருமாள் கோயிலில் உள்ள ஆசிரமத்தில் தங்கி, ஞாயிறு காலை ஷாரீரிக் வர்கவை பத்மகுமார் ஜி நடத்துவார்.
அனைவரும் காலை ஜந்து மணிக்கு எழுந்து, சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் இறைத்து, முகம் கழுவ வேண்டும். அனைவருக்கும் தண்ணீரை இறைக்க நீண்ட நேரமாகும் என்பதால், பத்மகுமார் ஜி அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, மற்றவர்கள் கை, கால், முகம் கழுவ ஏதுவாக, இரண்டு தொட்டிகளில் நீர் இறைத்து வைத்திருப்பார்.
அப்போது கோவையில் 108 யானைகளைக் கொண்டு, கஜபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 22 ஸ்வயம்சேவகர்கள் ப்ரபந்தக்காக கலந்து கொண்டார்கள், அதில் சண்முகவேல் ஜியும் ஒருவர்.
அன்னூரில் ஸ்வயம்சேவகர்கள் அனைவரும் சேர்ந்து, சங்கவிழா ஒன்று நடத்தினார்கள். முன்னதாக அனைவரும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, விழாவிற்கு வர அழைப்பு விடுத்தனர், கிராம மக்கள் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வந்தனர்.
அந்த ஊரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், ஜில்லா ப்ரச்சாரக் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மண்டபத்தில் குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர, வேறு யாருக்கும் உள்ளே போக அனுமதி இல்லை. பல சமுதாயத்தையும் சேர்ந்தவர்களாக சங்க ஸ்வயம்சேவகர்கள் இருந்ததால், அங்குள்ள இளைஞர்கள் மற்றும் ஸ்வயம்சேவகர்கள் சேர்ந்து உணவு தயார் செய்து, மண்டபத்திற்கு அழைத்து அவர்களே பரிமாறி மகிழ்ந்தார்கள்.
வேலை செய்யும் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், சங்கப் பாடலை பாடுவார், சண்முகவேல் ஜி. யாரையும் காத்திருக்க வைக்கக்கூடாது என்ற நோக்கில், குறித்த நேரத்தில் பணிக்கு வந்து விடுவார். கிராமத்திற்கு சென்றால் எல்லோரும் தங்கள் வாட்சை பார்ப்பார்கள். அரசுப்பணியில் இருந்து, 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
1990 ஆம் ஆண்டு, அப்போதைய ஜில்லா சங்கசாலக் டாக்டர் சந்திரபோஸ் அவர்கள் தலைமை தாங்க அமுதா என்பவருடன் திருமணம் நடந்தது. சந்தோஷ் ராஜவேல், ஸ்ரீ நந்தகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்தோஷ் ராஜவேல் பி.டெக் முடித்து, பெங்களூரில் ஜ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளைய மகன் ஸ்ரீ நந்தகுமார், மரைன் இஞ்சினியரிங் முடித்து, கப்பலில் மெக்கானிகல் இஞ்சினியராக பணிபுரிகிறார்.
எங்கெல்லாம் பணி மாற்றம் செய்யப்படுகிறதோ, அங்கு ஷாகா தொடங்கி, சங்க வேலையை விரிவுபடுத்திய சண்முகவேல் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
அ.ஓம்பிரகாஷ்