மு ன்பெல்லாம் கிராமங்களில் குடிநீர் கொண்டு வர பல மைல் தூரம் பெண்கள் நடந்து செல்வதுண்டு. பொழுது புலர்வதற்கு முன்பாகவே தலையிலும், இடுப்பிலும் குடங்களை ஏந்தியபடி பெண்கள் செல்வது வாடிக்கை. குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் குடிநீரைக் கொண்டு வர நெடுந்தொலைவு பெண்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இது அவர்களுக்கு உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, தாய்மார்கள் தண்ணீர் கொண்டு வர நெடுந்தொலைவு நடக்கக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின பேருரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி `ஜல்ஜீவன்’ திட்டத்தை அறிவித்தார். இந்த `ஜல்ஜீவன்’ திட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிறைவேற்றி வருகிறது. அரசியல் சாசனத்தில் தண்ணீர் மாநில அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இத்திட்டத்துக்காக ரூ.2,08,652 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களின் குடிநீர் சார்ந்த கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இதற்கு முன் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டதே இல்லை. குழாயை வீடுகளில் பொருத்துவதுடன் மட்டும் நின்று விடக்கூடாது. தினந்தோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தூய்மையான 55 லிட்டர் தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் முன்னெடுப்பு பாரதத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, 2019 வரையிலான 7 தசாப்தங்களில் பாரதம் முழுவதும் கிராமங்களில் உள்ள 3.23 கோடி வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 2025ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 15.72 கோடி வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்படுகிறது. பாரதத்தில் மொத்தம் 19.36 கோடி வீடுகள் கிராமங்களில் உள்ளன. இப்போது 81 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு, குழாய் வழியே குடிநீர் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி இத்திட்டத்தை அறிவித்த காலத்திலிருந்து, இதுவரையிலான காலகட்டத்தில் சுமார் 4 மடங்கு இணைப்புகள் அதிகரித்துள்ளது. கோவா, ஹரியானா, குஜராத், அருணாச்சலப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே தண்ணீர் அளிக்கப்படுகிறது. 9,23,297 பள்ளிக்கூடங்களுக்கும், 9,66,876 அங்கன்வாடி மையங்களுக்கும் குழாய் வழியே குடிநீர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் `ஜல்ஜீவன்’ திட்டம் குறித்து ஆய்வு நடத்தியது. இதன் வாயிலாக தினந்தோறும் 5.5 கோடி மணி நேரம் சேமிக்கப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தை பெண்கள் பயனுள்ள வழியில் பயன்படுத்த முடியும். முன்பெல்லாம் காலாரா போன்ற நோய்களால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். குழாய் வழியே தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், இத்தகைய நோய்களுக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் மாசடைந்த குடிநீர் காரணமாக உயிரிழப்பது அதிகரித்து வந்தது. இப்போது இதற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
பெங்களூர் ஐ.ஐ.எம். இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பு குறித்து ஆய்வு நடத்தியது. `59.9 லட்சம் மனித ஆண்டு’ நேரடி வேலைவாய்ப்பும், `2.2 கோடி மனித ஆண்டு’ மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றும் பணியில், 13.3 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
குடிநீர் கட்டமைப்பு என்பது பொருளாதாரத்தையே உயர்த்தக் கூடியது. மழை நீர் சேரிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ள 148 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்குள்ள நீர்நிலைகளை மேம்படுத்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் நிலைகளை நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வன வளம் பெருகினால் தான், மலை வளம் அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப வனப்பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஒரு சில கிராமங்களில் இத்திட்டம் வாயிலாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முன்னுதாரணங்களாக விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக மஹாராஷ்ட்ராவில் உள்ள மபன் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் குழாய் வழி நீர் வழங்கும் திட்டத்தை நிர்வகித்து வருகின்றனர். கட்டண வசூலிப்பையும் இக்குழுவினரே கவனிக்கின்றனர். அஸ்ஸாமில் உள்ள போர்போரி கிராமத்தில் நீர்வழி வியாதிகளால் 2022 – 23ல் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இப்போது பாதிப்பு முற்றிலுமாக நீங்கிவிட்டது.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி