மறுபடியும் அரியணையில் பழைய சாதம்

புரோபயாட்டிக் பானங்கள், குடல் நலன் சார்ந்த கூடுதல் ஊட்டச்சத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இன்றைய நாட்களில், பழைய சாதம் என்பது மலிவான, பாரம்பரியமான, சிறந்த மாற்று. காலத்தால் சோதிக்கப்பட்ட இந்த பழக்கங்களுக்கு, நாம் மீண்டும் திரும்புவோம். அதனால், நமது உணவுப் பாரம்பரியத்தை மதிப்பவர்கள் ஆவோம். அது மட்டுமல்லாமல், எதிர்கால நலனுக்காக புத்திசாலித்தனமான / நிலைத்த தேர்வு நம் கைவசமாகிறது.
பல நூற்றாண்டுகளாக (மேற்கத்திய தாக்கங்கள் நமது வாழ்க்கையில் நுழையத் தொடங்கிய காலத்திற்கு முன்பே), ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மரபுகள், உணவை வெறும் சக்தி அளிக்கும் பொருளாக அல்லாமல், நோய்களைத் தடுக்கும் / குணப்படுத்தும் ஒரு வழியாகக் கருதுகின்றன. பாரம்பரிய உணவாக “நீராகாரம்” (பழைய சாதத் தண்ணீர்) குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இது நீராகாரம், நிசிநீர், நீச்ச தண்ணி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது; ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் “பகாலா” ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி “சர்வதேச பகாலா தினம்” (International Pakhala Day) எனக் கொண்டாடப்படுகிறது மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் “பாண்டா பாத்”, கேரளாவில் “பழம் கஞ்சி” எனவும் அறியப்படுகிறது. ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலும், இந்தப் பானம் பல்வேறு உள்ளூர் பெயர்களில் பிரபலமாக உள்ளது.
அடிப்படையில், புளித்த சாதம் என்பது சமைத்த சாதத்தை தண்ணீரில் ஊற வைத்து, அறை வெப்பநிலையில் ஒரு இரவு முழுவதும் வைப்பதுதான். ஆனால், அந்த அமைதியான சில மணிநேரங்களில் நடப்பது, இதை அமிர்தமாக்கி விடுகிறது. சாதாரண மீதிச் சாப்பாட்டிலிருந்து, ஒரு சக்திவாய்ந்த சத்துணவாக மாறுவது “நொதித்தல்” எனப்படும் எளிய / அமைதியான செயல்முறையின் மூலம் தான். சமைத்த சாதத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தால், தானியத்தில் இயற்கையாக உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் Anti-nutrients – (எதிர்ச்சத்துக்கள்) உடலில் சத்துகள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கும் பொருட்களில் செயல்படத் தொடங்குகின்றன. இவை அனைத்தும் குடல் நலனுக்கு உகந்த நல்ல நுண்ணுயிரிகள் ஆகும்.
புளித்த சாதம், தயாரிப்பில் சிக்கல் இல்லை; மாறாக, “நொதித்தல்” எனப்படும் இயற்கை முறையில் தயாராகி விடுகிறது. இந்த செயல்முறையை உணவின் ஊட்டச்சத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்த நாம் பயன்படுத்தி வருகிறோம். காலையிலேயே, இந்த சாதம் உயிருடன் உள்ள புரோபயாட்டிக் சத்து நிரம்பி, சாதாரணமாக தானியத்தில் அடைக்கப்பட்டிருக்கும் இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் அதிக அளவில் கிடைக்கக்கூடியதாக மாறுகிறது. இந்த செயல்முறை, சாதத்தில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை உடைத்ததால், அதை எளிதாக செரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான குடல் நமக்கு சௌகரியமான உணர்வை மட்டும் அளிக்காமல், குடல் / மூளை தொடர்பு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும், மனநிலையையும் மேம்படுத்துகிறது. இதோ ஒரு ஒப்பீடு. 10–12 மணி நேரம் புளிக்க வைக்கப்பட்ட சாதம், புளிக்காத சாதம் ஆகியவற்றின் தாதுச் சத்து அளவுகளை காண்போம்.(அரிசி அளவு, தண்ணீர் அளவு, ஊறிய நேரம் மற்றும் சூழல் வெப்பநிலை அனைத்தும் ஒரே மாதிரி):
இரும்புச்சத்து (Iron): 91 mg vs 3.4 mg
கால்சியம் (Calcium): 850 mg vs 21 mg
பொட்டாசியம் (Potassium): புளித்த பிறகு 839 mg ஆக அதிகரிக்கிறது
சோடியம் (Sodium): 303 mg vs 475 mg (குறைந்த சோடியம் நல்லது)
புளித்த சாதத்தில் “லாக்டிக் அமில பாக்டீரியா” மற்றும் ப்ரோபயாட்டிக்ஸ் நிறைந்துள்ளன. இவை குடல் நன்மை பாக்டீரியாவை அதிகரித்து, வயிற்றுப் புடைப்பை குறைத்து, ஜீரணத்தை மேம்படுத்துகின்றன. இவை கொழுப்புச் சத்தைக் (cholesterol) குறைக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும், மேலும் குடலின் அலைபோன்ற சுருக்கம்- விரிவாக்க இயக்கமான பெரிஸ்டால்சிஸ் (peristalsis) செயல்பாட்டை மேம்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன; இதன் மூலம், உணவு எளிதாக முன்னோக்கி நகர உதவுகிறது. இது வைட்டமின் B12, பிற B-குழு வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இவை சோர்வை குறைக்கவும், சைவம்/வெகன் உணவாளர்களுக்கு மிகவும் அவசியமானவை.
பழைய சாதம் கோடை உணவு
உடலை குளிர்விக்கும் இயற்கை உணவு: பாரம்பரியமாக உடல் சூட்டை குறைக்கப் பயன்படுகிறது. வயிற்றுப் புண்களைத் தடுக்கவும் உதவுகிறது. கோடைகாலத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: இதை வழக்கமாக சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, தொற்றுகளை எதிர்க்க உதவுகிறது. சரும / முடி ஆரோக்கியம் மேம்படும்: இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் சத்துக்கள் தோல் ஆரோக்கியத்தையும், மொத்த நலத்தையும் மேம்படுத்துகின்றன. நீண்டகால நோய்களை கட்டுப்படுத்த உதவும்: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், அழற்சியை குறைக்கவும், குடல் தொடர்பான பிரச்சினைகள் (IBS போன்றவை) குறையவும் உதவக்கூடும்.