சில பயணங்கள்… சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்…

குறிப்பு: ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ என்பது என்னுடைய வாழ்க்கையை விவரிக்கும் நூல். அதில் விட்டுப் போன விஷயங்களை, இந்தத் தொடரில் சொல்வதாக இருக்கிறேன். இதனுடைய நடை கால வரிசைப்படி இருக்காது. நியாய வரிசைப்படி இருக்கும். அதாவது கருத்தோட்டமாக கொஞ்சம் முன்னே பின்னே.

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி

தென்சென்னை தி.நகரில் உள்ள சபரியின் ஓட்டல். சென்னை வந்திருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பரமபூஜனீய பாளாசாஹேப் தேவரஸை, தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கு முன்னர் தேநீர் விருந்து. அந்த விருந்துக்கான ஏற்பாடுகளை நான் செய்து கொண்டிருந்தேன். அந்தக் கூட்டத்தில் துக்ளக் ஆசிரியர் திரு சோ ராமசாமி இருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் மற்றவர்களை விலக்கிக் கொண்டு, என்னை நோக்கி வந்தார்.
“நீங்க தானே சுப்பு என்றார்.
ஆமாம் சார் எப்படி கண்டுபிடிச்சீங்க”
“அதான் உங்க புத்தகத்திலேயே போட்டோ போட்டு இருக்கீங்களே” என்றார்.
திராவிட மாயை – ஒரு பார்வை முதல் பகுதி
வெளிவந்தபோது, இரண்டு பிரதிகளை துக்ளக் அலுவலகத்தில் திரு. சோவிடம் கொடுத்து வந்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்தது மட்டுமல்லாமல் அட்டைப் படத்தில் இருக்கிற புகைப்படத்தை வைத்து, என்னை அடையாளம் கண்டு கொண்டது சோ சாரின் அபூர்வமான அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டு. திராவிட மாயையின் அடுத்த பகுதியை துக்ளக்கில் எழுத முடியுமா? என்று அவர் கேட்டார். ஏற்கனவே ஒருவர் முதல் பகுதியை வெளியிட்டு இருந்தார். அடுத்த பகுதியை இன்னொருவரிடத்தில் கொடுத்தால், அதில் ஏதாவது சட்டச் சிக்கல் வருமா? என்பது என் மூளையில் எழுந்த கேள்வி. பதிப்பாளரைக் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லி விட்டேன்.
வீட்டுக்கு வந்து பதிப்பாளரிடம் அலைபேசியில் பேசினேன். நடந்ததை கேட்டுக் கொண்ட அவருக்கு கோபம் வந்துவிட்டது.
எவ்ளோ பெரிய ஆள் சோ சார். நீங்க அவர் கேட்டவுடனே சரின்னு சொல்லி இருக்கணும். தப்பு பண்ணிட்டீங்க என்றார்.
இப்ப நான் என்ன செய்யணும்.
நாளைக்கே போய் அவரை பாருங்க, துக்ளக்கில் எழுதுங்க என்றார் பதிப்பாளர்.
அது ஒரு நல்ல தொடக்கம். வெகுஜன ஊடகங்களில் அதிகம் அறியப்படாமல் இருந்த என்னை, துக்ளக் இதழில் நான் எழுதிய – திராவிட மாயை ஒரு பார்வை இரண்டாம் பகுதி தொடர்தான் என்னை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. சோ சாருக்கு நன்றி. கருத்து நம்முடையது என்றாலும், அதை உலகில் காட்டுவித்தவர் அவர் அல்லவா.
வழமையாக தமிழ் இதழ்களில் எழுதுபவர்கள் பயன்படுத்தும் ஒரு முறையைத்தான் நானும் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு பிரபலமான ஆளுமையைப் பற்றி எழுதினால், அது வாசகரை கவரும் என்பதால் தொடக்கத்தில் “சோ” என்கிற ஆளுமையைப் பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால் இந்தத் தொடர் முழுவதும், அப்படி செய்ய முடியாது. சாதாரண நிலையில் இருக்கும் எத்தனையோ மனிதர்கள் அசாதாரணமான திறமையோடும், நேர்மையோடும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதணும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இந்தப் பட்டியலில் இந்த வாரம் சாரதா.
என்னுடைய முதல் தோழமை சாரதாவோடு. ‘வாரியங்காவல்’ என்ற கிராமத்தில், நான் ஆரம்பப்பள்ளிக்குப் போகும் போது என்னை அழைத்துப் போவதும், பிறகு பள்ளியில் இருந்து அழைத்து வருவதும் சாரதாவின் பொறுப்பு. சாரதா என்னுடைய அத்தை மகள். வயதில் மூத்தவள். அறிவில் இன்னும் கூட.
இரண்டாம் வகுப்பில் என்னுடைய ஆசிரியர் அண்ணாமலை. அப்போதெல்லாம் ஒரு வகுப்புக்கு, ஒரே ஆசிரியர். எல்லா பாடங்களையும் அவரே சொல்லித் தருவார். அண்ணாமலையின் விசேஷம் அவர் எப்போதும் பிரம்போடுதான் காட்சி தருவார். ஏதோ சில காரணங்களால் அண்ணாமலைக்கு என்னைப் பிடிக்காது. காலையில் வகுப்பு தொடங்கியவுடன் முதல் வேலையாக என்னைக் குறிவைப்பார்.
“என்னடா சாப்பிட்ட. வீட்ல என்னடா சமையல்” என்று கேட்பார்.
என்னிடமிருந்து உடனடியாக பதில் வராது. என்னைப் பொருத்தவரை என்னுடைய மூன்று வேலை உணவுத் திட்டமும் ஒன்றுதான். அது தயிர் சாதமும், அச்சு வெல்லமும். சமையற்கட்டில் எது தயாரிக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் என்னிடம் இருக்காது. இதை எப்படி அண்ணாமலை சாரிடம் சொல்வது. இரண்டு முறை கேட்டுப் பார்த்துவிட்டு, அண்ணாமலை அடுத்த பையன் மீது பாய்வார்.
இப்படிப்பட்ட சூழலில் பள்ளிக்குப் போவது என்பதே எனக்கு உதறலாக இருக்கும். நான் ஏதோ கலக்கத்தில் இருக்கிறேன் என்பதை சாரதா யூகித்துவிட்டாள்.
“என்னடா பிரச்சினை”
“ஸ்கூலுக்கு போனா அண்ணாமலை அடிப்பாரு”
“ஏன் அடிக்கிறாரு”
அண்ணாமலையின் அன்றாட கேள்விகளை பற்றி சாரதாவிடம் சொன்னேன்.
“கத்திரிக்காய் கறி, வெண்டைக்காய் சாம்பார் அப்படின்னு சொல்லிடு”
“நாளைக்கு கேட்டா”
“வெண்டைக்காய் கறி, கத்திரிக்காய் சாம்பார் அப்படின்னு சொல்லிடு”
சாரதாவின் தயாரிப்புப்படி இரண்டு முறை அண்ணாமலையிடம் பதில் சொல்லிவிட்டேன். மூன்றாவது முறை அவர் என்னை நம்பத் தயாராக இல்லை.
“என்னடா மாத்தி மாத்தி சொல்ற” என்று உறுமியபடியே, தன் கையில் இருந்த பிரம்பால் என் பின்பக்கத்தைப் பதம் பார்த்தார்.
இந்த இடத்தில் ஒரு ராணுவ ரகசியத்தை நான் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். இரண்டு நாட்களாக என்னுடைய பின்பக்கத்தில் ஒரு கட்டி புறப்பட்டு, என்னை தொல்லை செய்து கொண்டிருந்தது. வீட்டில் சொன்னால் ஏதாவது வைத்தியம் செய்து விடுவார்கள் என்று பயந்து, அதை சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன். அண்ணாமலையின் பிரம்பு கட்டியைப் பிய்த்து விட்டது. கட்டி உடைந்து டவுசர் எல்லாம் ரத்தம், கால் எல்லாம் ரத்தம்.
அண்ணாமலை பயந்துவிட்டார். “ஏன்டா அங்க ஏதாவது காயம் இருந்ததா” என்று கேட்டார்.
“இல்லை சார் நீங்க தான் அடிச்சி என் கு…. யை கிழிச்சிட்டீங்க. இருங்க எங்க அப்பாவ கூட்டிட்டு வரேன்” என்று சொல்லியபடியே பெஞ்சுகளை தாண்டி குதித்து வீட்டிற்கு ஓடினேன்.
வீட்டில் என் தாயாருக்கு எந்தக் கலவரமும் ஏற்படவில்லை. டவுசரை கழட்டிப் பார்த்து சோதனை செய்துவிட்டு கட்டியை மறைத்து வைத்ததற்காக ஒரு குட்டு குட்டினார். மருந்து போட்டு மாற்று உடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
திரும்பி வந்தால் வகுப்பறையில் அசாதாரணமான சூழ்நிலை. அண்ணாமலைக்கும், என்னுடைய தகப்பனாருக்கும் நடக்கப் போகும் யுத்தத்திற்காக மாணவர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். பக்கத்தில் இருந்த சோமு “உங்க அப்பா வராராடா” என்று கேட்டான்.
“இல்லடா. அப்பா வர மாட்டாரு. அம்மா என்னதான் திட்டினார்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் சோமு எழுந்து” சார் அவங்க அப்பா வரமாட்டாராம் சார், வரமாட்டாராம் சார்.” என்று கத்தி விட்டான்.
அண்ணாமலை நிம்மதி அடைந்தார். நான் துக்கமடைந்தேன்.
சாயங்காலம் வீட்டிற்கு திரும்பி போகும் வழியில், ஏதேதோ சொல்லி சாரதா என் துக்கத்தை அகற்றி விட்டாள். ஐந்தாம் வகுப்பு வரை தான் நான் கிராமத்தில் இருந்தேன். அந்த காலத்தில் சாரதாவின் உறவு எனக்கு அரணாக இருந்தது…
பதினைந்து வருடங்கள் கழித்து, சென்னையில் நான் ஒரு முரட்டு இளைஞனாக திரிந்த போது, சாரதா சென்னைக்கு வந்தாள். மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்வதற்காக அவளை அழைத்து வந்திருந்தார்கள்.
இந்த முறையும் அவளுடைய அன்பிலும், ஆளுமையிலும் எந்தக் குறைவும் இல்லை. நானும், என்னுடைய நண்பர்களும் வேலையில்லாத வாலிபர்கள். சாரதா கோ-ஆப்-டெக்ஸில் வேலைக்கு போய்க்கொண்டிருந்தாள். எங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்கு நாங்கள் அவளிடம் தான் கை நீட்ட வேண்டும்.
“நீங்க உருப்பட மாட்டீங்க” என்று சொல்லிக் கொண்டு காசு கொடுத்து விடுவாள்.
வேண்டியவன், வேண்டாதவன், இவன் நம்ம பாஷைக்காரன் கருப்பு – சிவப்பு என்கிற பேதமெல்லாம் மனிதர்களுக்குத்தான். சாரதாக்களுக்கு இல்லை. வாழ்வின் மாலை நேரத்தில் மடிப்பாக்கத்தில் இருக்கும் சாரதாவை ஒருமுறை பார்க்க வேண்டும்.

எழுத்தாளர் : சுப்பு

தொடரும்…