டெல்லியின் காற்று மாசைக் கட்டுப்படுத்தவும், வறட்சியை எதிர்கொள்ளவும் பேசப்படும் ‘மேக விதைப்பு’ (Cloud Seeding) என்ற தொழில்நுட்பத்துக்கு, பல தசாப்தங்களுக்கு முன்பே பரிசோதனை செய்த பாரதியர், ஒரு வங்காள விஞ்ஞானி. ஹைட்ரஜன் பலூன்களை வானில் செலுத்தி, மேகங்களைத் தூண்டி மழையைப் பொழியச் செய்ய முடியுமா என்று ஆராய்ந்தவர், டாக்டர் சுதாங்ஷு குமார் பானர்ஜி.
பாரத வானிலை ஆய்வுத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநரான பானர்ஜியின் கனவு எளிமையானது: “மழைக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, மழையைத் தூண்ட முடியாதா?”
பிரசிடென்சி கல்லூரி மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்ற பானர்ஜி, பின்னர் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் இயற்பியலாளர் சி.வி. ராமனின் முதல் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றினார். அங்கு கிடைத்த பரிசோதனை அனுபவம், பின்னாளில் அவரது மழை ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
1940-களின் இறுதியில் அமெரிக்காவில் மேக விதைப்பு குறித்த ஆய்வுகள் வேகமெடுத்தன. மேகங்களுக்குள் குறிப்பிட்ட துகள்களைச் செலுத்துவதன் மூலம், மழைப்பொழிவைத் தூண்ட முடியும் என்ற கருத்து அப்போது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
1950-களின் தொடக்கத்தில் அமெரிக்கா சென்ற பானர்ஜி, அங்கிருந்த சோதனைகளை ஆராய்ந்தார். ஆனால் பாரதத்துக்குத் திரும்பியபோது, விலை உயர்ந்த விமானங்கள் இல்லாமல் குறைந்த செலவில் இதைச் செய்ய முடியுமா? என்ற கேள்வியுடன் பரிசோதனைகளைத் தொடங்கினார்.
ஜாதவ்பூரில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உயரமான கண்ணாடி மேக அறையை உருவாக்கி, சுமார் இரண்டு ஆண்டுகள் சோதனைகள் நடத்தினார். சில்வர் அயோடைடு, உலர் பனிக்கட்டி, உப்பு உள்ளிட்ட பொருட்களை விதைப்புப் பொருள்களாகப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் வந்தது அவரது சுவாரஸ்யமான முயற்சி.
1952-ல் ஹைட்ரஜன் பலூன்களில் விதைப்புப் பொருட்களை ஏற்றி கொல்கத்தா வானத்தை நோக்கி அனுப்பினார். மேகங்களை அடைந்ததும் அந்தப் பொருட்களை வெளியிடும் வகையில் சிறிய கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. பலமுறை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மழைப்பொழிவுக்கான சாதகமான முடிவுகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முயற்சிகளால் சக விஞ்ஞானிகள் இடையே அவருக்கு ‘மேக் பானர்ஜி’ என்ற செல்லப்பெயர் கிடைத்தது. ‘மேகம் அல்லது மழையை வரவழைப்பவர்’ என்ற பொருளில் இந்தப் பெயர் அவருடன் வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டது. போதிய நிதியின்றியும், பல்வேறு விமர்சனங்களுக்கு இடையிலும் அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அவரது முயற்சிகள் பாரதத்தில் மழை மற்றும் மேக இயற்பியல் ஆராய்ச்சிக்கு, மேலும் முக்கியத்துவம் கிடைக்க வழிவகுத்தன.
பல ஆண்டுகளுக்குப் பிறகும் கருவிகள் மாறியிருக்கலாம், ஆனால் கேள்வி மாறவில்லை, மேகங்களைத் தூண்டி மழையை வரவழைக்க முடியுமா? அந்தக் கேள்வியை பாரத வானில் துணிச்சலுடன் சோதித்த முன்னோடிகளில் ஒருவராக பானர்ஜியின் பெயர் என்றும் நினைவில் நிற்கும்.
கட்டுரையாளர்: அன்னபூரணி ராஜேஷ்